பா.ராகவன் பதிவு முகநூலில்

பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று விஷ்ணு கோயில். சென்ன கேசவப் பெருமாள். இன்னொன்று சிவன் கோயில். சென்ன மல்லீஸ்வரர். இரண்டும் நல்ல நீள அகலங்கள் கொண்ட பிரம்மாண்டமான, புராதனக் கோயில்கள். இங்கே தென்கலை திருமண். அங்கே திருநீற்றுப் பட்டை. சுவர்களில் உள்ள இந்த ‘லோகோ’க்களைப் பார்த்தால்தான் இருவேறு கோயில்கள் என்று தெரியும். மற்றபடி பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும் இருக்கும். இரு கோயில்களுக்கும் தனித்தனியே நுழைவாயில் உண்டென்றாலும் உட்புறமாகவும் போய் வரலாம்.

விஷயம் அதுவல்ல. சென்னை என்கிற நகரம் உருவாகத் தொடங்கியபோது கட்டப்பட்ட முதல் கோயில்கள் இவை. உயர்நீதி மன்றக் கட்டடம் உள்ள இடத்தில் ஆதியில் இந்தக் கோயில்கள் இருந்திருக்கின்றன. அப்போதைய நீள அகலங்கள் தெரியவில்லை. பிரிட்டிஷ் அரசு கோயில்களை இடிக்க முடிவு செய்தபோது மக்கள் எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி, மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரிடம் பேசி, தேவராஜ முதலியார் தெருவில் இருந்த அவருக்குச் சொந்தமான இடத்தை விலை கொடுத்து வாங்கி 1762 ஆம் ஆண்டு இந்த இரு கோயில்களையும் முன்பிருந்த அமைப்பிலேயே உருவாக்கி அளித்திருக்கிறார்கள்.

இருநூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த இரு கோயில்களும் இந்தப் பகுதியில் ஒட்டி உறவாடியபடிதான் உள்ளன. அவ்வப்போதைய திருவிழாக்கள், பெரிய உற்சவங்கள் எதற்கும் குறைவில்லை. வருகிற பக்தர்கள் இரண்டு கோயில்களுக்கும் போகாதிருப்பதில்லை.

இன்று இந்த இரு கோயில்களுக்கும் சென்று வந்தேன். காஞ்சீபுரத்தில் ஒரே கோயிலுக்குள் ஒரே ஐயங்கார் கோஷ்டி வடகலை தென்கலை சண்டை போட்டுக்கொண்டு வருஷக் கணக்காக வரதராஜப் பெருமாளையே கேவலப்படுத்திக்கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.

இன்னும் ஒரு வரி எழுதினால் இந்தக் குறிப்பு முழுமை பெறும். வேண்டாம். இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன