வளவ. துரையன் /வருணதேவன்

வாய்திறந்து கொட்டுகிறானே
வழியெங்கும் வெள்ளமாய்.

வாடும் பயிருக்குத் தனைவிட்டால் யாருமில்லை
என்றெண்ணி அவ்வப்போது
மறக்காமல் பெய்கிறது இந்த மாமழை.

இதுபோன்று பெய்தால் இனியதுதான்.
ஆனால்
விரைவில் நின்றுவிடும்.

தூளியை ஆட்ட ஆட்டத்
தூங்காமல் சிணுங்கும்
சிறு குழந்தையாய்
வரும் தூறல்கள்தாம் எப்போதும் தொல்லை.

ஒதுங்கவும் முடியாமல் ஓடவும்
இயலாமல் ஒண்டிக்கொண்டு
அல்லல்படும் நொண்டி ஆட்டுக் குட்டிதான்
கண்முன் நிற்கிறது.