
இறைவன் அருள் புரிய வேண்டும்
தன்முனைப்பு தற்பெருமை பேசுவோர் விலக்கி
தானாய் மலர்ந்து மணம் வீசும்
படைப்பு மட்டும் வாழ.
இறைவன் அருள் புரிய வேண்டும்
விருதிற்கு விண்ணப்பித்துப் பின்னாலே அவதாரம்
பலகாட்டிப் படைப்பாளி நானென்பார் நஞ்சுள்ளம்
தீண்டிடாது கருணை கிட்டிட.
இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.
இறைவன் அருள் புரிய வேண்டும்
சாதியும் சிபாரிசும் பணமும் வன்முறையும்
தகுதியிவை போதுமென்ற பெருமை சூட்டிய
பேய்கள் நீங்கிட வேண்டி.
இறைவன் அருள் புரிய வேண்டும்
நல்லறம் நல்லொழுக்கம் நல்லுழைப்பு நல்படைப்பு
இவ்வுலகம் பேறடைய போதுமென்று படைத்திடவே
சொல்லும் பொருளும் உதவிட.
