ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 66/அழகியசிங்கர்

26.03.2024

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : ஆராச்சார் என்ற புத்தகம். கே.ஆரத் மீரா எழுதியது. படிக்கப் படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது.
ஜெகன் : ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லும்போது விறுவிறுப்பாக இருக்கிறது என்று சொல்லலாமா?
மோகினி : வேற எப்படி ஒரு புத்தகத்தின் சிறப்பை வெளிப்படுத்துவது.
அழகியசிங்கர் : சில புத்தகங்களைப் படிக்கும்போது நாம் எதற்குப் படிக்கிறோம் என்று தோன்றும். சில புத்தகங்களில்தான் நம்மை கவர்ந்திழுக்கும் தன்மை இருக்கும்.ஆராச்சார் அப்படி ஒரு புத்தகமாக நினைக்கிறேன்.
மோகினி : 782 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஆயிற்றே?
அழகியசிங்கர் : ஆமாம். படிக்கப் படிக்க 782 பக்கங்களை முடித்து விடுவேன். எத்தனை நாட்கள் ஆகுமென்று தெரியாது.
ஜெகன: ஆராச்சார் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு புத்தகம் படிக்க வேண்டுமென்று தோன்றுமில்லையா?
அழகியசிங்கர் : உண்மைதான் என்னைச் சுற்றிலும் புத்தகங்கள் இருப்பதால் இந்த உணர்வு இப்போது அதிகமாக இருக்கிறது.
ஜெகன் : இப்போதெல்லாம் நீங்கள் கவிதைகள்தான் அதிகமாக எழுதுகிறீர்கள் போல் தோன்றுகிறது.
அழகியசிங்கர் : உண்மைதான். கவிதைகள்தான் அதிகமாக எழுதத் தோன்றுகிறது. சிலர் எழுதுகிற கவிதைகளைப் படிக்கும்போது என்னால் அதுமாதிரி எழுதுவதைக் கற்பனை செய்ய முடியவில்லை.
மோகினி : சிறுகதைகள் எழுதுவதைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை உங்களுக்கு.
அழகியசிங்கர் : சிறுகதை எழுதுவதற்கு ஒரு பொறி வேண்டும். அது எளிதாகத் தட்டுப்படவில்லை. மனதுக்குள்ளேயே பல கதைகள் தோன்றி தோன்றி மறைந்து விடுகின்றன.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(இரவு 11.01 மணிக்கு)