அனந்தகிருஷ்ணக் கவி/நான் கண்டதமிழ் மணிகள்

பிஸ்ரீ

ஜவாஹர்லால் நேருவுக்குக் கங்கை மீதுள்ள காதலைக் காட்டிலும் குறைந்ததன்று என் தாமிரபருணி மோகம். வடநாட்டுக்கும், தென்னகத்திற்கும் தென்னகம் என்று கூறத் தக்க திருநெல்வேலிச் சீமைக்குக் கங்கையாகவும் காவிரியாக வும் திகழ்வது தண்பொருநை என்ற தாமிரபருணியாறு. நீளம் எழுபது மைல்தான்; எனினும், தொல்காப்பியர் சாலம் தொட்டு, ஏன், அதற்கு முன்பாகவே தென்பாண்டி நாட்டின் இலக்கிய இலக்கண சிந்தனைகள் உரம் பெற்றுப் பக்குவப் பயிராகி முத்தமிழாகச் செழித்து வளர்ந்து வந்திருப்பது இந்த ஆற்றங்கரையிலும்தான்.

நான் குழந்தைப் பருவம் முதல் சிறுவனாகத் திரிந்து மாணவப் பருவத்தை முடித்துக் கொள்ளும்வரை என் வாழ்க்கையுடன் கொஞ்சிக் கலந்து பெருகி வந்திருக்கிறது தாமிரபருணி. இன்று வயது முதிர்ந்த நிலையில் கூவம் நதி திரத்தில் வாழ்க்கை நடத்தும் போதும் என் இதயத்தில் தாமிரபருணி ஆற்றங்கரை சென்னைக் கடற்கரையைக் காட்டிலும் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது. (“உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை” என்று பேர் பெற்றிருப் பது நம் கடற்கரை என்பது அனைவரும் அறிந்தது.)
தமிழ்த் தாத்தாவும் என் சிறிய தந்தையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா ஒன்றில் டாக்டர் சாமிநாதையர் தலைமையில் நான் கம்பனைக் குறித்துப் பேச நேர்ந்தது. அப்பொழுது,
பருணிக் காதலையும் அடக்கிக்கொண்டு, “கவி தாதாகம் உள்ளவர்களெல்லாம் காவிரிக்கரைக்கு வரவேண்டியதுதான்” என்றேன்
தமிழ்த் தாத்தாவோ தம் முடிவுரையில் என் பிரதேசமாகிய தாமிரபருணி தீரத்தின் அருமை பெரு மைகளைக் குறிப்பிட்டார்.. “அகத்தியனார் தொடங்கி அனந்த கிருஷ்ணக் கவிவரையுள்ள புலவர்கள் தமிழ்த் தாகத்தைப் போக்கி வருவது தண்பொருநையாற்றங்கரையிலே!” என்றார். என் சிறிய தந்தையும் தமது நண்பரும் வானமாமலை ஆஸ்தான கவியுமான அனந்தகிருஷ்ணையங்காரைத் தான் அனந்தகிருஷ்ண கவி என்று குறிப்பிட்டார் அவர்.
என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் தாமிரபருணி தீரத்திலே நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்திலுள்ள தென்திருப்பேரை என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். நம்மாழ்வார் சிறப்பாகப் பாடியிருக்கும் ஒன்பது பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் இவ் வூரும் ஒன்றாகும். இத்தலத்தை ‘அனந்த வளத்தென்பேரை’ என்று ஒரு வெண்பாவில் டாக்டர் சாமிநாதையர் குறிப் பிடுகிறார். இவ்வூரின் பலவளங்களில் சிலேடைக் கவிகளை அநாயாசமாகப் பொழிந்து தள்ளக் கூடிய அனந்தகிருஷ்ணையங்காரின்சொல்வளமும், சங்க இலக்கியப் பதிப்புகளிலேயே பெரும்பாலும் ஈடுபட்டிருந்த டாக்டர் சாமி நாதையரின் கவனத்தையும் ஓரளவு கவர்ந்திருந்தது.
இதற்கு நட்புறவு மட்டும் காரணமன்று; பிற்கால இலக் கியங்கள் மீது தமிழ்த்தாத்தாவுக்கு இருந்த அனுதாபமும் காரணமாகும். கம்பனை மட்டும் கற்றால் போதுமா? சங்க நூல்களோடு பிற்கால நூல்களையும் கற்க வேண்டும். எத்தனை புலவர்கள் பசியோடிருக்கிறார்கள்! அப்பசி தீர்வது நாம் அந்த நூல்களைப் படிக்கும் போதுதான் என்பார் அவர்.
பழைய ஏடுகளைத் தேடித் திருநெல்வேலிப் பக்கமோ, ஆழ்வார் திருநகரிப் பக்கமோ சாமிநாதையர் வரும் போதெல்லாம் என் சிறிய தந்தையார் எதிர்கொண்டு போய் அழைத்துவந்து உபசரிப்பதுண்டு. வழிவழிவந்த தமிழ்ப் புலவர் மரபில் தமிழோடு வடமொழியையும் பயின் றிருந்த அனந்தகிருஷ்ணக்கவி தம் பாடல்களைக் கூறுவதுடன் தம் குலப் பெருமையையும் குதூகலமாய் எடுத்துரைப்பார். தம்முடைய தாத்தா திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் மகா ராசாவுடன் நெருங்கிப் பழகி வட்டக் கடுக்கன் பொன் வீரச்சங்கிலி முதலிய பரிசுகளும் உபகாரச் சம்பளமும் பெற்றிருந்தார் என்று தமிழ்த் தாதாவிடம் பெருமிதத்துடன் கூறுவார். அவரும் குழந்தை கதை கேட்பதுபோல் கேட்டுக் கொண்டிருப்பார்.
தமிழ் வேதங்களான ஆழ்வார் பாடல்களைக் கசடறக் சுற்றிருந்த அனந்தகிருஷ்ணக் கவி, சாமவேதம் ஓதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் சாமகானம் செய்யும் போதும் டாக்டர் சாமிநாதையர் சுவைத்துக் கேட்பாராம். ஐரோப்பியப் புலவர் ஒருவர் தாம் சிதம்பரத்திற்கு வந்த சமயம் அனந்தகிருஷ்ணையங்காரின் சாமவேத பாராயணத்தைப் பாராட்டி ஒலிப்பதிவு செய்து கொண்டு போனார். அந்த நாளில் வெள்ளையர் காதில் விழும்படி வேதம் ஓதக் கூடாது என்ற வைதிகக் கட்டுப்பாடு மிக்க உறுதியுடன் பின் பற்றப்பட்டது. அக்கட்டுப்பாட்டை மீறி “ஆசையுடைய வர்களுக்கெல்லாம் வேதத்தையும் ஓதிக் காட்டலாம்” என்ற புரட்சிக் கொள்கையை மேற்கொண்டார் கவி அனந்த கிருஷ்ணையங்கார்.
வைதிகக் கோலத்தில்தான் காணப்படுவார். ஆனால் உள்ளம் அன்பாலும் உலகியல் அனுபவத்தாலும் நெகிழ்ந்து காலத்திற்கு ஏற்ற சில சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிக்க பின் வாங்கவில்லை. காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியான ஹரிஜன ஆலயப் பிரவேச உரிமையையும் இவர் ஆதரித்தார், இராமானுசரின் ஸ்ரீவைஷ்ணவக் கொள்கைக்கு மாறுபட்டதன்று மகாத்மா காந்தியின் ஆலயப் பிரவேசம் எனக் கருதினார். குருபரம்பரை வரலாறுகளிலிருந்து சில ஆதாரங்களும் காட்டினார்.
உதாரணமாக, மைசூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு நாராயணபுரத்துக் கோவிலில் நிகழ்ந்ததாகக் குருபரம்பரை வரலாறு தெரிவிக்கும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்
டார். ஆண்டில் மூன்று நாள் ஹரிஜனங்கள் திருநாரா யணபுரத்தில் ஆலயப் பிரவேசம் செய்ய இராமானுசர் அனுமதித்தார் என்ற செய்தி மிகவும் பிரசித்தமானது. அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில் “தீண்டல் வந்து ஒட்டிக் கொள்ளுமோ?” என்று அஞ்சிய வைதிகர் ஒருவர் பதுங்கி ஒதுங்கிக் கோபுரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தார். உடனே அர்ச்சகர் மீது ஆவேசம் வந்து விட்டதாம்.
அந்நிலையில் அர்ச்சகர் அந்த வைதிகரைத் தேடிப் பிடித்து, “நீதான் நீசன், தீண்டத்தகாதவன்” ! எனச் சுட்டிக் காட்டினாராம்.
காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜனங்கள் என்று கௌரவித்து அவர்களிடையே தன்மான உணர்வு தழைக்கச் செய்தார் அல்லவா? இதே விதமாக இராமானுச ரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திருக்குலத்தார் என்ற அழகிய தமிழால் குறிப்பிட்டார். இதுவும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கைக்கு ஓர் அரணாவதுதான் எனக் கருதினார் அனந்தகிருஷ்ண கவி. இவரது சிலேடைக் கவிகளைக் காட்டிலும் பரந்த மனப்பான்மை என்னைப் பெரி தும் ஆட்கொண்டது. இந்த மனப்பான்மை குறித்தும் டாக்டர் சாமிநாதையருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந் தேன்.
என் சிறிய தந்தைக்குச் சங்க நூற்பயிற்சி கிடையாது. இடைக்கால இலக்கியங்களிலும் முறையான பயிற்சி இல்லை. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், காளமேகப் புலவர் முதலானவர்களின் சில்லறைப் பிரபந்தங்களிலே ஊறிக் கிடந்தவர். யமாக் கரடிகளோடு (யமகம் என்ற தமிழ் வதைப் பாடல்கள் பாடிய புலவர்களோடு) இவர் அதிகமாக உறவாடியதில்லை; சிலேடைப் புலிகளோடு தமிழ் வேட்டையில் துணிவாக ஈடு படுவார். ஐந்து சிலேடைகள் அடங்கிய வெண்பா ஒன்று இவர் பாடியதுண்டு. அதை அக்காலப் பண்டிதர்கள் ரசித்து அனுபவித்ததும் உண்டு. ஆனால் அத்தகைய அனுபவங்கள் எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. தலைசிறந்த தமிழ் நூல் சுமையெல்லாம் கற்றும் ஆராய்ந்தும் அனுபவித்திருந்த டாக்டர் சாமிநாதையரும், செல்வக்கேசவராய முதலியார் முதலான பெரும் புலவர்களும் என் சிறிய தந்தையாரின் திருவரங்கச் சிலேடைமாலை, திருப்பேரைக் கலம்பகம், சந்திர கலாமாலை,தனிப்பா மஞ்சரி முதலிய நூல்களை வாயாரப் பாராட்டுவார்கள். அது கேட்டுப் பெருமை கொண்டேன்.

பாரதி காலத்திற்குச் சற்று முன்பு

சரி; சிலேடை என்றால் என்ன?”அது சீடையா, சிலேட்டா?” என்று கேட்கக் கூடியவர்களும் இன்று உளர் என்று பண்டித பாஷையில் குறிப்பிட விரும்புகிறேன். கன்னங்கரேல் என்றிருந்த ஜமீன்தார் ஒருவரை “அண்டங் காக்கைக்குப் பிறந்தவரே!” என்று திட்டினாராம் ஒரு புலவர். அவர் சீறி விழுந்ததும், “அண்டத்தைக் காப்பதற்குப் பிறந் றவர்; அதாவது அரசாளப் பிறந்தவர் என்று தானே சொன்னேன்?” என்று பதில் சொன்னாராம் அப்புலவர். இப்படிப் பல பொருள்படக் காட்டிப் பாடுவதுதான் சிலேடை. இப் பாடல்களைப் பாடுவதில் என் சிறிய தந்தையார் காளமேகம் முதலான பழைய புலவர்களையும் வென்றுவிட்டதாக மதித்து அக்காலத் தமிழ் வித்துவான்கள் இ வரை “அபிநவ காள மேகம்’ எனக் குறிப்பிட்டார்கள். அதிவேகமாய்ப் பாடியதால் “நிமிடகவி” என்றும் பாராட்டுவாராயினர்.
அனந்தகிருஷ்ணக்கவி 1911-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவில் தாம் பாடிய “மகுடதாரண வைபவ வெண்பா” என்ற தமிழ்ப் பிரபந்தத்திற்காகப் பொற்சங்கிலி ஒன்றைப் பரிசாகப் பெற்றார். அச்சங்கிலி ஆங்கில அரசர் அரசி உருவங்களுட னும் அமைந்தது. டாக்டர் ஜி.யூ. போப் என்ற சீமைத் தமிழ்ப் பெரும் புலவரின் சிபாரிசினால் இவருக்குக் கிடைத் தது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியின் வெற்றிவிழாவிலும் பொற்பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றை வெகு மதியாகப் பெற்றார் இவர். இராசபக்திப் பாடல்கள் பல இவர் பாடியதுண்டு; இப்பாடல்களில் பலவும் என் செவியில் விழுந்தன; ஆனால் உள்ளம் பதிவு செய்து கொள்ளவில்லை. அதைத்தான் பாரதியாரின் தேசீய ஆவேசப் பாடல்களுக்குப் பறிகொடுத்து விட்டேனே!
தாமிரபருணி ஆற்றங்கரையில்தான் “தனியானதோர் மண்டபமீதினிலே” பாரதியாருக்கும் தம் கன்னிக் கவிதை (முதற் கவிதை) கிடைத்தது. அவரே உருக்கமாகப் பாடி யுள்ளார் இந்நிகழ்ச்சியை. தாமிரபருணி தீரத்தில் பிரிட்டிஷ் இராசபக்தியுடன் சிலேடைக் கவிகளையும் அடித்துக் கொண்டு போய் விட்டன, பாரதியார் தோற்றுவித்த கவிதைப் பருவ மழையும் தேசியச்சாரற் புது வெள்ளமும்.

One Comment on “அனந்தகிருஷ்ணக் கவி/நான் கண்டதமிழ் மணிகள்”

Comments are closed.