சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

தில்லை தரிசனம்

சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருவதிகைக்குப் பக்கத்திலுள்ள சித்தவடமடத்தில் நாம் சந்தித்தபின் அவர் தில்லையை நோக்கிச் சென்றார் என்று சொல்லியிருந்தோம். சேக்கிழார் தரும் வரலாற்றுப்படி அங்கே தில்லையில் விசேஷமாக எந்த நிகழ்ச்சியும் நிகழவில்லை. தில்லையிலுள்ள நான்கு வாயில்களில் வடக்கு வாயில் வழியாக அவர் உள்ளே சென்று, தில்லையம்பலத்தானை வணங்கி விட்டுத் தெற்கு வாயில் வழியாக வெளியே புறப்பட்டு வீதி வலம் வரும்போது, “திருவாரூருக்கு வா” என்று ஓர் அசரீரி கேட்டதாம். திருவாரூர் சுந்தரரின் தாயார் இசைஞானியார் பிறந்த ஊர். அன்றியும் அவர் வாழ்க்கையில் நிகழவிருக்கும் முக்கிய சம்பவங் களுக்கெல்லாம் திருவாரூர் நிலைக்களமாயிருக்கப் போவதால் அவர் முதலில் திருவாரூருக்குப் போவது பொருத்தமென்றுதான் இந்த அழைப்பு வந்தது போலும்.
தில்லையைத் தரிசித்த சுந்தரமூர்த்தி அந்தத் தலத்திலிருந்தே இறைவனைத் துதித்துப் பாடியதாக ஒரு பதிகமாவது தேவாரத்தில் இல்லாதது ஆச்சரியம்தான். சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் சுந்தரர் இங்கு இரண்டு பதிகங்கள் பாடினார் என்று குறிப்பிட்டிருக் கிறார். ஆனால் அவை தேவாரத் தொகுப்பில் காணப்படவில்லை. செல்லரித்துவிட்ட ஏடுகளில் ஒருவேளை அவை மறைந்து போயிருக்கலாம். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றே திருத்தொண்டத் தொகையை ஆரம்பித்து, முதலிலே வணக்கம் செய்த தில்லையை எப்படிப் பாடாமலிருக்க முடியும்? இப்போதுள்ள தேவாரத் தொகுப்பில் கோயில் என்ற தலைப்பில் “மடித்தாடும்” என்ற பதிகத்தைச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பதிகம் பேரூரில் வைத்துப் பாடியதாகச் சேக்கிழார், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார். சுந்தரர் தமது யாத்திரையில் பல தடவை தில்லைக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவர் அங்கே பதிகம் பாடினாரோ அல்லது பாடவில்லையோ, இப்போது அவர் மிக அவசரமாகத் திருவாரூர் போக வேண்டியிருக்கிறது. ஆகையால் அவரைத் தடைசெய்யாமல் அங்கே போகவிட்டு, நாம் சிதம்பர க்ஷேத்திரத்தைச் சுற்றிப் பார்த்து அந்தத் தலத்தோடு தொடர்பு கொண்ட திருநீலகண்ட நாயனார், கணம்புல்ல நாயனார், திருநாளைப் போவார் என்ற நந்தனார் முதலியவர்களைச் சந்தித்துவிட்டு அப்பால் நமது யாத்திரை யைத் தொடருவோம்.
பொழுது சாய்ந்து இருட்டிவிட்டது நாங்கள் சிதம்பரம் போய்ச் சேரும்போது. எத்தனை தடவைதான் இந்தப் பெரிய கோயிலைத் தரிசித்தாலும் முற்றும் முழுவதும் அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகையால், கோயில் வீதியிலேயே நெடுங்காலமாக வசிக்கும் ஒரு பழைய இலக்கிய நண்பர் வீட்டுக்குச் சென்று அவர் மூலமாக மறுநாட்காலை கோயில் வட்டத்தைப் பார்க்கலாம் என்ற நோக்கத்தோடு அந்த நண்பரைச் சந்தித்தோம். ஆனால் அந்த நண்பர், நம்மைவிட அதிகமாகப் பழக்கமுள்ள, கோயிலுடன் தொடர்புள்ள நண்பர் ஒருவர் இருக்கிறார்; அவர் மூலமாகப் பல தகவல்களை அறியலாம் என்று சொல்லித் தெற்கு வீதியில் வசித்த அந்த நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் நேருக்கு நேர் சந்தித்தது பல ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு அறிமுகமாயிருந்த நண்பர் சம்பந்தம் பிள்ளையைத்தான்! சிதம்பரத்திலே மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியபுராணத்தைப் பாராயணம் செய்பவர். எங்கள் யாத்திரையின் நோக்கத்தைக் கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சியோடு உபசரித்தார். மறுநாள் காலை தமது வீட்டிலேயே பலகாரம் சாப்பிட்டுவிட்டு, சிதம்பரம் கோயிலைச் சுற்றிப் பார்த்து, மற்றும் இடங்களுக்கும் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.
காலை ஆறு மணிக்கெல்லாம் சம்பந்தம்பிள்ளை வீட்டுக்குப் போனோம். அவரும் அவர் குடும்பத்தினரும் உபசரித்த பாங்கை இங்கு சொல்லாமலிருக்க முடியாது. உப்புமா, சர்க்கரை, இட்டலி, நெய், துவையல், மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய், தயிர், வாழைப் பழம், காப்பி, இத்தனை வரிசையுடன் அவரது பெண்களின் இன்முகமும், சம்பந்தம் பிள்ளையின் பெரியபுராணப் பேச்சும் மறக்க முடியாத அனுபவம். எமது யாத்திரையில் சிற்சில சம்பவங்கள் பிரயாணத்தின் அலுப்பை மறக்கச் செய்து, இலக்கியத்தில் நிலைத்து நிற்க வேண்டிய அனுபவங்களாகிவிட்டன. சிதம்பரத்தில் இந்த அனுபவமும் ஒன்று.
நண்பர் சம்பந்தத்தின் மீது சிதம்பரம் கோயில் தீக்ஷிதர்கள் மிகுந்த அபிமானமுள்ளவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். முதலில் அவர் எங்களை அழைத்துக்கொண்டு போய் கோயில் நிர்வாகக் குழுவின் செயலாளராயிருந்த ராஜாமணி தீக்ஷிதரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இளம் வயது. கவர்ச்சிகரமான தோற்றம். விவேகி. இவர் தில்லைவாழந்தணர் மூவாயிரவரில் ஒருவர். “முன்னொரு காலத்தில் மூவாயிரவர் என்ற கணக்கு சரியாயிருந் திருக்கும். ஆனால், இன்று நாங்கள் சுமார் இருநூறு குடும்பத்தினர் தான் கோயிலோடு சம்பந்தப்பட்டிருக்கிறோம். விவாகமான ஆண்கள் எல்லோருக்கும் கோயிலில் உரிமையுண்டு. இந்தக் காலத்தில் சிலர் ஆங்கிலம் படித்து வெளியூர்களில் போய் உத்தியோகம் பார்ப்பதால் அந்த உரிமையை இழந்து விடுகிறார்கள்” என்றார் ராஜாமணி தீக்ஷிதர்.
இந்தத் தில்லை மூவாயிரவர் எப்பொழுது எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்ல வரலாறு காணப்படவில்லை. சோழர் காலத்திலே ராஜராஜ சோழன் சில சிவாசாரியர்களை வடக்கே யிருந்து கொண்டுவந்து பல கோயில்களில் ஆகம விதிப்படி பூஜை செய்ய நியமித்தான் என்று தெரிகிறது. அப்படி நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், ராஜராஜனுக்கு முன்னே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் இவர்களை, ‘முட்டாத முச்சந்தி மூவாயிரவர்” என்று ஒரு தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சமகாலத்தவரான திருமங்கையாழ்வாரும், “மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க” என்று தில்லை வேதியரைக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களுக்கு முன்பு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவுக்கரசர் இந்த அந்தணர்களை மூவாயிரவர் என்று சொல்ல வில்லை. சம்பந்தரும் மூவாயிரம் என்ற எண்ணிக்கை குறிப்பிடாமல், “கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை” என்றும், “பசுவேட்டு எரியோம்பும் சிறப்பர் வாழ் தில்லை” என்றும் அக்கினி வளர்த்து வேள்வி செய்யும் வேதியர்களைக் குறிப்பிடுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் புராதன கோயில் கட்டடங்களையும் சைவ மரபையும் ஆராய்ந்த ஒரு பேராசிரியர் சிதம்பரத்தைப் பற்றிய தமது ஆராய்ச்சியில் குறிப்பிடும் சில தகவல்கள் பொருத்தமாயிருப்பதைக் காணலாம்.
சிதம்பரம் கனகசபையைப் பிரதக்ஷணம் வருபவர்கள் ஒரு விசித்திரமான உண்மையைச் சாதாரணமாய் கவனிக்க மாட்டார்கள். கூர்ந்து நோக்கினால் தெரியும். நடராஜப்பெருமான் சந்நிதியில் நின்று வழிபட்ட பின் கனகசபையை வலம் வந்தால் முதலில் திருக்களிற்றுப் படி எதிர்ப்படும். அந்த இடத்திலிருந்து பார்த்தால் மேடையில் நடராஜ மூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடத்துக்குப் பின்னால் சுவர் தெரியும். திருக்களிற்றுப் படியைத் தாண்டி வலம் வரும்போது மேற்சொன்ன சுவர் சாதாரண அகலமுள்ள சுவராயிருந்தால், இரண்டடி அல்லது மூன்றடி தாண்டியவுடன் வடக்குப் பிராகாரத் துக்கு நாம் வந்துவிடலாம். அப்படியில்லாமல், சுவர் ஆறு அல்லது ஏழு அடி அகலமாயிருப்பது போல் தெரிகிறது. ஆகையால், அங்கிருப்பது வெறும் சுவரல்ல, நான்கு புறமும் மூடப்பட்ட ஒரு அறை என்பது நமது ஆராய்ச்சி நண்பரின் ஊகம்.
பல்லவர் காலத்திலே சைவ நெறியைப் பரப்பியவர்கள் பாசுபதத் துறவிகள் என்றும் பசுபதி வழிபாட்டினர் என்றும் பல்லவ சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இவர்களில் சிலர் சிதம்பரத்தில் குடியேறி அங்கிருந்த கோயிலில் யாகம் முதலிய செயல்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம். “பசுவேட்டு எரியோம்பும் சிறப்பர்” என்று ஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுபவர்கள் இவர்களா யிருக்கலாம். இவர்களே பெருகி மூவாயிரவர் என்ற குழுவாக ஏற்பட்டிருக்கக்கூடும். பிற்காலத்தில் சோழ மன்னர்கள் குடியேற்றிய வைதிக பிராமணர் கலப்பால் பாசுபதர் தில்லை மூவாயிர தீக்ஷிதர் களாயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
தீக்ஷிதர் வரலாறு எப்படியாயினும், சிதம்பரம் கோயில் உரிமையும் பரிபாலனமும் இந்தத் தில்லை மூவாயிரவர் என்ற தீக்ஷிதர் கையில்தான் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் வேறு எந்தக் கோயிலும் இந்த மாதிரியான உரிமையைப் பெறவில்லை. முதலாம் ராஜராஜன் காலத்தில், கி.பி. பத்தாம் நூற்றாண்டிலே, கோயில் சொத்துக்கள் வாங்குவதும் கொடுப்பதும், மற்றும் சாசனங்கள் எழுதப்படுவதும், இறைவனின் பிரதிநிதியான “திருப்புலியூர் சண்டேசுவர தேவனார்” பெயரிலேயே நடந்து வந்தன. பன்னிரண்டாம் நூற்றாண்டில், விக்கிரமசோழன் காலத்தில், ஓர் உரிமைப் பிரச்சினை எழுந்து உட்பூசல்கள் ஏற்பட்டன. இந்த வழக்கில் அரசன் தலையிட்டு தில்லைக் கோயில் நடவடிக்கைகளும் கண்காணிப்பும் “பொது தீக்ஷிதர்” குழுவின் பெயரில் இருக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து, அதற்கென சில விதிகளும் ஏற்படுத்தி வைத்தான். அந்த விதிகளே இன்றும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் நிர்வாகம் ஒன்பது பேர் கொண்ட ஒரு சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொது என்பது மன்றம் அல்லது சபை. ஆகவே இவர்களை ‘பொது தீக்ஷிதர்’ என்று சொல்வார்கள். எந்தக் காரியமானாலும் இவர்களே முடிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் கூடும் கூட்டங்களில் தலைமை வகிப்பவர் தீக்ஷிதரல்லர், ஒரு பண்டாரம். இந்தப் பண்டாரத்தின் மூலமாகத்தான்- சண்டேசுரருக்கு இணையாக- எல்லாத் தீர்ப்புக்களும் வழங்கப்படும்.
சிதம்பரம் கோயில் தொகுப்பு ஐந்து சந்நிதிகளைக் கொண்டது. இந்த ஐந்துக்கும் நான்கு நான்கு பேராக இருபது பேர் பூஜை முறை வைத்துக் கொள்வார்கள். இருபது நாட்களுக்கு ஒரு முறை இடம் மாறுவார்கள். ஆனால் நடராஜர் சந்நிதியில் பூஜை செய்ய எல்லாரும் தகுதி பெற்றவர்களல்ல என்றும், “பூஜை எடுத்தவர்” என்ற அந்தஸ்தைப் பெற்ற மூன்று நான்கு பேர்தான் நடராஜ மூர்த்தியைத் தொட உரிமையுள்ளவர்கள் என்றும் ராஜாமணி தீக்ஷிதர் விளக்கினார்.
தில்லைவாழந்தணர்களைப் பற்றி இப்படியான செய்திகளை யெல்லாம் ராஜாமணி தீக்ஷிதரோடு பேசிக்கொண்டிருந்தபின் அவருடைய அனுமதியோடு சம்பந்தம்பிள்ளை எங்களை உள்ளே அழைத்துச் சென்று பொன் வேய்ந்த கனகசபை முதலிய முக்கியமான இடங்களைப் புகைப்படம் பிடிக்க உதவினார். அதன் பின் சிற்சபையில் ஸ்படிக லிங்க அபிஷேக தரிசனமும், நடராஜர் திருவுருவக் காட்சியும், பின்னால் சிதம்பர ரகசியமாய் ஒளிந்திருக்கும் ஆகாச லிங்கக் கற்பனைக் காட்சியும் கிடைக்கப் பெற்றோம்.
இந்த நடராஜ வடிவத்தை யார் எப்பொழுது வடித்துத் தந்தாரோ சரித்திரம் இல்லை. ஆனால் இப்போது நாம் நினைத்துப் பார்த்தால் இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சிற்ப வடிவத்தில் வடிக்கக் கருத்து வழங்கிய மேதையையும், அக்கருத்துக் கியைய உருவம் வார்த்த சிற்பியையும் தொழ வேண்டும் போல் இருக்கிறது. இன்று நாம் காணும் நடராஜ வடிவம் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருப்பெற்று வழக்கில் வந்தது. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நடராஜ வடிவம் சிலையிலிருந்தது என்பதைக் காரைக்காலம்மையாரின் வாயிலாகவும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்திலும் காண்கிறோம்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன