அழகியசிங்கர் / இன்னொரு புத்தகம் கொண்டு வந்து விட்டேன்

துளி – 220

    சென்னைப் புத்தகக் காட்சி போது நான் 7 புத்தகங்கள் கொண்டு வந்தேன்.  இதெல்லாம் டிசம்பர் மாதம் கொண்டு வந்தேன்.  
    ஒரே மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் முயற்சி செய்து கொண்டு வந்துள்ளேன்.  என் ஏழு புத்தகங்கள் தவிரத் தயாரிப்பு நிலையில் 3 புத்தகங்கள் வைத்திருந்தேன்.  
   புத்தகக் காட்சி எதிர்பார்த்தபடி நடந்து முடிந்து விட்டது.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் இதோ இன்னொரு புத்தகம் தயாராகி முடிந்து விட்டது. இதுவரை எட்டுப் புத்தகங்கள் வந்து விட்டன.  இன்னும் இரண்டு புத்தகங்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன.

ஒரு புத்தகத்தைத் தயாரிப்பதோடல்லாமல் இவ்வளவு பிரதிகள்தான் அச்சிட வேண்டுமென்ற கணக்கும் வைத்திருக்கிறேன்.
என் எட்டாவது புத்தகம் சாந்தமூர்த்தி என்பவரின் ‘ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்’ என்ற புத்தகம். இது ஒரு கட்டுரைத் தொகுப்பு. ஆனால் நான் எழுதியிருந்தால் இப் புத்தகத்தை ஒரு நாவலாக மாற்றி இருப்பேன்.
படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாத புத்தகம். ஜெயமோகன் என்ற எழுத்தாளரிடம் சாந்தமூர்த்தி காட்டுகிற அளவு கடந்த அன்புதான் இந்தப் புத்தகம்.
இப்படியெல்லாம் அன்பைச் செலுத்துபவர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் இந்தப் புத்தகம் படித்த பிறகு எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
ஆயிரம் மணி நேரத்தில் வாசிக்க வேண்டுமென்று பிடிவாதமாக முயற்சி செய்து வெற்றி பெற்ற ஆசிரியர். என்னன்ன புத்தகங்களைப் படித்தோம் என்று குறிப்பிடவே இல்லை. அப்படிக் குறிப்பிடாமல் எழுதியிருப்பதுதான் இதை ஒரு நாவலாக மாற்ற வேண்டுமென்று எண்ணம் எனக்கு உருவாகிறது.
நான ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலில் மாட்டிக்கொண்டு பெரிய தோல்வியைத் தழுவியவன்.
நான் வாசித்தபோது என்னன்ன புத்தகங்கள் படித்தேன் என்று கட்டுரை வடிவில் எழுதி விடுவேன்.
நான் ஒரு புத்தகத்தைப் படித்த பிறகு உடனே கட்டுரை மாதிரி எழுதி விடவேண்டும். இல்லாவிட்டால் நான் வாசித்தது எல்லாம் மறந்து விடும். அப்படி வாசித்தும் எழுதாமல் விட்டுவிட்ட புத்தகங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கும்.

விருட்சம் வெளியீடாக வந்துள்ள இப்புத்தகத்தின் விலை : ரூ.100. குகூள் பே எண்ணில் 9444113205 பணம் அனுப்பி புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.