மதுவந்தி/பலன்

ஆற்றங்கரை படித்துறை
அரசமரத்தடி பிள்ளையார்.
வேண்டிக்கொண்டு
ஆற்றில் காசு வீசினால்
வேண்டியது நடக்குமென
நம்பிக்கை.

வீசியவர் போன பின்பு
ஆற்றில் மூழ்கி காசுகள்
தேடியெடுத்து போவார்
சிறுவர் சிலர்,

ஆற்றில் மூழ்கி
மணலையள்ளி
சல்லடையில் சலித்துக்
கொண்டிருந்தான் சிறுவன்.
நேரம் நிறைய ஆனாலும்
ஒன்றும் கிடைக்கவில்லை.

வெறுங்கையாடு கிளம்பிய
பையனைக் கூப்பிட்டு கொஞ்சம்
காசு கொடுத்தேன்.
இத்தனை நேரம் தேடியும்
ஒண்ணும் கிடைக்கலியே,
வருத்தப் படாதே என்றேன்.

அதனாலென்ன,
சல்லடை சுத்தமாச்சு
என்றபடி கிளம்பினான்.

One Comment on “மதுவந்தி/பலன்”

Comments are closed.