தம்பி ஸ்ரீநிவாசன்/வேலை கிடைத்தது!

சுதேசமித்திரன் இதழ்தொகுப்பு

நம்பவே முடியவில்லை அந்தச் செய்தியை! இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அழுத்தமாக எழுதியிருக்கிறதே.
பகல் சாப்பாட்டோடு என் மனைவி அனுப்பிய கடிதம் இதுதான்.
‘நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடிந்தால் மாலையில் பார்த்து, ஒன்றாக அழைத்துக்கொண்டு வரவும்.’
மைத்துனனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது என்ற செய்தி, எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அளவில்லாத ஆத்திரத்தைக் கிளறிற்று. ‘மடையன்! இவனை இனிமேல் ஒரு வேலைக்கும் மனுப் போடாதே என்று கண்டித்துச் சொல்லி யிருக்கும்போது, பெரிய கெட்டிக்காரன்போல் ஒரு வேலையில் சேரப்போகிறானாம். எவனோ இன்னொரு மடையன் இவனுக்கு வேலையும் தருகிறானாமே!’ என்று முணுமுணுத்தேன்.
எப்படியோ பகல் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டேன். ஆனால், காரியாலய வேலையில் மனம் ஈடுபடவில்லை. இந்த மணி கொடுக்கும் பிரச்னைகள் எனக்குத் தீராத தலைவலியை உண்டாக்கி விட்டன.
மணி நல்ல பையன்தான். ஒரு கெட்ட எண்ணம், கெட்ட பழக்கம் கிடையாது. ஆனால், படு சோம்பேறி. எப்போதும் தூங்கி வழிவான். நல்ல விழிப்போடு சாப்பிட உட்கார்ந்தால், மோர் சாதம் சாப்பிடுவதற்கு அவனைத் தட்டி எழுப்ப வேண்டும். தெருவிலே நடக்கும்போது, பேருந்திலே ஏறி உட்கார்ந்தவுடனே எப்போதும் அவனுக்குத் தூக்கம் தயாராக வந்துவிடும். தூக்கம் வருவதற்கு எத்தனையோ பேர் மருந்தும் மாத்திரையும் சாப்பிடுகிறார்களே அவர்களெல்லாம் மணியைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டும்.
அன்று ஒருநாள் பத்திரிகை இரவல் வாங்கிவர கோபாலன் வீட்டிற்கு அவனை அனுப்பினேன். மணி அவர் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தான். கோபலன் வந்து கதவைத் திறந்த பிறகும், அவன் கை கதவைத் தட்டிக்கொண்டே இருந்தது! அவன் கண் மூடியபடி இருந்தது.
கோபாலன் அவனைத் தட்டி எழுப்பி ‘ஏண்டா! நான்தான் கதவைத் திறந்து விட்டேனே? ஏன் தட்டுகிறாய்?’ என்றார்.
‘அது சரி, இப்போதுதானே நீங்கள் கதவைத் திறந்தீர்கள்? ஒரே ஒரு தடவை கதவைத் தட்டிவிட்டு ஓய்ந்தால், நான் தூங்கினாலும் தூங்கிவிடுவேன். என்னை எழுப்ப யாருமே வரமாட்டார்கள். அதனால் நான் எப்போதும் வீட்டு வாசல் கதவைத் தட்டிக் கொண்டேயிருப்பது வழக்கம்!’ என்று பதிலளித்தானாம் மணி. கோபாலன் இந்தச் சம்பவத்தை அலுக்காமல், எல்லாரிடமும் சொல்லி, என் மானத்தை வாங்குகிறார்!
எப்படியோ இந்த மணி ‘படித்தேன்’ என்று பேர் தேடிப் பட்டணம் பண்ணிவிட்டு, இப்போது வேலை வந்துவிட்டான். இவனுக்கு நான் வேலைக்கு செய்த முயற்சிகள் அவனுக்கு ஒன்றும் நன்மை செய்யவில்லை. இருந்த சில நண்பர்களை இம்முயற்சிகளின் பயனாக இழந்தேன்.
என் நண்பனின் பால் டிப்போவில் மணியை வேலைக்குச் சேர்த்தேன். இரண்டாவது நாளே அவன் திரும்பி விட்டான். ஓர் ஆழாக்கு பால் எடுப்பதற்காக, பால் அண்டாவின் குழாயைத் திறந்தவன், அப்படியே கண் அயர்ந்து விட்டான்! ஆழாக்கு நிரம்பியதோடு, டிப்போவின் தளமே பாலால் நிரம்பி வழிந்தது!
அவன் அந்த வேலைக்குப் போனதன் பயன், எனக்குப் பதினாறு ரூபாய் நஷ்டம்!,
ஓரிடத்தில் சைக்கிள் ப்யூன் வேலை வாங்கிக் கொடுத்தேன். சைக்கிளை எங்கோ தூக்கத்திலே மோதி, அதற்கு என்னை நஷ்ட ஈடு கொடுக்க வைத்துவிட்டான் பையன். ‘நல்லவேளை, மணி பிழைத்தானே, அதைப் பாருங்கள். ‘அவனுக்குப் பதினெட்டாவது வயதில் ஒரு கண்டம் இருக்கிறது என்று சங்கர ஜோஸ்யர் சொன்னது உண்மையாகி விட்டது’ என்றாள் மனைவி.
‘எனக்கும் இப்போது ஏதோ போதாத காலம்தான் என்பது ஜோஸ்யர் சொல்லாமலேயே தெரிகிறது!’ என்றேன் நான்… மெதுவாகத்தான்!
இப்படிப்பட்ட ஓரிரு அனுபவங்களுக்குப் பிறகு, ‘அப்பா மணி, உன்னை வேண்டிக்கொள்கிறேன். நீ வேலைக்கும் போக வேண்டாம், சம்பாதிக்கவும் வேண்டாம். எனக்குச் செலவு வைக்காமலிருந்தால் சரி’ என்று வேண்டிக்கொண்டதில் வியப்பில்லையே.
இப்போது என் கட்டளையை மீறி ஓரிடத்துக்கு மனுப்போட்டு வேலையும் சம்பாதித்துக்கொண்டு விட்டானாம், எனக்குத் தெரியாமல்! ‘இது என்ன விபரீதத்திற்கு அறிகுறியோ!’ என்று என் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
கோவிந்தராம் கேசவ்ராம் ஸ்தாபனம் மிகப் பெரியது. விலையுயர்ந்த பண்டங்களையே வியாபாரம் செய்யும் இடம் அது. அந்த இடத்தில் வேலை செய்வோரை நான் பார்த்திருக்கிறேன். சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் இல்லாவிட்டால், அங்கே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் மணி என்ன குப்பை கொட்டப் போகிறான்! என்ன நஷ்டஈடு தரும்படி இருக்கப் போகிறதோ!
முதலில் அவனுக்கு அங்கே என்ன வேலை என்பதுகூட அல்லவா தெரியவில்லை?
சட்டென்று டெலிபோனை எடுத்தேன். கோவிந்தராம் கேசவ்ராம் ஸ்தாபனத்தை அழைத்தேன். ‘இன்று புதிதாக உங்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் மணி என்பவரோடு பேச வேண்டும்’ என்றேன்.
எதிர்முனையில் பதிலளிக்கச் சற்றுத் தாமதமாயிற்று. பிறகு, ‘மன்னிக்க வேண்டும், இப்போது மணியைத் தொந்தரவு செய்ய முடியாது. அவர் டியூடியில் இருக்கிறார்’ என்று யாரோ சொன்னார்கள்.
என் வியப்பு அதிகமாயிற்று. ‘தொந்தரவு செய்யமுடியாத அளவு டியூடியில் இருக்கிறாரா இந்த ஆபிசர்?’ என்று நினைத்துக்கொண்டு, ‘டியூடி எப்போது முடியும்?’ என்று
கேட்டேன்.
‘இரவு எட்டு மணிக்கு!’ என்று பதில் வந்தது.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. நினைவெல்லாம் மணியைச் சுற்றியே இருந்தது. அந்தத் தூங்குமூஞ்சி ஏடாகூடமாக ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டுமே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டேன். கை வேலையில் சற்றும் கவனம் செல்லாததால், நாலு நாலரை மணிக்கேஅனுமதி
பெற்றுக்கொண்டு, நேரே கோவிந்த்ராம் கேசவ்ராம் கடைக்கு டினேன். அங்கே போய்ச் சேரும்போது, மணி ஐந்திருக்கும். இரவு எட்டு மணிவரை டியூடி என்று போனிலே சொன்னார்கள். ஆனால், இதற்குள்ளே அவனை டிஸ்மிஸ் செய்திருந்தாலும் வியப்பில்லை’ என்றுதான் நான் நினைத்தேன்.
வாசலில் பெரிய கூட்டம் இருந்ததைக் கண்டதும், எனக்குத் திகீர் என்றது. மைத்துனன் திருவிளையாடலின் பலன்தானோ என்று விரைந்தேன். வேறொன்றுமில்லை, கடை வாசலில் கண்ணாடி அறையில் வைத்திருந்த எதையோ பார்க்கத்தான் கூட்டம் என்பதை அறிந்து, நிம்மதியடைந்து உள்ளே சென்றேன். மணியைப்பற்றி விசாரித்தேன்.
‘மணியா? அவர் வாசலிலே கண்ணாடி அறைக்குள்ளே இருக்கிறாரே, பார்க்கவில்லையா?’ என்று யாரோ பதில் சொன்னார்கள்.
மறுபடியும் திகிலோடு வாசலுக்கு விரைந்தேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு கண்ணாடி அறையை நெருங்கினேன்.
திடுக்கிட்டுப் போனேன்! அங்கே கண்ணாடி அறைக்குள்ளே, போடப்பட்டிருந்த ஒரு அழகான கட்டிலிலே, மெத்தென விரிக்கப்பட்டிருந்த மெத்தையிலே, சுகமாக உறங்கிக்கொண்டிருந்தான், மணி! அதைப் பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம். கட்டிலில் கட்டியிருந்த அட்டை எனது வியப்புக்கு விடையளித்தது.
‘களைத்த உடலுக்கும் சோர்ந்த மனத்துக்கும் ஓய்வு தரும் எங்கள் மெத்தை. அதில் படுத்த உடனே சுகமான இதோ படுத்திருப்பவரைப் பாருங்கள்!’
நித்திரை வரும்.
܀܀
(நவம்பர் 23, 1958)

One Comment on “தம்பி ஸ்ரீநிவாசன்/வேலை கிடைத்தது!”

Comments are closed.