முபீன் சாதிகா/இணக்கம்: குடும்பத்தை மீறாத இணக்கம்: பென்னேசன் கதையை முன்வைத்து..


……..
பென்னேசன் எழுதிய இணக்கம் என்ற சிறுகதை குறிப்பாக மதுவுக்கு அடிமையாகும் பாத்திரத்தை அடியொற்றி எழுதினாலும் மற்ற பல இழைகளும் அதில் உள்ளன. இந்தக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.
கௌரியின் கணவன் வாசு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன். ஓர் இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வராமல் போய்விடுகிறான். அவன் திரும்பி வரும் வரை மனைவியும் அவளுடைய குடும்ப நண்பன் சபேசனும் படும்பாடு கதையாகி இருக்கிறது. காவல்துறையிலும் அரசுத்துறையிலும் இருப்பவர்களிடம் சொல்லலாம் என்று சபேசன் நினைத்திருக்கும் போது அவன் போதையுடன் திரும்பிவருகிறான். எங்கோ சாலையில் படுத்துறங்கிவிட்டு வந்திருக்கிறான். அவனைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்துகிறாள் மனைவி. அவனால் நேரும் எந்தத் துன்பத்தையும் வெளிக்காட்டாமல் வீட்டிலேயே சமாளிப்பவள் அவள். அவனைக் குழந்தை போல் நடத்துகிறாள். சபேசன் அதனால் அதிருப்தி அடைகிறான். கணவனின் குடிப்பழக்கத்தினால் கௌரி படும்பாட்டைக் கண்டு அவளுக்கு உதவ முடியாத தவிப்பில் இருக்கிறான் சபேசன்.
…………..
இந்தக் கதை முன்வைக்கும் கருத்துகள்
1.மதுப் பழக்கம் தவறானது என்ற அறம் சார்ந்த சிந்தனை
2.மது அருந்துவது பண்பாட்டுச் சீர்கேட்டை உருவாக்கும்
3.மதுக்கு அடிமையாக இருப்பது சமூக அவமானம்
4.போதை அடிமையாவனவர்களால் சமூகப் பயனின்மை
5.போதை அடிமையாக இருந்தாலும் பொருட்படுத்தாத தன்மை
…………………
1.மதுப்பழக்கம் தவறானது
மதுவுக்கு அடிமையாக இருப்பது ஒரு பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் அது உடலைக் கெடுக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் பொருளாதார சீர்கேடு. குடும்ப உறவுகளுக்குள் பிணக்குகள் ஏற்படுவது போன்றவை. ஆனால் அது அறம் சார்ந்து பார்க்கப்படுகிறது. சமூகத்திலும் கதையிலும் போதை என்பது விலக்கப்பட்ட மகிழ்வு என்பது சுட்டப்படுகிறது. அதை வேண்டுமென்றே வலியச் சென்று அடைய நினைப்பது மனித அறத்தின் மீறல். இந்த வகையில்தான் அது தவறானது என்று பார்க்கும் பார்வை ஏற்பட்டிருக்கிறது. மதுவுக்கு அடிமையாதலோ பிற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதோ தவறானதுதான். அதை எப்படி அணுகவேண்டும் என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது. கதையில் வரும் பாத்திரம் மதுவுக்கு அடிமையாகி இருப்பதால் அவனை ஏற்க பிற பாத்திரங்கள் மறுக்கின்றன. அந்தப் பழக்கம் இல்லை என்றால் மட்டுமே அவனுடைய திறமையும் நல்ல குணாம்சமும் பற்றி உயர்வாகப் பேசப்படுகிறது. எனவே உறவு நிலையில் பெரும் தாக்கத்தை மதுவின் மீதான போதைத் தருகிறது. செல்லமாக வளர்த்த தங்கை ஒரு மது அடிமையிடம் சிக்கிச் சீரழிவதை அண்ணன்மார்கள் சகிக்க மாட்டார்கள் என்ற எதார்த்த உண்மையை இந்தக் கதையும் பிரதிபலிக்கிறது.


2.பண்பாட்டுச் சீர்கேடு


பொதுவாக மதுவுக்கு அடிமையாவது என்பது பண்பாட்டின் ஒரு சீர்கேடாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் கதையும் அதை வலியுறுத்துகிறது. ஆனால் மதுவுக்கு அடிமையாவது குறிப்பாக இந்தக் கதையில் வரும் வகுப்பான பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர்களிடம் அரிதானது. மதுப்பழக்கத்தினால் நேரும் கொடுமைக்கு இந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் அதிகம் ஆட்படுவதில்லை. இந்தக் கதை அதில் ஒரு வித்தியாசத்தைக் காட்டுகிறது. இந்தக் கதை காட்டும் வகுப்பைச் சேர்ந்தவர்களும் அது போன்ற போதை அடிமைகளாக உள்ளார்கள். அதனால் அவர்கள் குடும்பமும் சீரழிகிறது என்பதை வெளிப்படையாக இந்தக் கதை பேசியிருக்கிறது.


3.மதுவுக்கு அடிமையாக இருப்பது சமூக அவமானம்


மது குடிப்பது என்பது சங்க காலத்தில் இருந்து வரும் வழக்கம். விழா காலங்களில் மதுவை ஆண்,பெண் இரு பாலரும் அருந்தியிருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் அரசனே மதுவை எல்லோருக்கும் விநியோகத்திருக்கும் செய்தியும் நமக்குத் தெரியும். அந்த இலக்கியங்கள் மூலம் நமக்குத் தெரிய வருவது மது குடிப்பது சமூக அவமானம் அல்ல. அது ஒரு கொண்டாட்டம். கிராமப் புறங்களில் குலதெய்வ வழிபாடுகளில் மது குடிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் தெய்யம் ஆடுபவர்கள் மதுக்குடித்துவிட்டுத்தான் ஆடும் வழக்கம் இன்றும் கூட உள்ளது.
அது எப்போது சமூக அவமானமாக மாறுகிறது என்றால் அதன் மீது ஒரு கட்டுப்பாட்டை, விலக்கை உருவாக்கும் போது அது அவமானம் ஆகிறது. அது ஒரு taboo என்ற வகையில் சமூகத்தில் ஒரு கருத்து நிறுவப்படும் போது அது சமூக அவமானமாக மாறுகிறது. குறிப்பாக, இந்தக் கதை பேசும் வர்க்கதினரிடையே அது போன்ற கருத்து உள்ளது. குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கும் செயல் சமூகத்தால் நிந்திக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் அளவாக மதுவைக் குடிப்பது அவமானமாக இருப்பதில்லை. ஏனெனில் அது யாரையும் தொல்லை செய்வதில்லை என்பதால் அது அனுமதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அது வெளியே தெரிவதில்லை என்ற ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படுகிறது. வெளியே தெரிந்தால் அதுவும் சமூக அவமானம்தான். குடிப் பழக்கம் என்பது எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்படுகிறது என்றால் மனித நிலையிலிருந்து தவறியவர் செய்யும் காரியமாக அதைப் பார்ப்பதிலிருந்து கையாளப்படுகிறது.
குடிப்பழக்கம் என்பது பண்பாட்டு ரீதியான கீழான காரியமாகக் கொண்டு பார்த்தால் அதற்கு அடிமையானவர்களை மீட்க முடியாது. ஏனெனில் அத்தகையவர்களைத் தாழ்த்திப் பார்க்கும் போது மீண்டும் அதே பழக்கத்தை மேற்கொண்டு எல்லோரிடமிருந்தும் விலகிச் செல்லப் பார்ப்பார்கள். ஆனால் இந்தக் கதையில் அத்தகைய ஒரு கணவனை ஒரு குழந்தை போல் நடத்தி அதிலிருந்து மீட்க முயல்கிறாள் மனைவி.


4.போதை அடிமை சமூகப் பயனின்மை


போதைக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் பயனற்றவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இருந்தாலும் அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையே தொடர்ந்து நீடித்திருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் இருமை எதிர்வுகள் மூலம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகிறது. கௌரி என்ற அந்தக் குடும்பத் தலைவி தன் இடத்தை, மேஜையை, அலமாரியை மிகவும் ஒழுங்காக வைத்திருப்பவள். ஆனால் அவள் கணவன் மதுவுக்கு அடிமையாகி சீரழியும் நிலைக்கு வரும் போது அவள் வீட்டில் இருந்த கட்டுக்கோப்பு குலைந்துவிடுகிறது. ஒழுக்கம் X கட்டுக்குலைவு என்ற எதிர்மை இங்குக் காட்டப்படுகிறது.
அவள் அழகு என்று கருதி இருந்த நிலைக்கு எதிராக அலங்கோலம் என்ற நிலையை அவள் கணவன் உருவாக்குகிறான். ஒரு சிறு குழந்தையை வளர்க்க வேண்டிய நிலையில் இருப்பவள் அவள். அதற்கு எதிராக வளர்ந்த கணவனையும் குழந்தையாகப் பார்க்கவேண்டியவள் ஆகிறாள். சிறுகுழந்தை X வளர்ந்த குழந்தை, அழகு X அலங்கோலம் என்ற எதிர்மைகள் இந்தக் கதையில் உள்ளன.
கிழக்கிந்திய கம்பெனியின் வரவு மேற்கத்திய மது வகைகளை அறிமுகப்படுத்தியது. கூடவே அறம்சார்ந்த கருத்துகளையும் முன்வைத்தது. எனவே இந்திய, தமிழ் பண்பாட்டுக்கு எதிராக மேற்கத்திய பண்பாடு என்ற உள்ளோட்டமாக ஓடிய அந்த வரலாற்றுச் சிந்தனையும் இருமை எதிர்வாக இருந்து அறம் சார்ந்த கண்ணோட்டத்தில் குடிப்பழக்கத்தைத் தவறாக மாற்றுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
5.போதைக்கு அடிமையானதைப் பொருட்படுத்தாத தன்மை
குடும்பம் சிதையக் கூடாது என்பதில் இருக்கும் பிடிவாதம் கௌரி பாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இரு பால் உறவு எனும் நிறுவனம் இது போன்ற விதிகளைப் பெண்களுக்கு விதித்திருக்கிறது. நிறுவனத்தைச் சிதையாமல் காக்க வேண்டும் என பெண்கள்தான் முயற்சிக்க வேண்டும் என்பதிலிருந்து இந்தக் கதை தனது கதை சொல்லல் விதிகளை உருவாக்கியிருக்கிறது.
அண்ணனின் நண்பன் சபேசன் கௌரி மீது காட்டும் அக்கறையும் கவனமும் குடும்பத்தை அவள் சிதைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பது போல் கதையை வாசிக்கலாம். இணக்கமாக அவள் அந்தக் குடும்பத்தை விட்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் மேலோங்கி இருக்கிறது. அவனுடைய மனைவிக்கு கௌரி மீது தன் கணவன் காட்டும் பரிவும் அக்கறையும் குறித்து எந்த விமர்சனமும் இல்லை. அவளும் அதையே அவள் மீது காட்டுகிறாள். மிகவும் மெல்லிய இழையாக கௌரி மீது சபேசனுக்கு ஏன் மதிப்பும் அக்கறையும் பரிவும் இருக்கிறது என்ற கேள்வியை இந்தக் கதை எழுப்புகிறது.
இந்தக் கதை ஒரு திரில்லர் போல் எழுதப்பட்டிருக்கிறது. அவள் கணவன் ஓர் இரவு வரவில்லை. அவன் எங்காவது போயிருப்பானோ, இறந்துவிட்டிருப்பானோ அல்லது கைது செய்யப்பட்டிருப்பானோ என்று பல சந்தேகங்களை ஏற்படுத்தி அவனைத் தேடுவது ஒரு திரில்லர் போல் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசகர்கள் எந்த எதிர்மறையான முடிவுக்கும் தயாராக வேண்டும் என்பது போல் எழுதப்பட்டு இறுதியில் சாதாரண, இயல்பான முடிவைக் கொடுத்திருக்கிறது கதை.