சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

நாவுக்கரசரை நாம் பழையபடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருவதிகையிலிருந்து புறப்பட்ட இவர் சில தலங்களைத் தரிசித்த பின் சிதம்பரத்துக்கு வந்தார். சுந்தரமூர்த்தி வடக்கு வாயிலால் உட்புகுந்தார் என்று சொல்லும் சேக்கிழார், நாவுக்கரசர் மேற்கு வாயிலால் வந்தார் என்று சொல்லி வைக்கிறார். இதுபோல், சம்பந்தர் தெற்கு வாயிலாலும், மாணிக்கவாசகர் கிழக்கு வாயிலாலும் உள்ளே சென்று வணங்

கினர் என்று நால்வருக்கும் நான்கு வாயில்களையும் ஏற்றிச் சொல்வது கர்ணபரம்பரை. நாவுக்கரசர் தில்லைக்கு வந்து இறைவனைத் துதித்துப் பாடிய சில பாசுரங்களில் நடராஜ வடிவத்தின் லட்சணத்தை மிக அற்புதமாக வருணித்துள்ளார்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் முடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

“எடுத்த பொற்பாதத்துடன் ஆடுகின்ற இந்த வடிவத்தைக் காண வாய்ப்பிருந்தால் மனிதப் பிறவி எடுப்பதும் விரும்பத் தக்கதுதான்” என்கிறார் அப்பர் சுவாமிகள். நடராஜ தரிசனத்தைக் கண்டுகொண்ட அப்பர் திருஞானசம்பந்தரைத் தேடிச் சீர்காழிக்குப் போகிறார். அவரை நாம் பின்னொரு நாள் அங்கு சந்திப்போம்.

நடராஜ வடிவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தோ மல்லவா? மிகப் பழைய காலத்திலேயே இறைவனின் கூத்தாடும் நிலையைப் பற்றி யாரோ ஒருவர் கற்பனையில் உதயமாகியிருக்க வேண்டும். வழிவழியாகச் சிற்பிகள் அதற்கு மெருகு கொடுத்து உருப்படுத்தி வந்தார்கள். பத்தாம் நூற்றாண்டுச் சோழ சிற்பியின் கையில் உருவான நடராஜ வடிவம்தான் முழுமை நிறைந்தது. அதற்குப் பிறகு மேலும் அழகு கொடுக்க இடமில்லை என்ற நிறைவு. இந்த வடிவம் பல நூற்றாண்டுகளாகவே நம் முன்னோரால் பக்தியுடன் வழிபாட்டுக்குரிய வடிவமாக மாத்திரம் போற்றப்பட்டு வந்ததல்லாமல் அதிலடங்கிய கலைத் தத்துவத்தை நாம் இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் தெளிவுற அறியக் கூடியதாயிற்று. இதனை எடுத்து முதன்முதலில் விளக்கிய பெருமை இலங்கைத் தமிழர் ஆனந்த குமாரசுவாமி அவர்களைச் சாரும். இந்தியக் கலையின் தத்துவத்தையும் அழகையும் உலகத்துக்கு எடுத்துக் காட்டிய அந்தக் கலாயோகி, நடராஜ வடிவத்தில் அடங்கிய அழகையும் பொருளையும் ஒரு வெண்பா மூலமாக எடுத்துக்காட்டி அதற்குச் சிறந்த வியாக்கியானமும் எழுதி, சிவநடனம் என்ற பெயரில் நூல் வெளியிட்டார்.

தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோத முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

இது உமாபதி சிவாசாரியார் என்ற அறிஞர் ஒருவர் பாடிய ‘உண்மை விளக்கம்’ என்ற நூலில் உள்ளது. சைவசித்தாந்த நெறியின்படி இறைவன், ஆன்மாக்களைப் பொறுத்தமட்டில், ஐந்து வகைத் தொழில்கள் புரிபவன் என்பது மரபு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன அந்த ஐந்தொழில்கள். நடராஜ வடிவத்தில் துடி என்ற டமருகம் கொண்ட கை படைத்தலையும், அபயகரம் காத்தலையும், அங்கி ஏந்திய கை அழித்தலையும், ஊன்றிய பாதம் ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து மறைத்தலையும், தூக்கிய பாதம் அருளலையும் காட்டுகின்றன என்பது தத்துவம். சிவ பிரானுக்கு மூன்று வகையான நடனங்கள் கூறப்பட்டுள்ளன. திருக் கயிலாய மலையில் தேவர்கள் நடுவில் ஆடுவது பிரதோஷ நடனம். இது ஊழிக்காலம் முடிய உலகத் தோற்றம் உண்டாக ஆடும் சிருஷ்டி நடனம். இரண்டாவது ஊர்த்துவ தாண்டவம். இது வைரவ அல்லது வீரபத்திர மூர்த்தத்தில் நின்று ஆடுவது. திருவாலங்காட்டில் காளியுடன் ஆடியது இந்த நடனம். தில்லையிலும் ஆடியதாக ஐதிகம் உண்டு. கனகசபைக்கு எதிரிலுள்ள நிருத்தசபையில் காணப்படும் சிற்பம் ஊர்த்துவ தாண்டவம். மூன்றாவது ஆனந்த தாண்டவம். இதுவே சிதம்பரத்தில் சிற்சபையில் நித்தியமாய் நிரந்தரமாய் ஆடிக்கொண்டிருக்கும் அற்புத நடனம். இதைப்பற்றி எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகத்தின் பல கலைஞர்கள் தேடிவந்து பார்த்துப் பரவசமடைந்து அதேபோல நகல் உருவங்கள் செய்துகொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் பழைய சோழ சிற்பிகள் வார்த்து, கோயில்களில் பிரதிஷ்டை செய்த சிலைகளையே திருடிச் சென்று பிறநாட்டாருக்கு விற்கின்றனர். இத்தகைய ஒரு சிலை கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள சிவபுரம் கோயிலிலிருந்து திருடப்பட்டு அமெரிக்காவில் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம்.’ மீட்டவர் திரு. நாகசாமி அவர்கள்
கனகசபையில் நடராஜப் பெருமான் காட்சி அளிக்க, அவருக்கு எதிர்ப்புறத்தில் கிழக்குப் பார்த்தபடி கிடந்த திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார் கோவிந்தராஜப் பெருமாள். இது சிதம்பரத்துக்கு ஓர் அபூர்வ ஏற்பாடு. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவன் பிரதிஷ்டை செய்து வைத்ததாகத் தெரிகிறது. குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்தக் கோவிந்தராஜப் பெருமாளைப் பாடியிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் தில்லை மூவாயிரவரே பெருமாளுக்கும் பூஜை செய்தார்கள். திருமங்கை யாழ்வார் பெரிய திருமொழியில்,

மூவாயிர நான்மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே

என்று பாடுகிறார். திருச்சித்திரகூடம் என்பதே வைஷ்ணவர்கள் தில்லையை குறிக்கும் பெயர். இந்த கோவிந்தராஜப் பெருமாள் அடிக்கடி பல அவதிக்குள்ளானார் என்று தெரிகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இவர் நடராஜர் முன்னிலையில் இருக்கலாகாதென்று சொல்லி சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் பெருமாள் விக்கிரகத்தைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டான் என்று ஒரு கதையுண்டு. இன்னொரு கர்ண பரம்பரைக் கதையின்படி சித்திரகூடத்தை எவரோ அழித்தபோது இராமானுஜர் பெருமாள் விக்கிரகத்தை எடுத்துச் சென்று கீழைத் திருப்பதியில் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று சொல்லப் படுகிறது. பின்னர் பதினாலாம் நூற்றாண்டிலே முகம்மதியப் படைகள் பல கோயில்களை இடித்து அட்டூழியம் செய்தபோது, இவர்களுக்குப் பயந்து பல விக்கிரகங்கள் மறைத்து வைக்கப்பட்டன. செஞ்சியில் ஆண்ட விஜயநகர வீரர்களான கோபண்ணராயனும் கம்பண்ணனும் முஸ்லிம் படைகளை அழித்து அமைதி கண்டபோது, இந்துக் கோயில்கள் திறக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் கோவிந்த ராஜப் பெருமாளையும் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய வேதாந்த தேசிகர் ஏற்பாடு செய்துவைத்தார். இதற்குப் பிறகும் பெருமாளுக்கு நிம்மதி ஏற்படவில்லை. மேலும் ஒரு தடவை இடம் மாறியபின் முடிவிலே பதினாறாம் நூற்றாண்டு முதல்தான் இன்று வரையிலும் அவர் நிம்மதியாக அநந்த சயனத்தில் வீற்றிருக்கிறார். இதற்கு வழி செய்து வைத்தவர் 1539இல் ஆண்ட விஜயநகர மன்னர் அச்சுதராயர். நடராஜர் சந்நிதிக்கு எதிரே துவஜஸ்தம்பத்தடியில் நின்றால் ஏக சமயத்தில் தில்லையம்பலத்தானையும் கோவிந்ராஜனையும் வழிபடலாம். இந்த அனுபவத்தை நந்தன் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்,

தில்லையம்பலத்தானை கோவிந்தராஜனைத்
தெரிசித்துக் கொண்டேனே…
தும்பைப்பூ மாலைகள் தொட்டுக் கொடுப்ப திங்கே
துளசிக் கொழுந்தெடுத்துத் தொட்டுக் கொடுப்ப தங்கே…

என்று இரு கடவுளரையும் விளித்துப் பாடியிருப்பதில் காணலாம்.

இந்த நடராஜ தரிசனத்தின் பின் சம்பந்தம்பிள்ளை தில்லையின் மற்றைய கோயில்களுக்கும் அழைத்துச் சென்றார். எல்லாக் கோயில் களிலும் இறைவன் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிருகத்தை மூலஸ்தானம் என்பர். ஆனால் சிதம்பரத்திலும் திருவாரூரிலும் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தனிக்கோயிலை திருமூலட்டானம் என்ற சிறப்புப் பெயராலழைப்பர். இவ்விரு தலங்களிலும் முக்கிய வழிபாட்டுக்குரியவர்கள் சிதம்பரத்தில் நடராஜரும், திருவாரூரில் தியாகராஜரும். ஆகையால் மூலவராக, அருவமாகிய லிங்க வடிவத்தில் இருக்கும் கோயிலை திருமூலட்டானம் என்று வழங்குகின்றனர். சிதம்பரம் திருமூலட்டானத்தருகே உள்ளது சிவகாமி சந்நிதி. இங்கிருந்து நாங்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்தோம்.

இந்த ஆயிரங்கால் மண்டபம்தான் சேக்கிழாரின் பெரியபுராண அரங்கேற்றத்துக்கு உபயோகப்பட்டது என்று சொல்வார்கள். பெரிய புராணம் பிறந்த கதையும் ஒரு ருசிகரமான வரலாறு. திருவாரூரில் அநபாய சோழனின் மந்திரியாயிருந்தவர் சேக்கிழார். அரசன் சமண இலக்கியம் ஒன்றில் ஈடுபாடு கொண்டிருந்ததைக் கண்ட சேக்கிழார், சிவனடியார்களின் வரலாற்றைச் சொல்லிச் சைவத்தின் பெருமையை விளக்கியபோது, அந்த வரலாற்றைக் காவியமாகப் பாடச் சொன்னான் அரசன். அந்த ஆணையை மேற்கொண்டு சேக்கிழார் சிதம்பரம் சபாநாயகரை வந்து வணங்கி, தில்லையம்பல வாணனே “உலகெலாம்” என்ற முதல் அடி எடுத்துக் கொடுக்க, “உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” என்ற காப்புச் சொல்லுடன் தொடங்கி பெரியபுராணம் என்ற மகா காவியத்தை எழுதி முடித்தார். அரசனே முன்வந்து பெரியபுராணத்தை அரங்கேற்ற ஏற்பாடு செய்து சேக்கிழாரையும் பெருமைப்படுத்தினான். இது நடந்தது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில். இந்தச் சம்பவத்தைப் பதினாலாம் நூற்றாண்டில் தில்லையில் வசித்த மகாஞானியாகிய உமாபதி சிவாசாரியார், ‘சேக்கிழார் புராணம்’ என்ற நூலிலே மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
உமாபதி சிவாசாரியார் சிதம்பரம் பெற்ற மற்றொரு பேரறிஞர். தில்லைவாழந்தணர்கள் என்ற தீக்ஷிதர்களில் ஒருவரான இவர் அளவுகடந்த இறுமாப்புடனும் கல்விச் செருக்குடனும் வாழ்ந்தவர். ஆடையாபரண வகையுடன் எப்பொழுதும் பல்லக்கிலேதான் பிரயாணம் செய்வார். ஒருநாள் இவர் சிதம்பரம் வீதியொன்றில் சிவிகையில் ஏறிச் செல்லும் போது வழியிலே ஒரு பரதேசி இவரைப் பார்த்து, “பட்ட கட்டையிற் பகற் குருடு போகுது பாரீர்!” என்று ஏளனமாகச் சொன்னார். அந்தப் பரதேசி சிதம்பரத்தைச் சார்ந்த திருக்களஞ்சேரியிலிருந்த சைவசித்தாந்த ஞானாசிரியர் மறைஞான சம்பந்த சிவாசாரியார். இவர் இன்னார் என்று உணர்ந்ததும் உமாபதி சிவாசாரியார் உடனே சிவிகையிலிருந்து இறங்கி வந்து, மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கி உபதேசம் பெற்றார்.
மறைஞான சம்பந்தர் சகலமும் துறந்த ஞானி. உமாபதியும் தீக்ஷிதர்களுக்குள்ள ஒழுக்கங்களைத் துறந்து தமது குருவுண்ட எச்சில் உணவையே தாமும் உண்டு மெய்ஞ்ஞானம் வரப்பெற்றார். இவர் நடத்தையை வெறுத்த தில்லைவாழந்தணர்கள் உமாபதியைத் தங்கள் குலத்துக்குரியவர் அல்லர் என்று தள்ளி வைத்து விட்டனர். உமாபதி தனிமையில் பக்கத்திலுள்ள கொற்றவன்குடி என்ற பகுதியில் உறைந்து வந்தார். ஒரு நாள் சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் ஆரம்பமாகும்போது கொடிமரத்தில் கொடியேற முடியாமல் தடை பட்டது. எல்லோரும் எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் அது ஏற மறுத்துவிட்டது. உமாபதியை அழைத்து வாருங்கள் என்று அசரீரி பிறந்ததாகவும், அவர் வந்து தரிசனம் கொடுத்ததும் கொடி தானாகவே ஏறியது என்றும் சொல்வார்கள். அந்தச் சமயத்தில் அவர் பாடியதுதான் ‘கொடிக்கவி.’ இது சைவ சித்தாந்த சாஸ்திரம் பதினான்கில் ஒன்று. சைவர்கள் போற்றும் சித்தாந்த சாஸ்திரங்களில் முதல் நூல் சிவஞான போதம். இதற்கு வழிநூல் சிவஞான சித்தியார். இந்தத் தொடரில் உமாபதி சிவாசாரியார் எட்டு நூல்கள் செய்துள்ளார். இந்த நூல்கள் வெளிவந்த பின்னர் சைவசித்தாந்த இலக்கியம் அளவற்ற பெருமதிப்பைப் பெற்றது என்று. சொல்வார்கள்.
சிதம்பரத்துக்கு மற்றொரு மதிப்பைக் கொடுக்கும் சம்பவம் தேவார ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. சிதம்பரம் கோயில் தென்மேற்குப் பிராகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் இருக்கிறது. இது தேவார மண்டபம் என்றும் வழங்கப்படும். இங்கேதான் மூவர் தேவாரப் பதிகங்களையும் விக்கிரம சோழனுக்கு மந்திரியாயிருந்த காளிங்கராயன் (பன்னிரண்டாம் நூற்றாண்டு) செப்பேட்டில் எழுதிப் பாதுகாப்பாக வைத்தான் என்று கல்வெட்டுச் சான்றுள்ளது. கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிச்சென்ற பல்லாயிரக் கணக்கான தேவாரப் பாடல்களும் அவ்வப்போது சிலரால் ஏட்டில் எழுதப்பட்டன. அவை செவிவழிப்பாடமாகவும் பாராயணம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஞானசம்பந்தர் வரலாற்றைப் பார்க்கும்போது அவர் பின்னால் சம்பந்த சரணாலயர் என்பவர் எப்போதும் யாத்திரையில் தொடர்ந்து சென்றார் என்றும், சம்பந்தர் அவ்வப்போது திருத்தலங்களில் பதிகம் இயற்றிப் பாடும்போது அதை உடனுக்குடன் சரணாலயர் ஏட்டில் எழுதினார் என்றும் தெரிகிறது. அதேபோல்தான் அப்பரும் சுந்தரரும் தல யாத்திரை செய்து தேவாரப் பாடல்களை இயற்றிப் பாடும்போதெல்லாம் அவர்களோடு பின் சென்ற சீடர்கள் சிலர் ஏட்டில் எழுதி வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்படியாக எழுதப்பட்ட சில ஏட்டுச் சுவடிகள் அங்கங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அழிந்து போய்விட்டன.
இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சென்றபின் தமிழ்நாட்டுக் கோயில்களில் திருமுறை பாடுவதைக் கட்டாய நியதியாக்க வேண்டு மென்று விரும்பிய ராஜராஜ சோழன், தேவார ஏடுகள் கிடைக்கப் பெறாமல் மனம் நொந்தான். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் சிதம்பரத்துக்கு மேற்கேயுள்ள திருநாரையூர் என்ற தலத்தில் ஒரு சிறு பிள்ளை, நம்பியாண்டார் நம்பி என்ற பெயரில், தாம் வணங்கும் விநாயகருடன் பேசுகின்றான் என்ற அற்புதத்தைக் கேள்விப்பட்ட மன்னன் அங்கே போய், தேவார ஏடுகள் கிடைக்கும் மார்க்கத்தை விநாயகரிடம் கேட்டுச் சொல்லுமாறு வேண்டினான். திருவருளால் நம்பி அறிந்து, சிதம்பரம் கோயிலுள், வடமேற்குப் பிராகாரத்து மூலையில் ஓர் அறை பூட்டப்பட்டிருக்கிறதென்றும் அதனுள்தான் தேவார ஏடுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்ட ராஜராஜன் சிதம்பரத்துக்கு வந்து விசாரித்தபோது தீக்ஷிதர்கள் அந்த அறைக் கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். கதவின் பூட்டிலே நாயனார் மூவரது முத்திரை பொறிக்கப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் நேரில் வந்து அனுமதி கொடுத்தாலல்லாது திறக்க முடியாதென்றும் சொன்னார்கள். அரசன் உடனே நாயனார் மூவரின் விக்கிரகங்களை அலங்கரித்து எழுந்தருளச் செய்து தேவார ஏடுகள் பூட்டியிருந்த அறையின் முன் நிறுத்தி, தீக்ஷிதர்களிடம், “நாயன்மார்களே நேரில் இங்கே எழுந்தருளி விட்டனர். இனி நீங்கள் அறையைத் திறக்கலாம்” என்றான்.
தில்லைவாழந்தணர்கள் கதவுகளைத் திறந்துவிட்டனர். உள்ளே ஒரே கறையான் புற்றாயிருந்தது. அதை அகற்றிப் பார்க்கும்போது பல ஏடுகள் தென்பட்டன. அவற்றின்மீது எண்ணெயைச் சொரிந்து ஏடுகளை உடையாமல் வெளியே எடுத்து, செல்லரித்துப் போனவற்றை நீக்கி, எஞ்சிய ஏடுகளிலுள்ள தேவாரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பியே ஒரு வரலாற்று ஒழுங்கின்படி திருமுறைகள் என்ற பெயரில் ஏழு திருமுறைகளாக வகுத்துக் கொடுத்தார் என்பது கர்ணபரம்பரையாக வழங்கும் கதை.
இந்தத் தேவார ஏடுகளை வெளிக்கொணரச் செய்த ராஜராஜ சோழன் எல்லாக் கோயில்களிலும் இவற்றைத் ‘திருப்பதியம்’ என்ற பெயரில் நித்தியமும் பாடவேண்டும் என்று சட்டம் பிறப்பித் திருந்தான். பல கோயில்களில் திருப்பதியம் பாடுவதற்கென்றே சில பாடகர்களை நியமித்திருந்தான். அந்தப் பரம்பரையில் இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் தேவாரம் பாடுவதற்கென்றே ஓதுவார்கள் இருப்பதைக் காணலாம்.
தில்லை நடராஜர் கூத்துகந்த பெருமான் என்ற காரணத்தால் கோயிற் சிற்ப வேலைகளிலெல்லாம் நடனக்கலையின் வடிவங்களைச் சேர்த்திருக்கிறார்கள். கிழக்குக் கோபுர வாயிலிலும் மேற்குக் கோபுர வாயிலிலும் பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட நூற்றெட்டு வகைக் கரண பேதங்களைப் புடைச் சிற்பங்களாக அமைத்து, அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொண்டைமண்டலத்தில் தனியரசு நடத்திய காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஒரு பரதக்கலை வல்லவன் என்பதையும் அவனே இந்தத் தாண்டவ லக்ஷண சிற்பங்களை ஏற்படுத்தியவன் என்பதையும் முன்பு நாம் சேந்தமங்கலத்தைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பிட்டிருக்கிறோம். இந்த நடன சிற்பங்களைப் பற்றிப் பல அறிஞர்கள் பல நூல்கள் எழுதியுள்ளனர்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன