விஜயலக்ஷ்மி கண்ணன் /வைராக்கியம்

வெளியும் உள்ளும் ஒரே மாதிரி இருள் சூழ்ந்து இருந்தது.
ஜானகி ஒரு மாதமாக இந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தான் எல்லாம்.
சமையல் அறை அருகில் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்.
எப்படி விழுந்தாள் என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை.
எது எப்படியோ சமாளித்து விடலாம் என்று தைரியம் வந்தது.
வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது.
ஜானகிக்குப் பாம்பு ச் செவி. இந்த எழுபத்து ஐந்து வயதிலும் கண்ணாடி போடாமலே ஊசியில் நூல் கோர்க்க முடிகிறது.
பாழாப் போன கால் தான் தொல்லைக் கொடுக்கிறது. கதவைத் திறந்து விட்டாள்.கமலா கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்.

“ஏன் அக்கா,ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா? தனியாக எதற்குத் தவிக்க வேண்டும்?
வாங்க அக்கா “என்று கமலா
பெட்டியைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபோது ஹால் சுவரில் சிவராமன் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது
ஜானகிக்குக் கமலா மீது கோபம் தான்.வெறுப்பு கூட. பின்னே இருக்காதா? எதை வேண்டும் ஆனாலும் பங்கு வைத்துக் கொள்ளலாம்,
ஆனால் கட்டிய கணவனைப் பங்கு வைத்துக் கொள்ள எந்த பெண்ணால் தான் முடியும்.?
ஜானகி எதுவுமே பேசவில்லை.
இனி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.
கமலா ஜானகியின் கூடப் பிறந்தவள்.
சிவராமன் ஜானகியை மணந்த பொழுது கமலா பாவாடை தாவணியில் பருவப் பெண்.
ஜானகியும் சிவராமனும் திருமணம் முடிந்து
பம்பாய் போய் குடித்தனம் தொடங்கி விட்டார்கள். இல்லறம் நல்லறமாக ஓடிக் கொண்டிருந்தது.
வருடத்திற்கு ஒரு முறை ஜானகி சென்னை வந்து ஒரு மாதம் பெற்றோர்களுடன் இருந்து விட்டு,சிவராமன் ஒரு வார விடுதி எடுத்து வந்து, பிறகு இருவருமாகத் திரும்பி விடுவார் கள். ஒவ்வொரு முறையும் வரும்பொழுது,
சிவராமனுக்குக் கமலாவின் மீது நாட்டம் அதிகரித்து வந்தது.
கமலாவுக்கும் சிவராமன் மீது அலாதி அன்பும் ,அது காதலாக மாறியது.
மனதிற்குள் அக்காவுக்குத் துரோகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு குத்தாமல் இல்லை.
சிவராமன் ஜானகியை விட்டுச் செல்லவில்லை.
அதே நேரம். கமலாவின் மீது காதல் கொண்டது மனம்.
ஜானகிக்கு விஷயம் தெரிந்தபோது காலம் வரை மீறிப் போய் விட்டது.
ஜானகியின் பெற்றோர்கள் கமலாவைக் கண்டபடி திட்டினார்கள். அக்காவின் வாழ்க்கையை அழித்து விட்ட துரோகம் மன்னிக்க முடியாது என்று கடிந்து கொண்டார் கள்.
ஜானகி மிகவும் துவண்டு போனாள். இனி எப்படி சிவராமனுடன் குடும்பம் நடத்த முடியும்?
கமலா ஒரு முடிவுக்கு வந்தாள்.
சிவராமன் மீது உள்ள தன் காதல் தன்னோடு இருக்கட்டும்.அவர்கள் தாம்பத்தியத்தைப் பாழாக்கக் கூடாது.
சிவராமனுக்கு தன் மனதைப் பிளந்து ஒரு கடிதம் எழுதி அனுப்பிய பின் சந்திக்க விரும்பவில்லை.
கமலா அவசர அவசரமாகத் தான் பணி புரிந்த வங்கியில் இருந்து இடமாற்றம் கேட்டு வாங்கிக் கொண்டு மதுரை கிளைக்குப் போய்ச் சேர்ந்தாள்.
பிறகு, இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட வந்து ஜானகியையோ சிவராமனையோ நேரில் வந்து பார்க்கவில்லை.
பத்து மாதங்களுக்கு முன் ஒரு நாள்.
சிவராமன் கமலாவை அவள் வங்கி முகவரியை வைத்துக் கொண்டு , பார்க்கப் போனபோது கமலா சகஜமாகப் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து பிறகு தான் இருவரும் சற்று சகஜமாகப் பேசத் தொடங்கினார்கள்.தன்னுடன் வருமாறு அழைத்தார் சிவராமன்.
ஆனால் கமலா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
பல ஆண்டுக்கால பிரிவின் பிறகு மீண்டும் சேர்ந்த போது வாய் பேச முடியாது தவித்து விழிகள் கோடி கோடியாகப் பேசியது
கமலாவின் பிடிவாதத்திற்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் சிவராமன் மும்பைக்கு திரும்ப வந்துவிட்டார்.
ஜானகியிடம் ஒன்றும் மறைக்கவில்லை.
இத்தனை ஆண்டுகளில் இந்த கதை புதிது அல்லவே. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்க கற்றுக் கொண்டுவிட்டாள் ஜானகியும்.ஓரிரு நாட்களில் சிவராமனுக்கு நல்ல ஜுரம், மருந்து சாப்பிட்டும் இறங்கவே இல்லை.மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் சிரமமாக இருந்தது. பிறகு உயிருடன் வீடு திரும்பவில்லை.மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஜானகி சற்றும் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது.
கமலாவுக்கு தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னாள்.
எல்லாம் முடிந்த பிறகும் ஜானகியால் இயல்பாக இருக்க முடியவில்லை.
கமலாவும் புரிந்து கொண்டு திரும்ப மதுரை சென்றுவிட்டாள்.
பிறகு இன்று தான் மீண்டும் சந்திப்பு.

ஜானகியின் அயல் வீட்டு சுலோ மாமி தான் கமலாவுக்கு தொலைப்பேசியில் ஜானகியின் நிலைமை தெரிவித்தாள்.

“அக்கா என்னை மன்னித்துவிடு.
நான் உன் வாழ்வில் குறுக்கிட்டது தவறு தான்.
அதனால் தான் நான் அவருடன் இணைந்து வாழவில்லை.
அவரோடு பேசக்கூட நான் விரும்பியது இல்லை.
உன் மனம் வேதனைப்பட நான் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் நான் வருந்தாத நாள் கிடையாது அக்கா”.
கமலா அழுதே விட்டாள்.
ஜானகி கமலாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“சரி போய் படு.”
என்றாள்.
காலை எழுந்து கமலா கையில் காபியுடன் ஜானகியை எழுப்ப “அக்கா ,அக்கா”.
பேச்சில்லை.
கமலா கையிலிருந்த காபி சரிந்தது.