மீனாட்சி சுந்தரமூர்த்தி/வறுமையின் அரிச்சுவடி

இன்னார் இதைத்தான் செய்ய
வேண்டும்
என்றே எழுதா சட்டம் அமுலில்லாது
நடைமுறை
இருந்ததோர் காலமது.

உழைப்பைச் சுரண்டி மாடிமனை
சேர்த்தார்,
தலைப்பாகை இடுப்பில். இடம்
கொண்ட காலமது.

வானமது வளைக்கும் அறிவு
கண்டும் கல்வி தராது கட்டைவிரல்
தட்சிணை
கேட்ட காலமது.

பாலுக்கு மழலை அழுதிட
அடுப்பில்
பூனை தூங்க ஏடெடுத்த
புலவன்
அரண்மனை நாடிய காலமது.

வறுமைப் பாடத்தின்
அரிச்சுவடி இவை.

இன்று,
நிலைக்களன் கண்டுவிட்டது
மாற்றம்.
வறுமைக்கான காரணிகள்
உருமாற்றம்.

இலவசங்கள் இதயத்தில்
சிம்மாசனம்.
உழைப்பு உதட்டளவில்
நின்று
போன விழுக்காடு
கூடிவிட்டது.

அடிதடி, நூதனத் திருட்டு
மாதிரி
காட்டத் திரை; கைவரிசைக்கு
உறை.

காய்கனி மரமேறிச் சுவைக்கும்
வானரமும்
சோம்பல் உடல் வாங்கி
அகப்படுவார்
கை பறித்து உண்ணும்.

நன்றியுள்ள நாய்களும்
நரிகளாய்
நடுநிசி அகப்படுவார் இழுத்து
மறைந்தே,பசியாறும்.

காட்டானை புகுந்த களமாய்
நாடிது
ஆகும் முன்னே விழித்திட
வேண்டும்.

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி/வறுமையின் அரிச்சுவடி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன