
என்னுடைய 14 வயதில் குடும்ப விளக்கு புத்தகத்தின் உள்தாளில் அச்சாகி இருந்த பாரதிதாசன் படத்தை தனியே கிழித்து அதற்கு சட்டகம் செய்து வீட்டில் கொண்டு போய் மாட்டினேன்.
என் அப்பா இவரை பாண்டிச்சேரியில் எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால், பெயர் ஞாபகம் வரல என்றார். அவரது தமிழறிவு அவ்வளவுதான்.என் குடும்பத்தில் தமிழ் மீது மையல் கொண்ட முதல் நபர் நான்.
அன்று தொடங்கியது பாவேந்தர் சங்காத்தம் இன்றுவரை அதில் சிறு கீறல் இல்லை.
அப்போது எல்லாம் பாவேந்தர் கட்சி நான். எதிர்க்கட்சியாக பாரதி இருந்தார். கொஞ்சம் அறிவு எட்ட எட்ட எதிரி மனப்பாங்கு மறைந்து பாரதியைப் படிக்கத் தொடங்கினேன். அதற்கு வழிப்பலகையாக நின்றவர் பாரதிதாசன்தான்.
தன் வாழ்நாள் முழுக்க பாரதியைச் சுமந்த பேராசான்.
இன்று பாவேந்தர் புகழைப் பரப்ப விரும்பும் பலர் பாரதியை வசை சொற்களால் வறுத்தெடுப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். அவர்கள் பாவேந்தரையும் முழுதாக படித்ததில்லை. பாரதியையும் படிப்பதில்லை. வெறும் வறட்சி நம்பிக்கையை தூக்கிப் பிடித்தே காலத்தைக் கழிக்கிறார்கள்.
இது புரட்சிக் கவி காலம் தொட்டே நடக்கும் செயல்தான். புதிதில்லை. இதில் வியப்பு என்னவெனில் தன் வாழ்நாள் எல்லாம் பாரதிதாசன் தன்பெயரிலேயே பாரதியைத் தூக்கிச் சுமந்தார்.
அவர் போற்றிய இலகு பாரதியை இவர்களின் வன்மம் தீர்க்க சுடு சொல் சொல்லி பேசுகிறார்கள்.
பாவேந்தர் விரும்பி ஏற்ற பெயர் பாரதிதாசன். அந்தப் பெயரை விரும்பாதவர்கள் அவரைப் புரட்சிக் கவிஞர் என்றே அழைக்கின்றனர்.
அதிலும் ஒரு நயம் உண்டு. நகைமுரண் உண்டு. புரட்சி என்ற புதிய சொல்லை தமிழுக்கு கொடைதாக கொடுத்ததே பாரதிதான். விடுதலை என்ற புது சொல்லை தமிழுக்குத் தந்தவன் பாரதி. வேறு எங்கும் அந்தச் சொல் தமிழில் இருந்ததில்லை.
பாரதிதாசனிடம் இருந்து பாரதியை பிரிக்க நினைக்கும் அன்பர்களுக்கு ஒன்று விளங்கவில்லை. பாரதிதாசன் என்றாலும் புரட்சிக் கவி என்றாலும் அந்த வண்டி போய்ச் சேரும் ஊர் எட்டயபுரம்தான்.
வாழ்க பாவேந்தர்!

சத்தியமான வார்த்தை