சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. பாடலிபுரத்திலே…

திருவதிகை ஒரு காலத்தில் அதிகமான் என்ற பட்டப்பெயர் பெற்ற நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னர் ஆட்சியிலிருந்தது. முனையரையர் என்பது போல அதியரையர் என்பது அதிகமான் பெயர். கல்வெட்டுச் சாசனங்களில் இந்தக் கோயில் அதியரையமங்கை என்று பெயர் கொண்டிருந்தது. பல்லவ நிருப துங்கவர்மன் கல்வெட்டொன்றில் அதிராஜமங்கல்யபுரம் என்றுள்ளது. பிரமாண்டமான கோயில்தான். ஆனால் நாங்கள் போன சமயம் என்னவோ, ஒரு வைகாசிமாதம், அங்கே ஒரு காக்கை குருவியைக்கூடப் பார்க்கவில்லை. வானளாவிய எழுநிலை மாட ராஜகோபுரம். அதன் முன்னால் இடிந்துபோய்க் கிடக்கும் ஓர் பாழ்மண்டபம்தான் முன்பு அப்பர் சுவாமிகள் மடம் என்று வழங்கியதாம். ராஜகோபுர வாயிலில் இருபக்கமும் சிதம்பரம் கிழக்குக் கோபுரம் போல, பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட நூற்றெட்டுக் கரணங்களை விளக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிராகாரத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இருக்கிறது. பௌத்தர்களும் சமணர்களும் ஒரு காலத்தில் இந்தப் பிரதேசத்தில் செல்வாக்குட னிருந்தார்கள். இன்றும் அகழ்வாராய்ச்சி செய்தால் பௌத்த சமணச் சின்னங்கள் பல கிடைக்கலாம். தென்புறத்திலே ஒரு குளம். அந்தக் கோயிலின் கர்ப்பக்கிருகம் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் . அமைப்பைக் கொண்டிருக்கிறது. பல்லவ நரசிம்மவர்மனின் புதல்வன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு ஒரு கல்வெட்டுச் சான்று இங்கேயுள்ளது. அதே பல்லவச் சிற்ப முறையில்தான் மூலஸ்தானத்திலுள்ள பதினாறுபட்டை சோடச லிங்கத்தின் பின்னால், சுவரில், சோமாஸ்கந்த மூர்த்தம் புடைச்சிற்பமாக அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். லிங்க மூர்த்திக்குப் பின்னால் சோமாஸ்கந்தர் இவ்வாறு அமைந் திருப்பதைப் பல்லவர் கட்டிய கோயில்களில் காணலாம்.
உட்பிராகாரத்தில் தென்திசையில் திருநாவுக்கரசர் சந்நிதியும் திலகவதியார் சந்நிதியுமுள்ளன. திருவதிகை அட்ட வீரஸ்தலங்களில் ஒன்றாகையால் இங்குள்ள சுவாமி பெயர் திரிபுராந்தகேசுவரர்; திரிபுரம் எரித்த வீரம் இங்கு நிகழ்ந்ததாக ஐதிகம். அம்பாள் திரிபுரசுந்தரி. சித்திரை சுவாதி முதல் பத்து நாள் அப்பர் திருவிழா நடக்கும். இந்த விழாவில் அப்பர் திலகவதியாரிடம் வந்து திருநீறு பெறுவது முதலிய சரித்திரக் காட்சிகள் நடக்கும் என்று அர்ச்சகர் ஒருவர் விளக்கினார். அப்பருக்குத் தெற்குப் பிராகாரத்தில் தனியாக ஒரு சந்நிதி இருக்கிறது. உட்கார்ந்த நிலையிலுள்ள சிலாவிக்கிரகம். திலகவதியாருக்கும் ஒரு சந்நிதி உண்டு. சைவசித்தாந்த சாத்திரத்தில் ஒன்றான உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் இதே திருவதிகையைச் சேர்ந்தவர் என்று சொல்லப் படுகிறது. கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் முகம்மதியர், பிரெஞ்சுக்காரர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகியோர் மாறிமாறித் திருவதிகைக் கோயிலைத் தமது போருக்குக் கோட்டையாக உபயோகித்தனர். தென்னாட்டிலுள்ள பல கோயில்கள் இவ்வாறு கோட்டையாக மாறியது சமீபத்திய சரித்திரம்.
திருநாவுக்கரசர் திருவதிகை வந்து சூலைநோய் நீங்கப் பெற்று மறுபடியும் சைவனாகிய செய்தி பாடலிபுரத்திலிருந்த சமணர்கள் மடத்துக்கு எட்டிவிட்டதும் அவர்கள் அளவற்ற ஆத்திரம் கொண்டனர். மந்திரத்தாலும் தந்திரத்தர்லும் தம்மால் குணப்படுத்த முடியாத சூலைநோயைச் சைவர்கள் எப்படியோ அகற்றி விட்டார்கள் என்பதைச் சமண மன்னன் கேள்விப்பட்டால் தமக்கு அவமானம் மாத்திரமல்ல, தம்மேல் பெரும் பழி விழுமே என்று சமண முனிவர்கள் திகிலடைந்தனர். ஆகவே, எப்படியாவது திருநாவுக்கரசர் மீது பழிசுமத்த வேண்டுமென்ற சூழ்ச்சியோடு அரசனிடம் போய் முறையிட்டனர். “அரசே! நமது மடத்தின் தலைவராயிருந்த தருமசேனர் தமது தமக்கையார் சைவ சமயத்திலிருப்பதால் தாமும் அவ்வாறே சேர விரும்பி, தமக்குச் சூலை நோய் வந்ததாக வேடம் போட்டு, அது நம்மாலே குணப்படுத்த முடியவில்லை என்று பாவனை செய்து, தமக்கையிடம் சென்று சைவத்தைத் தழுவிக்கொண்டார்” என்று அரசனிடம் புகார் செய்தனர்.
சமண பௌத்த மன்னர்கள் ஆண்ட நாடுகளில் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் சந்நியாசிகளுக்கும் அவர்கள் மடங்களுக்கும் அளவற்ற அதிகாரங்கள் இருந்தன. அரசனாயிருந்தாலும் பொது மக்களாயிருந்தாலும் அவர்கள் பௌத்த பிக்ஷுக்களுக்கும் சமணத் துறவிகளுக்கும் தலைமை அந்தஸ்து அளித்து வந்தனர். கி.பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் பல்லவர்களில் பலர் சமணத்தைச் சார்ந்திருந்த காரணத்தால் அவர்களது மடங்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. பாடலிபுரம் என்ற திருப்பாதிரிப்புலியூரிலிருந்த அவர்கள் குருபீடம், நினைத்ததைச் செய்து முடிக்கும் அதிகாரம் பெற்றிருந்தமையால், தருமசேனர் என்ற அவர்கள் தலைமைத் துறவி சைவனாகி, திருநாவுக்கரசர் என்ற பெயர் தாங்கி சிவத்தொண்டு செய்ய முற்பட்டதை எப்படியாவது நிறுத்தவேண்டுமென்று முடிவு செய்தது. தருமசேனரின் மதிநுட்பத்தையும் பேராற்றலையும் சமணர்கள் அறிவார்கள். அவரே சமணத்தை விட்டுச் சைவத்தில் சேர்ந்ததால் எதிர்க்கட்சி எவ்வளவோ பலப்பட்டுவிடும் என்பதையும் உணர்ந்தார்கள். அன்றியும் தமது மதத்திலுள்ள குறைபாடுகளை உள்ளிருந்தே கண்டறிந்த தருமசேனரால் எந்தவித ஆபத்துக்கள் விளையும் என்பதையும் கண்டு திகிலுற்றனர். இந்தக் காரணங்களினால் சமணத் துறவிகள் தமது அரசனிடம் முந்திக்கொண்டு சென்று முறையிட்டனர்.
அரசன் உடனே திருநாவுக்கரசரை அழைத்து வரும்படி ஆணையிட்டான். அந்த ஆணையைக் கொண்டு வந்த தூதுவர்களிடம் நமது வாக்கு மன்னன், “நாமார்க்கும் குடியல்லோம்; யமனுக்கும் அஞ்சமாட்டோம்; நமக்கு அரசன் சிவபெருமானைத் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்லிப் பல்லவ மன்னனின் கட்டளைக்குப் பணிய மறுத்தார். அவ்வளவுதான், அரசனுக்கும் ஆத்திரம் பொங்கியது. கொடிய பாபமாகிய மதமாற்றம் செய்து கொண்டது மாத்திரமல்ல, அரசன் ஆணையையும் புறக்கணிக்கத் துணிந்த துரோகியைத் தண்டிக்க வேண்டுமென்று சமணர்கள் சூழ்ச்சி செய்தனர். அது பலித்தது.
நாவுக்கரசரைச் சேவகர்கள் பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். முதலில் அவரை வெந்துகொண்டிருக்கும் சுண்ணாம்புக் காளவாயிலிட்டுப் பூட்டினர். ஆனால் இறைவனுக்காட்பட்ட உத்தமராகிய நாவுக்கரசரை அந்த நீற்றறை ஒன்றும் செய்யவில்லை. “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் போன்றது இறைவன் அடி நீழல்” என்று பரம்பொருளையே தியானித்தவருக்கு சுண்ணாம்புக்காளவாய் தென்றல் போல் தண்மை கொடுத்தது. சமணர்கள் தம் முயற்சி பலனளிக்கவில்லை என்று கண்டதும் நஞ்சூட்டிப் பார்த்தார்கள். பலிக்கவில்லை. சமணமுனிவர்களுக்குத் தெரிந்த மந்திர தந்திரங்கள் அவர்கள் குருவாயிருந்தவருக்குத் தெரியாதா என்ன? பின்பு ஒரு மத யானையை ஏவி விட்டுக் கொல்ல முயன்றார்கள். அந்த யானையும் நாவுக்கரசர் முன் அடி பணிந்தது. கடைசியாக ஒரு பெரிய கல்லைக்கட்டி அவர் உடலைக் கடலில் எறிந்துவிட்டுத் தொலைந்தார் என்று திரும்பினார்கள். ஆனால், பிறவிப் பெருங்கடலையே நீந்தும் இறையருளைப் பெற்ற மகாத்மாவுக்குச் சாதாரண திருப்பாதிரிப்புலியூர்க்கடல் ஒரு பொருட்டா? “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே” என்று சிவனது நாமத்தை உச்சரித்தவாறு அந்த மகான் கல்லையே தெப்பமாகப் பாவித்து அலைகடலில் மிதந்து வந்து கரையேறினார். சமணர் திகைத்தனர். இதற்குமேல் அவர்களுக்கு உபாயம் ஒன்றும் தோன்றவில்லை. தலைகுனிந்து நின்றனர். எல்லாம் ஈசன் அருள் என்று நம்பிய நாவுக்கரசர் அந்த ஸ்தலத்திலே கோயில் கொண்டிருக்கும் தோன்றாத் துணை நாதரை வணங்கிவிட்டு, அடியார் திருக்கூட்டமொன்று பின்தொடர, திருவதிகையை நோக்கிப் புறப்பட்டார்.
நாவுக்கரசரைத் தருமசேனர் என்ற முனிவராக வளர்த்த பெருமை பாடலிபுரம் என்ற திருப்பாதிரிப்புலியூருக்குண்டு. அதே பாடலிபுரம்தான் அம்முனிவருக்கு அளவற்ற இம்சையைக் கொடுத்து, அவர் வெறுப்போடு பிரியச் செய்தது. அந்தக் காலத்தில் இந்நகரம் பெருமைப்படத்தக்க நிலையிலிருந்ததாக நாம் சரித்திரத்திலேதான் பார்க்கிறோமல்லாமல், இன்று அந்த நிலையைக் காணமுடியவில்லை. திருப்பாதிரிப்புலியூர் ஆலயம் சோழ மன்னர்களால் மிக அழகான முறையில் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் போன சமயத்தில் ராஜ கோபுரம் புனருத்தாராண வேலைகளுக்காக மறைக்கப்பட்டிருந்தது. கோயில் முன்னுள்ள மண்டபத்தில் சிற்ப வேலைகள் சிறப்பாயுள்ளன. வைகாசி மாதத்தில் இங்கு பிரமோற்சவம் நடைபெறுகிறது. திருநாவுக்கரசு நாயனார் சம்பந்தமாக “கரையேறவிட்ட விழா” மிக விமரிசையாக, சித்திரை அனுஷநாளன்று, கரையேறவிட்ட குப்பம் என்ற இடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தக் கரையேற விட்ட குப்பம் திருப்பாதிரிப்புலியூர் என்ற கடலூர் புதுநகரிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலுள்ளது. முன்பு கெடில நதி இந்த வழியாகத் தான் பாய்ந்தது என்றும், பின் வழிமாறிப் போனது என்றும் சொல்வார்கள். கரையேறவிட்ட குப்பம் என்பதை வண்டிப் பாளையம் என்றும் வழங்குகின்றனர். இங்கே நாவுக்கரசரின் ஞாபகமாக ஒரு குளமும் படித்துறையும் மண்டபமும் இப்போது
புதிதாக அமைத்துள்ளார்கள். இது ஒன்றுதான் திருப்பாதிரிப் புலியூரில் நாவுக்கரசருக்கு ஞாபகச் சின்னமாக உள்ளது.
இந்த நகரம் கடலூர் என்று இப்போது வழங்கினாலும் முன்னெல்லாம் கூடலூர் என்றே வழங்கியது. துறைமுகப் பட்டினமாயிருப்பதால் அந்நிய நாட்டினரும் மதத்தினரும் அடிக்கடி நுழைந்து பூசல் விளைத்தனர். சமணர் வந்து குடியேறி, பாடலிபுரம் என்று பெயரிட்டது போல, பதினேழாம் நூற்றாண்டிலே வடக்கேயிருந்து வந்த முகம்மதியர் இஸ்லாமாபாத் என்று பெயரிட்டனர். பின்பு டச்சுக்காரர், பிரிட்டிஷார், பிரெஞ்சக்காரர்- இப்படிப் பலர் மாறி மாறிக் குடியேறிப் பழைய பண்பையும் நாகரிகத்தையும் கரைத்து விட்டார்கள். மகதநாட்டுப் பாடலிபுரம் மறைந்தது போலவே தமிழ் நாட்டுப் பாடலிபுரமும் மறைந்துவிட்டது. திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயர் ரெயில் நிலையத்தோடு நின்றுவிட்டது. மற்றப்படி எல்லாருக்கும் அது இப்போது கடலூர்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.