ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

இளம் நண்பருக்கு எழுதிய கடிதங்கள்

தமிழில் : S. ராஜேஸ்வரி

ஜே. கிருஷ்ணமூர்த்தி இளம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள்

1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட முறையில் உரையாடியும், கடிதங்கள் மூலமாகவும், கிருஷ்ணாஜியுடனான அவர்களின் உறவு மலர்ந்து விரிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் காயப்பட்டத் துயருடன், தன்னிடம் வந்த இளம் நண்பர் ஒருவருக்கு கிருஷ்ணாஜி எழுதிய கடிதங்களே இந்நூலில் வெளியிடப் பட்டுள்ளது.
ஜூன் 1948-லிருந்து மார்ச் 1960-க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கடிதங்கள் எழுதப்பட்டன. இக் கடிதங்கள் அவரின் கடல் போன்ற கருணையையும் தெளிந்த சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன; மேலும் அவரின் போதனைகளையும் நலமாக்கும் சித்தியையும் அவை தெரியப்படுத்துகின்றன; இங்கு பிரிவும் தொலைவும் மறைந்துவிட்டது. வார்த்தைகள் அருவியாய் கொட்டுகின்றன; மிகையானதாகவோ தேவையற்றதாகவோ இருக்கும் ஒரு சொல் கூட இதில் இல்லை; ஒரே நேரத்தில் மனக்கவலை தீர்க்கும் அருமருந்தாகவும் சீரிய போதனை களாகவும் இக்கடிதங்கள் திகழ்கின்றன.

புபுல் ஜெயகர்

பரிவும் கனிவும் கொண்டிரு, மனநெகிழ்வோடிரு, உண்மையில், வலிமையும் உறுதியும் சக்தியால் வருவதில்லை. மாறாக, நெகிழ்வுடன் இசைந்திருத்தல், சக்தியைத் தருகிறது. புயலில் விழாமல் நிற்பது, வளைந்து கொடுக்கும் நாணல். துடிப்பு மிக்க உன் மனதின் பலத்தை நீ திரட்டி வைத்துக் கொள்.

வாழ்க்கை, விநோதமானது. எதிர்பாராத விதங்களில் பல விஷயங்கள் நிகழ்கின்றன. எதிர்ப்பினால் மட்டும் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியாது. பிரச்சினைகளைத் தீர்க்க ஒருவருக்கு எல்லையற்ற இணக்கமும் மன ஒருமையும் தேவை.

வாழ்க்கை, கூரியதோர் கத்திமுனை. மிகுந்த கவனத்தோடும் இணக்கத்துடன் கூடிய விவேகத்தோடும் வாழ்க்கைப் பாதையாம் கத்தி முனையில் நடந்திட வேண்டும்.

வாழ்க்கை, வளமிக்கது, சிறப்புடையது. பல்வேறு பொக்கிஷங்களை அது தனக்குள் கொண்டுள்ளது. நாமோ வெற்று இதயத்துடன் வாழ்க்கையை அணுகுகிறோம். வாழ்வின் வளத்தைக் கொண்டு நம் இதயத்தை நிரப்பிக் கொள்ளும் கலையை அறியாதவர்களாக இருக்கிறோம். மனதளவில், உள்முகத்தில் வறியவர்களாக இருக்கும் நாம், நல்வளங்கள் பலவற்றை வாழ்க்கை நமக்கு அள்ளித் தரும்போது அவற்றை வாங்க மறுக்கிறோம்.

பரிபூரண ஆனந்தத்தைத் தரும், தன்னிகரற்ற உண்மையான புரட்சியை அன்பு மட்டுமே கொண்டு வரும். அன்பு, எவ்வளவு தீவிரமானது! நம்மில் மிகச் சிலரே, அன்புடையவராய் இருக்கக் கூடிய திறன் கொண்டுள்ளோம்; மிகச் சிலரே, அன்பைப் பெற விரும்புகிறோம். நம்முடைய நிபந்தனைகளுக்குட்பட்டிருந்தால் அதுவும், நம் சௌகரியப் படி நாம் அன்பு செலுத்துவோம். அன்பை சந்தைப்பொருளாக அல்லவா ஆக்கி விட்டோம்!

அன்பு, சந்தைப் பொருளல்ல, கொடுக்கல் – வாங்கல் வியாபாரமல்ல. அன்பு, ஒரு மெய்ம்மை நிலை; அந் நிலையில் மனித குலத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கரைந்து போகும். ததும்பி வழியும் வாழ்க்கைக் கிணற்றிலிருந்து, நீர் மொள்ள சிறு குப்பியை அல்லவா நாம் எடுத்துச் செல்கிறோம்! ஆகவேதான் நம் வாழ்க்கை, அர்த்தமற்ற, அற்பமான, குறுகியத்தன்மையுடன் கூடிய பகட்டுத்தனமாய் இருக்கிறது.

கொள்ளையழகும் பிரகாசமும் நிலைத்த வசீகரமும் கொண்டிருக்கும் இப்பூமிதான் எத்தனை அழகு! இதனை எவ்வளவு இனிய உலகாய் வைத்துக் கொள்ள முடியும்! ஆனால் நாமோ வேதனைகளில், வலிகளில் சிக்குண்டு அவதியுறுகிறோம். வெளிவருவதற்கான வழியை ஒருவர் நமக்குக் காட்டினால் கூட, வேதனையிலிருந்து மீளுவதற்கான முயற்சியை நாம் செய்வதில்லை.

எனக்குப் புரியவில்லை – ஆனாலும், அன்பெனும் தீப்பிழம்பு என் இருப்பு நிலை. அது அணைக்க முடியாத தீப்பிழம்பு! கடலினையொத்த அளவிற்கு விரிந்திருக்கும் அன்பைக் கொண்டிருப்பதால், அதை அனைவருக்கும் அளிக்க அது விரும்புகிறது – அளிக்கவும் செய்கிறது. அது கரை புரண்டோடும் ஜீவநதியைப் போன்றது.

தன் வெள்ளத்தால் ஒவ்வொரு நகரத்தையும் கிராமத்தையும் நதி வளப்படுத்துகிறது. மனித ஆபாசங்களால் நதி மாசடைகிறது. ஆனாலும் தன்னை உடனே தூய்மைப் படுத்திக் கொண்டு, வேகமாக ஓடத் தொடங்குகிறது. அன்பினை எதனாலும் கெடுத்துவிட முடியாது. ஏனென்றால், நல்லது, கெட்டது, விகாரம், அழகு என்று அனைத்துமே அதில் கரைந்துள்ளன. என்றும் நிலைத்திருக்கும் தன்மையை தன் இயல்பாகவே கொண்டிருப்பது அன்பு மட்டுமே.

One Comment on “ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்”

Comments are closed.