பா.ராகவன் முகநூலில் எழுதியது

சிறிய விஷயங்களில் சிறப்பாக விளக்கு பெறும் கலையில் நான் விற்பன்னன்.

ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ் கீழே விழுந்துவிடும். அல்லது திருகும் வேகத்தில் பாடுவது நின்றுவிடும். திருக வேண்டாம்; சொருகினால் போதும் என்பது தெரியும். ஆனால், உலகுக்கே ஒழுங்காக வேலை செய்யும் அக்கருவி எனக்கு மட்டும் செய்யாது. இதனாலேயே ஆப்பிள் ஏர்பாட் வாங்கும் ஆசையை நிரந்தரமாகத் தவிர்த்திருக்கிறேன்.

பல்லாண்டுக் காலமாக ஒரு சோனி வயர்ட் ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் நடைப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அது ஏற்கெனவே மண்டை பெருத்த மகாதேவனான என் சிரத்தைத் திரிசிரமாக்கிக் காட்டும். பிராந்தியமே என்னை ஒரு வினோத ஜந்துவைப் போலப் பார்க்கும். ஒரு கட்டத்தில் அது நடையை பாதிக்கத் தொடங்கியதால் பாட்டு கேட்பதை நிறுத்திவிட்டு, கிண்டிலை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் முப்பது, நாற்பது பக்கங்கள் படிக்க முடிந்தது. ஆனால் நடந்து முடித்ததும் வழக்கத்தினும் களைப்பாகிவிடும். சரிப்படவில்லை.

என் மனைவி பலநாள் போதனை செய்து, திட்டி, சொல்லிக் கொடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வசதியுள்ள ப்ளூடூத் இயர்போனைப் பழக்கினார். இதில் ஒரு சௌகரியம் என்னவெனில், காதுக் குமிழ் கீழே விழுந்தாலும் கருவி தரையில் விழுந்து மாளாது. கழுத்தில் மாட்டிக்கொண்டு புன்னகை மன்னன் கமலைப் போலத் தொங்கும்.

கல்லூரி மாணவியான என் மகள் ஐடி கார்டுடன் இதனையும் நிரந்தரமாகவே கழுத்தில் அணிந்துகொண்டு இருப்பதையும் அவளையொத்த பிற மாணவர்களும் இவ்வண்ணமே செய்வதையும் பார்த்து சிறிது நம்பிக்கை வந்தது. அவள் உபயோகித்துக் கடாசிய இயர்போன் ஒன்றை மாட்டிக்கொண்டு நடைப் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினேன்.

என் காதில் அப்படி என்ன பிரச்னை என்று உண்மையிலேயே தெரியவில்லை. பத்தடிக்கு ஒருமுறை அது கழண்டு விழுந்துகொண்டே இருந்தது. இருப்பினும் விடா முயற்சியின் காரணமாக ஏதோ ஒரு நன்னாளில் அது என் காதுகளின் காதலை ஏற்றுக்கொண்டு தங்கத் தொடங்கிவிட்டது. சொகுசாகப் பாட்டு கேட்டுக்கொண்டு நல்லபடியாகத்தான் நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென ஒருநாள் அக்கருவி மரணத் தறுவாயை அடைந்தது. முழு சார்ஜ் ஏற்றினாலும் முதல் பாடலின் பாதியிலேயே எவனோ ஒரு தென்னமெரிக்கன் வந்து விடைபெறுகிறேன் நண்பனே என்று இசுப்பானியத்தில் சொல்லிவிட்டுச் செத்துவிடுவான்.

சரி, வேறு வாங்கலாம் என்று நினைத்தபோது அட்மின் ஆனவர் மறுத்தார். மகளிடம், பயன்படுத்தாத ஏர்டொப் 441 என்னும் ப்ளூடூத் கம்மல் உள்ளது. அதன் கோவிந்தா மஞ்சள் நிறம் பிடிக்காமல் (நான் வாங்கித் தந்ததுதான்) அவள் இன்னொரு வசதியான கம்மல் வாங்கிவிட்டதால் இந்தப் பழைய நிராகரிக்கப்பட்ட நீலப்பல் கம்மலை அணிந்துகொண்டுதான் நான் நடைக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவானது.

இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது. அதுகூடப் பரவாயில்லை. என் கைபேசியுடன் pare ஆகிற விஷயத்தில் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்ளும். சில நாள் அதன் செல்லப்பெட்டியைத் திறக்கும்போதே பேசியுடன் இணைந்துகொள்ளும். சில நாள் புரட்டிப் போட்டு அடித்தாலும் இணையாது. வேறு வழியின்றி கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்தில் உள்ள மகளிடமே சென்று நிற்பேன். அவள் தொட்டால் மட்டும் உடனே இணையும் பித்தலாட்டத்தை அது எங்கிருந்து கற்றது என்று தெரியாது.

இணைவது ஒரு பிரச்னை என்றால் முன்சொன்ன, நடக்கும்போது நட்டுக்கொண்டு விழும் பிரச்னைக்கு அவளாலும் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த சில மாதங்களாகப் பாட்டுக் கேட்கவோ, தொலைபேசியில் யாருடனாவது பேசிக்கொண்டோ நடப்பதே பெரும் பிரச்னையாக இருந்தது. காதில் உள்ள உருளைக்கிழங்கு போண்டா கீழே விழுந்துவிடாதிருப்பது குறித்து மட்டுமே சிந்தித்தபடி நடப்பது ஒரு பெருங்கொடுமை.

தாங்கவே முடியாமல் இன்று காலை அமேசானில் ஒரு நீலநிறத் தாலியை ஆர்டர் போட்டேன் (JBL Tune 215BT) மூவாயிரம் விலை. ஐம்பது சதமானத் தள்ளுபடி. மேலுக்கு அமேசான் பே க்ரெடிட் கார்ட் உபயோகித்து நான் சேகரித்து வைத்திருந்த 960 ரூபாயைக் கழித்துக்கொள்ளச் சொல்லி, ரூபாய் 539க்கு பேரத்தை முடித்தேன். சரக்கு இப்போது சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கிறது.

நாளை காலை முதல் நடையுடன் கூடிய நயமான சங்கீத வேள்வி நிச்சயம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன