எம்.டி.முத்துக்குமாரசுவாமி/புளிப்பு காட்டுதல்


——
முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு ஊரெல்லையில் இருந்த புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி சாவதைப் போல நாக்கைத் தொங்கவிடுவது என்று பாவனைகள் மட்டும் செய்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். சில சமயங்களில் தன் கையில் மிருந்தங்கம் இல்லாமலும் நஸ்ருதீன் இந்த பாவனைகளை நடித்துக்காட்டுவார்.
இதை அவர் தொடர்ந்து செய்து மிருதங்க வித்வானாக ஓரளவு புகழும் பெற்றுவிட்டார். சென்னை நகரக் கல்லூரி மாணவர்களுக்கு நஸ்ருதீனின் செயல்கள் புரிபடவில்லை. சென்னை இலக்கியத் திருவிழாவில் நஸ்ருதீனிடம் மிருதங்க வாசிப்பு பற்றி பல கேள்விகளை கேட்டனர். கேள்வி கேட்ட மாணவர்களை எல்லாம் மைக்கைத் தூக்கி அடிப்பது, போய்டு அப்படியே போய்டு என்று விரட்டுவது, நீ போட்டிருக்கிற டிரஸ்லேயிருந்தே தெரிது நீ யாருன்னு அப்படி இப்படி என்று நஸ்ருதீன் ஏகப்பட்ட கலாட்டாக்களில் ஈடுபட்டார். எல்லோருக்கும் தமிழ்நாடு ஜனநாயக சமூகம்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

ஒருவர் மட்டும் தைரியமாக முல்லா ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு நஸ்ருதீன் கொரிய திகில் படங்களை நகலெடுக்கும் மிஷ்கினே அப்படி சென்னை இலக்கியத் திருவிழாவில் நடந்துகொண்டபோது மிருதங்கச் சக்கரவர்த்தி சிவாஜியிடம் மிருதங்கம் கற்ற நான் ஏன் அப்படி புளிப்பு காட்டக்கூடாது என்று கேட்டார்.
——-