இராசேந்திர சோழன்/அபிலாஷ் சந்திரன்

இராசேந்திர் சோழன் எனக்கு மிகவும் பிடித்த புனைவெழுத்தாளர். அவரை நான் சந்திக்கவோ போனில் பேசவோ வேண்டுமென விரும்பினேன். ஆனால் அவர் நலிவுற்று இருப்பதாக தகவல் வந்ததால் தொந்தரவு பண்ணக் கூடாது என இருந்துவிட்டேன். இப்போது அவர் போய்விட்டார்.

அவரது கதைகள் பாலியல் பிறழ்வுகளை எடுத்துக்கொண்டது ஒரு தோரணை தான், அதைத் தாண்டி மனித நடத்தையில் எதையோ புரிந்துகொள்ள பரிசீலிக்க அவர் விரும்பினார் – துரதிர்ஷ்டவசமாக தமிழில் நாம் இதைப் புரிந்துகொள்ளவில்லை.

நம்முடைய விசித்திரங்கள், அவற்றுக்கு நாம் அளிக்கும் நியாயங்கள், நாம் புனையும் வேடங்கள், இந்த பாசாங்கை அவர் உளவியல் சார்ந்து சித்தரித்தார். பாலியல் இச்சை ஒரு தீவிரத்தை உடனடியாக அளித்தது. பிறழ் பாத்திரங்கள் எவ்வளவு இயல்பாக தம் பாவனைகளை தாமே எதிர்கொண்டார்கள் என்பதே வாசகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது அங்கு மருகுதல், குற்றமன்னிப்பு கோரல், அழுது மன்றாடுதல், தியாகம் போன்ற மானுடவாத போலித்தனங்களுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. இந்த போலித்தனங்களே நவீன மனிதனின் போதை மருந்துகள். அவனை தன்னைக் கடந்து போக, ஒரு மதசார்பற்ற கடவுளைக் கண்டடைய உதவுபவை. இராசேந்திர சோழன் அந்த போதையை ஒருபோதும் அளிக்கவில்லை. இயல்பாகவே வாசக மனம் ஒரு யுடர்ன் எடுத்து பிறழ்வுகள் மீது கவனத்தை நீட்டித்தது; இயல்பான பாவனைகள் எனும் கசப்பை காணாமல் தவிர்க்க சர்ச்சைகளை உருவாக்கி உறைந்தது. இராசேந்திர சோழனின் கதையொன்று மிக அண்மையிலும் சர்ச்சையை உருவாக்கியது நாம் இந்த மானுடவாத போலித்தனங்களிலே இன்னும் குடியிருக்கிறோம் என்பதாலே.

எனக்கு இராசேந்திர சோழனின் புனைவுலகம் ஆதவனுக்கு நெருக்கமானதாகத் தோன்றும். இருவருமே மானுடவாத போலி பாவனைகளுக்கு லாடம் அடித்தவர்கள்.

மனிதர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எழுதுவது போதை மருந்து வியாபாரம் (பிரபஞ்சன் போன்றோர்கள் செய்தது). மனிதர்கள் எப்படி தெரிகிறார்களோ அப்படியே காட்டுவதும், அவர்களை சில கேள்விகளை வைத்து பரிசீலிப்பதுமே எழுத்து. நேர்மையான எழுத்து.

அந்த நேர்மையான படைப்பாளிக்கு அஞ்சலி!