சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. குணபரவீச்சுரம்

பாடலிபுரத்தை விட்டுத் திருவதிகை திரும்பிய திருநாவுக்கரசரை வரவேற்க அந்த நகரமே திரண்டெழுந்தது. இந்தக் காட்சியை வருணிக்கும் சேக்கிழார் தமது இலக்கியப் புலமையின் பேரழகைக் காண்பிக்கிறார்:
“திருவதிகை நகரில் வாழ்கின்றவர்களெல்லாம் இந்தப் பெரும் சிவத்தொண்டரை வரவேற்க முரசறைந்து ஊருக்கறிவித்தார்கள். வாழை கமுகு முதலிய மரங்களை நட்டனர். எழுநிலைக் கோபுரங் களில் மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். தோரணங்கள் அமைத்தனர். தொண்டர் வரும் வழியெங்கும் சுண்ணப்பொடியும் மலரும் பொரியும் தூவி இறைத்தனர். அப்போது, தூய வெண்ணீறு அணிந்த திருமேனியும், உருத்திராக்க வடங்கள் நிறைந்த கோலமும், சிவனது சேவடிகளையே வருடிய சிந்தையும், ஆனந்த பாஷ்பம் பொழியும் கண்களும், பண்ணிசை பாடும் வாயும் உடையவராய், திருநாவுக்கரசர் திருவீதியில் புகுந்தார்.”
இந்தப் புண்ணியவானையா மிண்டர்களாகிய சமணர்கள் துன்புறுத்தினர் என்று மக்கள் கவன்றனர். நாவுக்கரசர் நேரே அதிகை வீரட்டானத்துக்குள் நுழைந்து இறைவனைத் துதித்துப் பாடினார். அன்று உதித்தது அவர் நாவில் தாண்டகம் என்ற செந்தமிழ் இசைமலர். ஓசையின்பமும் பொருளின்பமும் சொல்லின்பமும் ஒருங்கே கூடிய இந்தத் தாண்டக வடிவத்தை, அவர் சம காலத்தவராகிய சம்பந்தரோ, அல்லது பின் வந்த சுந்தரரோ கையாளவில்லை.

உறிமுடித்த குண்டிகைதங் கையில் தூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக்கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையிலுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சியானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான்தன்னை
ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

அன்று தொட்டு நாயனார் திருவதிகையில் தங்கிச் சில நாள், “சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன், நலந் தீங்கினும் உன்னை மறந்தறியேன், உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்” என்று அவரே தம் வாயால் கூறியது போல, வீரட்டானத்துறையும் அம்மானைச் சேவித்து வந்தார்.
திருவதிகையையும் பாடலிபுரத்தையும் மடக்கிய பல்லவ நாட்டின் அதிபதி காடவர்கோன் என்ற சமணமன்னன் மகேந்திர வர்மன், முனிவர் தருமசேனருக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை யெல்லாம் நினைத்துப் பார்த்தான். அவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு, நாடு மதிக்கும் பெரும் புகழோடு திருவதிகையில் சைவம் பரப்பி வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் பலவாறு சிந்திக்க லானான். “இவ்வளவு மகத்துவம் பொருந்திய ஒரு மகாபுருஷரை, சமண முனிவர்களின் சொற்கேட்டுத் துன்புறுத்த உடந்தையா யிருந்தேனே நான்” என்று வருந்தி, உடனே தனது பரிவாரம் சூழ, திருவதிகை வந்து சேர்ந்தான். திருநாவுக்கரசரைப் பணிந்து வணங்கி, விபூதி வாங்கித் தரித்து அன்றே சைவத்தில் புகுந்தான். அது மாத்திரமல்ல, அந்த அரசன், பாடலிபுரத்திலிருந்த சமணப் பாழிகளையும் பள்ளிகளையும் இடித்து, அவற்றிலிருந்த கட்டிடப் பொருள்களையெல்லாம் கொண்டு வந்து திருவதிகையில் சிவனுக்கு ஒரு கோயில் எழுப்பினான். மகேந்திர பல்லவனுக்கு குணபரன் என்ற ஒரு பெயருண்டு. அந்தப் பெயரால் இங்கு கட்டப்பட்ட புதிய கோயிலுக்கு குணபரவீச்சுரம் என்ற பெயர் வழங்கிற்று.
திருவதிகைப் பெரிய கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்ட நாங்கள் இந்த குணபரவீச்சுரம் என்ற மகேந்திர பல்லவன் கட்டிய கோயிலைப் பார்க்க விரும்பி அங்குள்ள பலரிடம் விசாரித்துப் பார்த்தோம். இப்போது திருவதிகையிலிருக்கும் கோயில்தான் மகேந்திரன் கட்டியதென்று பொதுவாக நம்பப்படுகிறது. இப்போதிருப்பது பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது என்பது சரித்திரத்தில் நாம் அறிவோம். அதற்கு முன் மகேந்திரன் கட்டிய சிறு கோயில் இருந்த இடத்தில்தான் பாண்டியர்கள் பெருங் கோயிலைக் கட்டினார்கள் என்று சிலர் சமாதானம் சொல்வதையும் நாம் நம்பவில்லை. ஆகையால், குணபரவீச்சுரம் என்ற பழைய ஸ்தானத்தை எப்படியாவது தேடிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். வழித்துணைப் புத்தகங்களிலோ மற்றும் ஏடு களிலோ இதைப் பற்றிய தகவலைச் சேகரிக்க முடியவில்லை, திருவதிகையில் பலரிடம் சொல்லிக் கேட்டும் பலனளிக்கவில்லை. * சுமார் ஒன்றரை மணி நேரம் திருவதிகை முழுவதும் அலைந்தும் எவ்விதக் குறிப்பும் கிடைக்கவில்லை. சோர்வுற்று ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும்போது எங்கள் அவல நிலையை ‘உணர்ந்து கொண்ட ஒரு விவசாயப் பெண்மணி, “அசலூரா?” என்று கேட்டார். போகிற போக்கிலே உபசாரத்துக்காகக் கேட்கிறார் என்று நாங்களும் ஆமா என்று விடையளித்துவிட்டு, எல்லோரிடமும் விசாரித்தது போலவே இந்தப் பெண்ணிடமும், “ஏம்மா, இங்கே குணபரேச்சுரம் என்ற கோயில் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டு வைத்தோம். என்ன ஆச்சரியம்! அந்த அம்மாள் சற்றும் தயங்காமல், “அதோ திரும்பிப் பாருங்கள், மேற்கே பெரிய ரோடுக் கரையிலே இருக்கிறது ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்” என்று சொல்லி விட்டுத் திரும்பியும் பார்க்காமல் தன் வழியே சென்றாள். அப்போது தான் எங்களுக்கு வெளிச்சம் தெரிந்தது! ஆதிமூல குணபரேஸ்வரர்! சற்றும் தாமதியாமல் உடனே அந்த இடத்தைச் சேர்ந்தோம். வீரட்டானேசுவரர் கோயிலுக்கு கால் மைல் தூரத்தில், சாலையோரமாக ஒரு சிறு கட்டிடம். இடிந்த நிலை. இருபக்கமும் செங்கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்ட திருச்சுற்று மாளிகை. பிராகாரத்தில் பின்னமுற்றிருந்த ஒரு நந்தி. அதன் பக்கத்தில் இனந்தெரியாது உடைந்துபோன ஒரு படிமம். எல்லாம் பல்லாண்டு காலம் இயற்கையின் உற்பாதங்களால் தாக்கப்பட்ட சின்னங்களாய்க் காட்சியளித்தன. பல்லவ மகேந்திரவர்மன் காலத்திலும் அதற்கு முந்தியும் பல கோயில்களிருந்தன. அப்பரும் சம்பந்தரும் அவற்றைப் பாடினர். அக்கோயில்களெல்லாம் மரத்தாலும் செங்கல்லாலும் சுதையாலும் அமைக்கப்பட்டிருந்தன. மழையிலும் காற்றிலும் தாக்குண்டு நெடுங்காலம் தாங்கமாட்டாமல் சிதைவுறக் கண்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே முதன்முதல் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்ட ஆரம்பித்தான் என்பது வரலாறு. எனவே பாடலிபுரத்திலிருந்த சமணப் பாழிகளும் அக்காலத்தில் செங்கல்லாலும் சுதையாலும் ஆனவையே என்று நம்பலாம். அவற்றை அழிப்பதும் சுலபமே. அதே சமயம் குணபரேச்சுரம் என்ற புதிய கோயிலும் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதென்பதற்கு நாங்கள் பார்த்த ஆதிமூல குணபரேஸ்வரன் கோயில் நல்ல சாட்சி. வீரட்டானேஸ்வரம் சோழர் களாலும் பாண்டியர்களாலும் கருங்கற் கோயிலாகக் கட்டப்பட்ட பின்னர்தான் அதற்குக் கட்டிடப் பெருமை ஏற்பட்டது. அதனை மக்கள் புதிய கோயில் என்று கொண்டு பழைய குணபரேஸ்வரத்தை “ஆதிமூல குணபரேஸ்வரம்” என்று வழங்கினர் போலும் என்று நாங்கள் புரிந்து கொண்டோம். இந்தக் கோயிலைக் கண்டு பிடித்ததில் எங்களுக்கு ஒரு புதையல் கிடைத்தது போலாயிற்று. இந்தப் புதையல் கிடைக்கக் காரணமாயிருந்த அந்த ஊர் பேர் தெரியாத பெண், எங்கிருந்தோ வந்தவர், எல்லாம் வல்ல பராசக்திதான் என்று நம்பினோம். சிவனடியார்களைத் தேடிச் சென்ற எங்களுக்கு இப்படி எத்தனையோ தெய்வானுகூலமான அனுபவங்கள். அப்படியானால், நாயனார் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களையும் நம்பாதிருக்க முடியவில்லை.
திருநாவுக்கரசர் திருவதிகையிலிருந்து சில நாட்கள் திருப்பணி செய்துவிட்டுப் புறப்பட்டவர், மற்றும் சில தலங்களை வழிபட்டுப் பெண்ணாகடம் என்ற கோயிலுக்குப் போனார் என்றும் அங்கே அவருக்கு இறைவன் இடபம் சூலம் ஆகிய இலச்சினைகளை யளித்தார் என்றும் சேக்கிழார் சொல்கிறார். பெண்ணாகடத்தை யடுத்து வேறு பல முக்கியமான ஸ்தலங்களிருக்கின்றன! அவற்றுடன் தொடர்பு கொண்ட மற்றும் சில நாயன்மாரையும் நாம் சந்திக்க இருக்கிறோம். ஆகையால் நாம் அந்த யாத்திரையைப் பின் ஒரு நாள் வைத்துக் கொண்டு இப்போது தில்லைக்குப் போய், சுந்தர மூர்த்தியைத் தொடருவோம்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.