பிஸ்ரீ/தமிழையா சிவராம பிள்ளை

நான் கண்டதமிழ் மணிகள்

“தமிழையா” என்றதுமே, “கமலாம்பாள்” நாவலில் வரும் அம்மையப்ப பிள்ளை என்ற தமிழ் வாத்தியாரின் திரிசவு வாசகருள்ளத்தில் பெரும்பாலும் எழக்கூடும். கல்விச் சாலைகளில் எப்படியோ புகுந்துவிட்ட ஒருவித விசித்திரப் பிறவிகளாய்க் கருதப்பட்ட அந்தப் பழங்காலத் தமிழ்ப் பண்டிதர்களின் ஒரு தொகுப்புச் சித்திரம்தான் “கமலாம் பாளின்” அம்மையப்பபிள்ளை. எங்கள் தமிழையா சிவராம பிள்ளை விதிக்கு ஒரு விலக்காகக் காட்சியளித்தார்.
இக்கட்டுரைக்கு உரிய பொருளைத் தேடவேண்டுமே என்று என் நினைவுச் சித்திரசாலையைத் திறந்து பார்த்தேன்.

பூட்டைத் திறப்பது கையாலே – மனப்
பூட்டைத் திறப்பது மெய்யாலே

என்ற நாடோடிச் சூத்திரத்தைத் துணையாகக் கொண்டு பார்த்ததும், என் இளமைப் பருவத்தை உருவாக்கிய சக்திகளுள் ஒரு முக்கியமான சக்தி, என்றும் மறக்க முடியாத ஓர் உருவமாக நின்று என்னை எதிர் நோக்கியது.

அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட சுறுத்த திருமேனியையும் கண்டதுமே மாணாக்கர்கள் பண்டித அம்மையப்ப பிள்ளையைத் தெரிந்து கொண்டது போல் நானும் பண்பட்ட, தமிழார்வம் நிரம்பிய, அகத்தோடு முகத்தையும், நேரான மிடுக்குள்ள பார்வையையும், நிமிர்ந்த தோற்றத்தையும் கண்டு “எனக்கு வழி காட்டியவர்களில் ஒருவரான தமிழறிஞர்” என்று பெருமையுடன் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சில சிறப்பியல்புகள்

அக்காலத் தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் எமகம், திரிபு, சிலேடை, சித்திரக் கவி என்றெல்லாம் பாடல்களைக் கொட்டித் தமிழைச் சித்திரவதை செய்தார்கள். குரங்குகள் அத்திப் பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று பாடல்களை உதிர்த்துவிடும் அம்மையப்ப பிள்ளை, மேலே சொன்னபடி தமிழ்வதைப் பரணி பாடிய பண்டிதர்களின் உண்மைப் பிரதிநிதி. தமிழ் தெரிந்தவன் அகப்பட்டுக் கொண்டால் அவருக்கு ஒரே கொண்டாட்டம், ஆனால் ஐயகோ!-அவனுக்குத் திண்டாட்டம். சிவராம பிள்ளையோ சொற்களை அளந்து கருத்துக் குவியலாகக் காட்டுவார். தருக்க ரீதியாகவே பேசுவார். உரையாடலை ஒரு கலையாகப் பயின்று பயன்படுத்திக் கொண்டவர்.
தமிழ் வாத்தியாரின் எளிமைத் தோற்றமும் பேச்சும், காவியப் பெண்கள் அன்னநடை நடப்பது போன்ற தமிழ் நடையும், மாணவர்களுக்கு விகடமாகத் தோன்றி ஒருவகை நகைச்சுவை. விருந்தாக அமைந்தபோதிலும், பொதுவாகத் தமிழ்வகுப்பு சுவையற்றதாகவே இருக்கும். பரந்த அறிவோ, விரிந்த உலக அனுபவமோ இல்லாதலால் தமிழ் ஆசிரியர், சிறுவர்களுக்குப் புரியும்படி எளிமையாகப் பொருள் விளங்கும் இனிய முறையில் பாடம் கற்பிப்பதில்லை. சிவராமபிள்ளையோ பாடம் நடத்தும்போது தம்முடைய இயற்கை நுண்ணறிவையும் உலகியல் அறிவையும் ஆழ்ந்தகன்ற பயிற்சியையும் சிந்தனைத் திறனையும் ஒருங்கே பயன்படுத்தி மாணவருள்ளங்களில் கருத்துக்களை நன்கு பதியச் செய்தார். இவரிடம் மாணவர்களுக்கு அன்பும் மரி யாதையும் அதிகரித்தன; தமிழ்ப்பாடங்களில் ஈடுபாடும் ஏற்பட்டது.
வரலாறு நிலநூல் முதலான பாடங்களையும் சிறு வர்களுக்கு ஆங்கிலத்தில் கற்பிப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. வரலாற்றுக் கருத்துகள், விஞ்ஞானக் கருத்துசள் முதலியவற்றைத் தமிழில் வெளியிட முடியாது என்ற விபரீதக் கொள்கை நிலவி வந்த காலம் அது. அக்காலத்திலே தமிழில் எக்கருத்தையும் வெளியிட முடியும், தாய் மொழி மூலமாகத்தான் அறிவு மாணாக்கர்களுக்கு உரியதாகி ஊட்டம் தரும் என்ற உண்மையை ஒரு புதுமையாக எங்களுக்குப் புலப்படுத்தினார் தமிழாசிரியர்.
ஆங்கிலத்தில் வரலாற்றுப் பாடம் படித்த ஒருவன், “அப்பொழுது நடக்கும் அரசாங்கம் எது?” என்ற கேள்விக்கு “முஸ்லீம் அரசு” என்று விடை கூறியதையும்
தம் கொள்கைக்கு ஒரு சான்றாகச் சுட்டிக் காட்டினார். அது “முகமதுபின் துக்ளக்கின் ஆட்சி” என்று பையன் சொல்லி யிருந்தால், அன்று நடைபெற்ற வைசிராய் கர்சன் பிரபுவின் ஆட்சிக்குப் பெரிதும் பொருத்தமாக இருந்திருக்கும்!

தமிழ்ப் பசுவும் ஆங்கில மாடும்

அறிவு வளர்ச்சிக்குக் கருத்து மட்டும் போதாது, உணர்ச்சியும் இன்றியமையாதது. கருத்து அல்லது சிந்தனையைக் காட்டிலும் உணர்ச்சி அவசியமானது என்ற பாடத்தையும் நான் சிவராம பிள்ளையிடம் கற்றுக்கொண்டேன். கருத்தை மாட்டின் உணவாகிய புல் என்று வைத்துக் கொண்டால், உணர்ச்சியைத் தவிடு அல்லது புண்ணாக்கு என்று கொள்ளலாம்.

ஒரு சமயம் ஒரு பேரறிஞர் நாம் நம் கருத்துப் புல்லையும் உணர்ச்சித் தவிட்டையும் தமிழ்ப் பசுவுக்குப் போடாமல் “ஜான் புல்” என்ற ஆங்கிலக் காளைக்குப் ம் போடுகிறோமே என்று வருந்தினார். அப்படியானால் தமிழ்ப் பசு எப்படிப் பால் சுரக்க முடியும் என்று கேட்டார் அவர். இக்கொள்கைக்குரிய வித்து அன்றே என் உள்ளத்தில் எங்கள் தமிழையா விதைத்துவிட்டார் என்பதை நான் பின்னாளில் தான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.
சிவராமபிள்ளை தமிழ்ப் பசுவுக்குப் புல்லும் தவிடும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை நடைமுறையில் பின்பற்றிய போதிலும், ஆங்கில மாட்டை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டாம் எனச் சித்தாந்தம் செய்து விடவில்லை. உண்மைச் சைவசித்தாந்தியான அவர் பசுவைப் போற்றியதுடன் “சிவபெருமானின் வாகனம் தானே காளையும்!” எனக் கருதியவர் போல் ஆங்கில மாட் டையும் போற்றிப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்.
அப்போது அந்தத் திருநெல்வேலி இந்து கலாசாலையில் எட்வின் விங்க்ளர் என்ற ஐரோப்பியர் (இங்கிலீஷ்காரர் அல்லர்) முதல்வராக இருந்தார். அவர் ஆங்கில நாகரிகத் தின் அருமைபெருமைகளையும், ஆங்கில மக்களின் சாதனைகளையும் எங்களுக்குப் பாடங்களோடு பக்குவமாய்க் கலந்து கற்பித்து வந்தார். அந்தப் படிப்பின் பயனாக, மதபக்தியோடு தேசபக்தியும் எங்களுக்கு மிகவும் குறைந்து போய் விட்டது. அவர் இராசபக்தியைப் போதிக்கவுமில்லை; தேச பக்தி வேண்டாமென்று சொல்லவும் இல்லை. மதபக்தியெல் லாம் மூட பக்திதான் என்ற உறுதியான கொள்கையுடைய வராதலின் அவர் கிறிஸ்து மதத்தையும் கண்டிக்கக் கூசுவதில்லை. அந்த விங்க்ளர் மீது எங்கள் தமிழையாவுக்கு மிக்க மதிப்பு உண்டு என்றால் அது ஆச்சரியம்தானே?
ஆங்கில நாகரிகம், ஆங்கில விஞ்ஞானம், ஆங்கில இலக்கியம் இம்மூன்றுமே, இந்தியாவை மேல் நெறியில் செலுத்தக் கூடியவை என்பது விங்க்ளர் துரையின் உபதேச சாரம். அப்படியிருக்க, “உங்கள் தமிழையா அவருடன் எப்படி இசைந்து நின்றார்?” என்று நீங்கள் அதிசயிப்பீர்கள். சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள்.
“மேல் நெறி” என்றால் மேற்கு நாட்டாரின் நெறி மட்டும் அல்ல, மேலான நெறி என்றும் கருதினார் விங்க்ளர், இக்கொள்கையைச் சிவராம பிள்ளை ஒப்புக்கொள்ளாவிட்டா லும், ஆங்கில நாகரிகம் நமக்கு இசைந்ததன்று என்ற இருத்தில் ஊன்றி நின்ற போதிலும், ஆங்கில இலக்கியம் காலம் கண்ட தமிழுக்குக் காயகற்பம் அல்லது யௌவன இலச்சை அளிக்க வல்லது என்று நம்பினார். விஞ்ஞானம், உலகத்திற்குப் பொதுவானது, ஆங்கிலேயரின் ஏகபோக உடைமையன்று; தமிழர்க்கும் அதில் உரிமையுண்டு என்பதும் எங்கள் தமிழையாவின் திடமான நம்பிக்கையாகும். ‘மத விஷயத்திலோ விங்க்ளர் ஒரு குழந்தைதான்!’ என்று சிவ ராமபிள்ளை கூறியதையும் நான் கேட்டிருக்கிறேன்.
இந்நாளில் சிலர் தீவிரமாய்ப் பிரசாரம் செய்து வரும் ‘தன்மானக்’ கொள்கைகளை அதிதீவிர நாத்திக அம்சங்களுடன் விங்க்ளர் துரை அந்நாளிலேயே காரசாரமாக எங்களுக்குப் போதித்து விட்டார். சிவராம பிள்ளையும் ‘தன்மானக்’ கொள்கைகளை நாத்திக அம்சங்களில்லாமல், தம் சைவ நெறிக் கொள்கைகளுடன் கலந்து பரிமாறிய துண்டு. ஆனால் இந்த ஆசிரியர் இருவரின் தன்மானப் பெருங் கொள்கையில் ஒரு வகுப்பினரை மட்டும் பழித்து இதுக்கும் மன நிலைக்கு இடம் கிடையாது.
அக்கொள்கைகளின் காரசாரத்திலே காரம் இன்றைய இயக்கங்களில் அதிகமாய்க் காணப்படுகிறது. விங்க்ளர் துரையின் உபதேசம் இளைஞர்களாகிய எங்களி டையே ஒருவகைப் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அறிவுப் புரட்சிதான், இதயப் புரட்சியன்று. என்னளவில் தமிழையாவின் போதனை ஓரளவு இதயப் புரட்சியையும் விளைத்தது என்பதை நான் மறக்க முடியாது.
தமிழ்ப் பசுவுடன் ஆங்கில மாட்டையும் நம்மிடையே போற்றி வளர்த்துப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியவர், “அழகான ஆங்கிலம் உலகாளப் பிறந்தது” என்று நம்பியிருந்த, வெள்ளையுள்ளத்துடன் பிறந்திருந்த, சில கருந்துரைமார்களின் வினோத விபரீதக் கொள்கையில் நம்பிக்கை கொள்ளவேயில்லை. ஆங்கிலம் அழகான மொழி என்பதையும் முப்புக் கொள்ளவில்லை. ஆற்றல் சான்ற மொழி அது;அதை அப்படி வளர்த்துவிட்டான் ஆங்கிலேயன் என்பார். அத்தகைய முரட்டுக் காளையாகத் தமிழ்ப் பசு ஆகிவிட முடியாது என்பதை அறியாதவரா இவர்? இவருக்கு அழகி யும் அன்புத்தாயும் தமிழ்தானே! ஆனால் சக்தி நிரம்பிய மொழியாகத் தம் மொழியை (தாய் மொழியை) வளர்த்துக்க கொள்ள வேண்டும், வளரவிட வேண்டும் என்றார். என் நினைவுச் சித்திரசாலையிலிருந்து முகம் காட்டி இன்றும் அவர் உரையாடி என்னைத் தெளிவாக்க விரும்புவது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுவதுண்டு.
எங்கள் தமிழையாவின் தமிழ்க் காதலில் பிறமொழி வெறுப்பு என்பதைத் துளியும் காணமுடியாது. மொழிக் காதல் வேறு, மொழி வெறி வேறு என்பதை நன்குணர்ந் திருந்தார் இவர். முருகன் வழிபாட்டின் ஒரு பகுதியான வெறியாடல்களை ஒருசமயம் குறிப்பிட்டபோது “இத்தகைய வெறியாட்டங்களில் நிலைத்த பக்திக் காதலுக்கு இடம் எங்கே?” என்றுகூட அவர் கேட்டதாக இப்போது எனக்கு நினைவு வருகிறது.
எங்கள் தமிழையா மொழியால் தமிழர்; தேசத்தால் இந்தியர்; சமயத்தால் சைவர்; இனத்தால் மனிதர். சமயத்தில் பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்தில் பக்திக்கும் “அன்பே கிவம்” என்ற சைவத்திற்கும்-இடம் உண்டு என்பது இவர் கருத்து.
தமிழையா தமிழ் கற்றுக் கொடுத்ததைக் காட்டிலும் தமிழ் குறித்து நீளச் சிந்திக்கக் கற்பித்தார்.

அனந்தகிருஷ்ணக் கவி/நான் கண்டதமிழ் மணிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)