சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. சமணத் துறவி

திருமுனைப்பாடி நாட்டை சேக்கிழார் தமது காவியத்திலே வருணிக்கும்போது மருத நிலத்துக்குப் பெருமை தரும் கரும்புத் தோட்டங்களைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறார். தென்னார்க்காடு மாவட்டத்தில் கரும்புத் தோட்டங்கள் இன்றைக்கும் செழிப்பைத் தந்து வருகின்றன. பெண்ணையும் கெடிலமும் இன்று அவ்வளவாகப் பெருக்கெடுத்து வளமளிக்கவில்லையானாலும், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேக்கிழார் காலத்தில் அவை உண்மையிலேயே பொங்கிப் பாய்ந்து செந்நெல்லும் செழுங் கரும்பும் தேங்கதலியும் கமுகும் பலாவும் செழித்து வளர்ந்து நாட்டுக்கு வளமூட்டின என்பதை நம்பத்தான் வேண்டும். “ஊர்களிலெல்லாம் மள்ளர்கள் வெட்டிப்போட்ட கரும்பிலிருந்து சாறு ஒழுகி, அந்தக் கரும்புகளிலே கட்டியிருந்த தேன்கூடுகளிலிருந்து சிதறிய தேனுடன் கலந்து வெள்ளமாய்ப் பாய, மள்ளர்கள் கருப்பஞ்சாற்றிற் காய்ச்சிய வெல்லக்கட்டிகளால் அந்த வெள்ளத்தைத் தடுத்தார்கள்” என்று வருணிக்கிறார் சேக்கிழார். இப்போது வானம் பொய்த்து மழை பெய்யாவிட்டாலும், ஆற்று வெள்ளம் அருகினாலும், மனித முயற்சியில் கிணறுகள் தோண்டி, எந்திரம் வைத்து நீர் பாய்ச்சி வளர்க்கப்படும் கரும்புத் தோட்டங்களைப் பார்க்கும்போது, அந்தக் காலத்து வளமையைச் சேக்கிழார் சொல்வதுபோல் ஒப்புக்கொள்ளத் தடையில்லை.
பண்ருட்டியிலிருந்து செல்லும் சாலையில் திருவாமூரை நோக்கிச் செல்லும்போது பல கரும்புத் தோட்டங்களையும், மா, பலா, கமுகுத் தோட்டங்களையும் கண்டோம். பரந்த நெல் வயல்களின் மத்தியில் ஓர் ஏரிக்கரையில், திருவாமூர் என்ற அடையாளத்தைக் காண்பிக்க, தன்னந்தனியாக வீற்றிருக்கும் சிவன்கோயிலின் பக்கத்தில் நாங்கள் போயிறங்கினோம். கோயிலின் மேற்கு வாயில் வழியே நுழைந்து உள்ளே போகலாம். சந்நிதி தெற்குப் பார்த்தது. கிழக்குத் திசையில் ஏரி. கோயிலுக்கு மேற்கேயிருந்த குருக்கள் வீட்டில் விசாரித்து சில தகவல் தெரிந்து கொண்டோம். இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயர் பசுபதீஸ்வரர். அம்பாள் திரிபுரசுந்தரி. சோழர் காலத்திலேயே இந்தக் கோயில் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் பனிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் “திருநாவுக்கரைய தேவர்க்கு படித்தரமும் நுந்தா விளக்கும்” அளித்த செய்தி காணப்படுகிறது.
திருவாமூரிலே பரம்பரையாக சைவ வேளாளர் அதிகம். அத்தகைய ஒரு குடும்பத்தில்தான் ‘திருநாவுக்கரசர் பிறந்தார். தந்தையார் பெயர் புகழனார். தாயார் மாதினியார். முதற் குழந்தையாக இவர்கள் குடும்பத்தில் திலகவதி என்ற பெண் பிறந்தாள். இவளுக்குப் பிறகு பிறந்தவர் நாவுக்கரசர். இந்தப் பெயர் பின்னால் வந்தது. மருள்நீக்கியார் என்பதுதான் குழந்தையில் இவருக்கு இடப்பட்டிருந்த பெயர்.
அக்காள் திலகவதியாரைப் பற்றியே முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது வந்ததும் திருமணம் பேசினார்கள். நெருங்கிய பந்துக்களில் ஒருவராகிய கலிப்பகையார் என்பவர் அந்தக் காலத்திலிருந்த அரசனிடத்திலே போர்வீரனாக உத்தியோகம் பார்த்தவர். இவருக்குத் திலகவதியாரைப் பேசி இருதரப்பாரும் ஒப்ப நிச்சயதாம்பூலம் பரிமாறி, பின்னால் ஒரு நல்ல முகூர்த்தத்திலே திருமணத்தை நடத்தலாமென்று வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக வடநாட்டரசன் யாரோ போர் தொடுத்து விட்டான். கலியாணத்துக்குக் காத்திருந்த கலிப்பகையார் கட்டாயம் போருக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, ‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிப்படி, ஒன்றுக்குப்பின் ஒன்றாக இந்தக் குடும்பத்தில் பல துரதிர்ஷ்டங்கள் நேரத் தொடங்கின. திலகவதியின் தந்தை புகழனார் நோய்வாய்ப் பட்டு இறந்தார். தாயார் மாதினியாரும் கணவனைப் பின்பற்றி மரணமடைந்தார். பாவம், இரண்டு குழந்தைகளும், அக்காளும் தம்பியும் தனித்து விடப்பட்டனர். ஏதோ கொஞ்சநாள் சமாளித்துப் பார்த்தார்கள். திடீரென ஒரு நாள், யுத்தத்துக்குச் சென்ற கலிப்பகையாரும் போர்க்களத்திலே இறந்துபட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவ்வளவுதான், மணம் பேசி நிச்சயித்திருந்த திலகவதியாருக்கு சகலமும் சூனியமாகிவிட்டது. பெற்ற தாயும் தந்தையும் போய்விட்டனர். முறைப்படி கைப்பிடிக்காவிட்டாலும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட கணவனையும் பறிகொடுத்த வைதவ்ய நிலை ஏற்பட்டுவிட்டது. இனிமேல் இவ்வுலகில் இருந்தென்ன பயன் என்று தற்கொலை செய்ய முயன்றாள் அந்தப் பத்தினிப்பெண் திலகவதி. ஆனால், தம்பி மருள்நீக்கியார் பணிந்து விண்ணப்பித்தார். “அக்கா, தந்தையும் தாயுமற்ற அனாதையான எனக்கு நீதான் தாய்போல் இதுவரை நாளும் ஆதரவு தந்து வந்தாய். நீயும் என்னை விட்டுப் போய்விட்டால் எனக்குத் துணை ஏது? நானும் கிணற்றிலோ குளத்திலோ விழுந்து மடிந்துவிட வேண்டியதுதான்” என்று இரங்கினார். திலகவதியார் பார்த்தார். மிகவும் புத்திசாலியான தம்பியை இழந்துவிடத் துணிவில்லை. அன்றியும் குடும்பத்துக்கு இவன் ஒருவனே வாரிசு. குடும்பம் அழியாதிருக்க தம்பியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். கல்வி கேள்விகளில் திறமைசாலியாயிருக்கும் தம்பி ஒரு பெரும்புலவனாக வரலாம். ஆகையால், இவனது வருங்கால வளர்ச்சிக்காக நாம் வாழ வேண்டியதுதான் என்று தீர்மானித்த வராய், இனிமேல் நமது சேவையெல்லாம் ஆண்டவனுக்கே அர்ப்பணமாகுக என்று, தம்பியையும் அழைத்துக் கொண்டு, திருவதிகை என்ற ஸ்தலத்தில் போய்க் குடியேறினார். அங்கே வீரட்டானேசுவரர் ஆலயத்தில் நித்திய திருப்பணிகள் செய்து கொண்டு காலத்தைக் கழித்தார்.
திருவாமூரில் திலகவதியார் மரபில் வந்த வேளாளர், இப்போது திருமணம் நிச்சயித்த அன்றே திருமணச் சடங்கையும் நடத்தி விடுகின்றனர். திலகவதிக்கு ஏற்பட்ட நிலை தமது மக்கட்கும் ஏற்படலாகாது என்று அவர்கள் கருதுகின்றனர்.
திருவதிகை அந்த நாளில் கற்றவர்கள் பலர் வாழ்ந்த நகரம். அன்றியும் சைவ மதத்தவர்களைத் தவிர சமணரும் பௌத்தரும் பலர் தத்தம் சமயவாதங்களைப் பரப்பிக் கொண்டிருந்தனர். காஞ்சியிலிருந்த சமண மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சி தொண்டை மண்டலம் முழுவதும் பரவியிருந்ததால் சமணரின் செல்வாக்கும் சமண சாஸ்திரங்களின் பாதிப்பும் தலைநிமிர்ந்த காலம் அது. நீதிநூற் பயிற்சியும் தமிழ் இலக்கணப் பயிற்சியும், தர்க்கம் முதலிய சாஸ்திரத் திறமையும் வாய்க்கப்பெற்றவர்கள் சமணர்கள். ஆகையால், கல்வித்துறையிலும் சாஸ்திர ஆர்வத்திலும் விருப்புள்ள மருள்நீக்கியார் சமண சித்தாந்திகள் கூடுமிடங்களிலெல்லாம் கலந்து அவர்கள் பிரசங்கங்களைக் கேட்கத் தலைப்பட்டார். வாழ்க்கையில் வழிகாட்ட வேண்டிய பெற்றார் இருவரும் போய் விட்டனர். ஒரேயொரு பற்றுக்கோடாயிருக்கும் தமக்கையாரோ திருவதிகை ஈஸ்வரனின் சேவையிலீடுபட்டுத் தம்பியைக் கவனிக்க முடியாமலிருக்கிறார். மருள்நீக்கியாருக்கு வேறு கதியில்லாமல் அறிவுப்பசி தீர்க்க சமணர் வழியொன்றுதான் உகந்ததாய்த் தெரிந்தது. மிகச்சிறந்த மதிநுட்பமுள்ள ஓர் இளைஞன் தமது சமய சித்தாந்தங்களில் ஆர்வம் காட்டுவதைக் கண்ட சமண சந்நியாசிகள் மிக விரைவிலே மருள்நீக்கியாருக்குத் தம் சமய நெறிகளைப் புகட்டி ஆருகத சித்தாந்தத்தில் தலைசிறந்த பண்டிதராக்கி விட்டார்கள். அது மாத்திரமன்று, தமது சமயப் பிரசார சேவைக்கு மிக உன்னத பாத்திரமென்று கண்டு, தருமசேனர் என்ற பெயர் தந்து, மேன்மை தங்கிய குருப்பட்டமும் கொடுத்து அளவிறந்த மதிப்பளித்தார்கள்.
தொண்டை மண்டலத்தின் கீழ்க்கரைப் பட்டினமாகிய திருப்பாதிரிப்புலியூர், பாடலிபுரம் என்ற பெயரில், தமிழ்நாட்டு சமணரின் குருபீட ஸ்தானமாக நிலவியது. சமணப் பெரும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், மடங்கள் எல்லாம் இந்தப் பாடலிபுரத்தில் நிரம்பியிருந்தன. தருமசேனரும் தமது சந்நியாச வாழ்க்கையை அங்கேயே கழித்தார்.
தம்பி மருள்நீக்கியார் சமணத்தைச் சார்ந்து பெரிய மடத்தில் ஒரு சந்நியாசியாகிவிட்ட செய்தியை அறிந்த திலகவதியார் அளவற்ற துயருற்றார். இத்தனை மதிநுட்பமுள்ளவர் ஆராயாமல் போய் சைவத்தை விட்டுச் சமணத்தில் சேர்ந்தாரே என்று வருந்தினார். இதற்கு அவரை மாத்திரம் குறை சொல்லிப் பயனில்லை. தாமே இதற்குக் காரணமென்று தம்மையே நொந்து கொண்டார். பெரியவளாகிய தான் தாய்க்குச் சமானமாயிருந்து தம்பியின் நல்வாழ்வுக்குத் துணை நிற்காமல், தன்பாட்டிலே கோயில் தொண்டையே தஞ்சமென்று புறம்போந்திருந்ததுதான் மருள்நீக்கியார் வழி தவறிப்போனதற்கு முக்கிய காரணம் என்று அவர் உணர்ந்தார். திருவதிகைத் தெய்வத்தை அல்லும் பகலும் வேண்டி, அருமைத் தம்பியின் மாயையைத் துடைத்து மறுபடியும் தம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பிக்க வேண்டு மென்று பிரார்த்தித்தார். இடைவிடாது செய்த பிரார்த்தனை யில் மருள்நீக்கியார் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
இதே சமயத்தில் பாடலிபுரத்திலிருந்த தருமசேனருக்கு எதிர்பாராத விதமாக சூலை என்ற கொடிய வயிற்றுநோய் உண்டாயிற்று. இதைக் கண்ட சமண சந்நியாசிகள் இது தொற்று நோய் என்று சொல்லித் தருமசேனரை மடத்திலுள்ள ஒரு தனியறையில் இருக்கச் செய்தனர். முதலில் நோய் போய்விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் மணிக்கணக்காக மந்திரங்களை ஜெபித்தனர். ஆனால் நோய் தீரவில்லை. குண்டிகை நீரை மந்திரித்துக் குடிக்கக் கொடுத்தனர். அதற்கும் வலி குறையவில்லை. மயிற்பீலி கொண்டு உடலைத் தடவினர். நோய் குறைவதற்குப் பதிலாக மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்படியாக சமண சந்நியாசிகள் தம்மாலியன்ற எத்தனையோ பரிகாரங்களை- மந்திரம், மாயம், தந்திரங்களை- உபயோகித்துப் பார்த்தும், எதற்கும் அந்தப் பொல்லாத நோய் அகலமாட்டேன் என்றது. சோர்வடைந்த சமணர்கள் இனித் தம்மால் ஒன்றும் முடியாதென்று கைவிட்டனர். இந்த நிர்க்கதியை உணர்ந்த தருமசேனர் என்ன செய்வதென் றறியாது, தமது இறுதி முடிவு நெருங்கிவிட்டதோ என்று அஞ்சினார். அப்போதுதான் தன் உடன்பிறப்பாகிய திலகவதி யம்மையாரின் ஞாபகம் வரவே, தமக்கு ஊழியம் செய்த நம்பிக்கையான பணியாளனை அழைத்து, எவருமறியாமல் தமது துன்பத்தை அக்காளிடம்போய்த் தெரிவித்துவிட்டு, அவர் சொல்வதைக் கேட்டு வந்து இரவோடிரவாகத் தம்மிடம் அறிவிக்குமாறு வேண்டிக்கொண்டார்.
திருவதிகையில் கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்த திலகவதியாரைத் தருமசேனர் அனுப்பிய பணியாளன் வந்து சந்தித்தான். “அம்மா! நான் தங்கள் அருமைத் தம்பியிடமிருந்து வருகிறேன். திடீரென்று அவருக்கு வயிற்றிலே கொடிய சூலை நோய் கண்டுவிட்டது. மடத்திலிருக்கும் சமண சந்நியாசிகள் எவ்வளவோ முயன்றும் இந்த நோயைத் தீர்க்க முடியாமல் கைவிட்டு விட்டார்கள். அதனால் தமக்கு உதவி செய்யுமாறு கேட்டு, என்னைத் தங்களிடம் அனுப்பினார். தங்கள் ஆலோசனை யைக் கேட்டு மற்றவர்கள் அறியாமல், இரவிலே வந்து தன்னிடம் தெரிவிக்குமாறு பணித்தார்கள்,” என்றான். தம்பி மிகவும் தகாத வழியில் சென்றுவிட்டார் என்று கோபங்கொண்டிருந்த திலகவதியார், “எல்லா வகையிலும் எமக்கு விரோதமான சமணப் பள்ளிக்கு நான் வாரேன்” என்று பதிலளிக்கும்படி சொல்லியனுப்பி விட்டார்.
திருவதிகையிலிருந்து இவ்வாறு பதில் வந்ததைக் கேட்ட தருமசேனர் என்ன செய்வதென்று தெரியாது வருந்தினார். அன்றிரவு முழுவதும் குடல் நோய் மாத்திரமல்ல, மனநோயும் சேர்ந்து கொடுத்த உபாதையைப் பொறாதாராய், விடியுமுன்னரே எழுந்து உடுத்த பாயையும் உறியில் உற்ற கமண்டலத்தையும் மயிற்பீலி யையும் களைந்து வைத்துவிட்டு, வேறுடை உடுத்திக்கொண்டு, மற்றெவர் கண்ணிலும் காணாதபடி, சமணத்தில் பிரவேசித்ததின் பலனாகக் கிடைத்தவைகளில் சூலை நோய் ஒன்று மாத்திரம் பின்தொடர, திருவதிகையை நோக்கிச் சென்றார். தமக்கையார் திலகவதி ஏற்றுக் கொண்டாலும் விலக்கினாலும், மறுபடியும் சைவத்தில் சேர்ந்து அதிகை வீரட்டானேஸ்வரரை வழிபட வேண்டும் என்றும், அந்த வழிபாட்டில் தமது நோய் நீங்கலாம் என்றும் நம்பினார். தருமசேனர் என்ற பெயரை அப்போது கைவிட்ட பழைய மருள்நீக்கியார்.
அதிகாலையில் வெற்று மேனியும் முகத்தில் அழுத கண்ணீருமாக எதிர்வந்து நின்ற தம்பியைப் பார்த்தார் திலகவதியார். இதுவென்ன கனவா நினைவா என்று தடுமாறிப் பேச நாவெழாமல் ஸ்தம்பித்து நின்றார். தம்பி மருள்நீக்கியார், “அக்கா, தாயே” என்று கதறிக்கொண்டு விழுந்து தமக்கு ஒரேயொரு பற்றுக்கோடாயிருக்கும் தமக்கையின் பாதங்களைக் கட்டிக் கொண்டார். திலகவதியார், “யான் செய்த தவம் பலித்ததடா தம்பி. அதிகைப் பெருமான் உன்னைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டார். இதோ இந்த விபூதியைப் பூசிக்கொள்” என்று தம் கையிலிருந்த சிவசின்னத்தைக் கொடுத்தார். தம்பியும் ஆவலோடு அதை வாங்கித் தரித்துக் கொண்டார். என்னே அற்புதம்! குடரோடு தொடக்கி முடக்கிய அந்தப் பொல்லாத சூலைநோய் மாயமாய் மறைந்தது. ஆனந்தப் பரவசத்தராய் அழுதார், விழுந்தார், அதிகைப்பெருமான் சந்நிதியில் புரண்டெழுந்தார். பின் எழுந்து நின்று அந்த இறைவன் அருள் கூட்ட அழகிய தமிழில் பாடினார்:

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

மற்றொரு சிவனடியாராகிய மாணிக்கவாசகர் சொன்னார். “அழுதாலுன்னைப் பெறலாமே” என்று அந்த மாதிரி அடியார்கள் அழுதால் இறைவன் மனங்கசிந்து கிருபை செய்வார். மருள் நீக்கியாரும் “அம்மானே நான் ஆற்றேன், உன் திருவடியே தஞ்சம் என்று திரும்பி வந்து விட்டேன். என்னை ஆட்கொண் டருள்வாய்” என்று கதறினார். சூலை நோய் நீங்கிற்று. இறும்பூதெய்திய மருள் நீக்கியார் நாவிலிருந்து சரமாரியாக இன்னிசைத் தமிழ் பிறந்தது. அன்றிலிருந்து அவர் நாவுக்கரசர் என்ற பெயரைப் பெற்றார்.

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.