ப.மதியழகன்/தடம்

விருட்சம் நடத்தும் 49வது இணையகால கவியரங்கம்
நாள்: 28.4.24 தேதி: ஞாயிறு

தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்
ஊரின் பெயர் மட்டும் தான்
ஞாபகமிருக்கிறது
அதோடு நான் வழுக்கி விழுந்த
பாசி படர்ந்த படித்துறை
சிதிலமடைந்த சிவன் கோவில்
காவல்காக்கும் எல்லையம்மன்
கோவிந்தராஜ் வாத்தியார்
கூரை வேய்ந்த பள்ளிக்கூட அறை
பட்டணத்திற்கு கொண்டுபோய்விடும்
அரசுப் பேருந்து
வித்தியாசமாக குரலெழுப்பும்
ஐஸ் வண்டிக்காரன்
வருடம் முழுவதும்
வறண்டு போய் கிடக்கும் ஆறு
மயானத்திற்கு கிழக்கே
போகும் ரயில் தண்டவாளம்
கன்னத்தில் குழிவிழ
சிரிக்கும் வாணி அக்கா
பாவாடை சட்டையில்
கண்களுக்கு தேவதையாக
தெரிந்த ரேவதி
மங்காத்தா விளையாட
கூப்பிடும் அரும்பு மீசை அண்ணன்கள்
எங்கோ சிறு புள்ளியாக
மறையும் நூலறுந்த பட்டம்
காலில் முள் தைத்ததை
மறந்து தட்டானை வேட்டையாடியது
வீட்டைக் காவல் காக்கும்
நொண்டி நாய்
முதல் முறையாக தூண்டிலில்
மாட்டிய மீன்
பூஜை அறையில்
படமெடுத்து ஆடிய நல்லபாம்பு
தூர்தர்ஷனில் நிழல்கள்
படம் பார்த்த துபாய் வீடு
பால்சோறு ஊட்டி வளர்த்த
நாய்க்குட்டி
தினமும் கல்லடிபடும் புளியமரம்
வம்புக்கு இழுப்பதையே
வாடிக்கையாகக் கொண்ட
கோனார் வீட்டு சுள்ளெறும்பு
நகரத்து வாழ்க்கைக்கு
பழக்கப்பட்டுவிட்ட போதும்
பால்யத்தின் தடம் பதிந்த
மண்ணை எப்போது பார்ப்போம் என
உள்ளுக்குள் ஏங்கிக்
கொண்டுதான் இருக்கிறேன்!

One Comment on “ப.மதியழகன்/தடம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன