மனதுக்குப் பிடித்த கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்கிற தலைப்பில் அழகிய சிங்கர் தொகுதி ஒன்றினை வெளியிட்டுள்ளார் .நான் உட்பட மொத்தம் நூறு பேருடைய கவிதைகள் இந்த முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.எனக்கு பிடித்த கவிதைகளாகவும் பதினைந்து பேருடைய கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன .நூற்றுக்கு பதினைந்து என்பது இத்தகைய தொகுதிகளை பொறுத்து மோசமான எண்ணிக்கை என சொல்வதற்கில்லை.நூற்றியைம்பது பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூலில் பதினைந்து கவிதைகள் சிறப்பானது என்றால் அந்த நூல் வாங்கி படிக்க வேண்டிய , பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய நூல் என்பதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை

எனக்கு இந்த நூலில் பிடித்த கவிதைகளை எழுதிய கவிஞர்கள்

1 குவளைக் கண்ணன் [ கவிதை – பரம ரகசியம் ]
2 ராமலக்ஷ்மி [ கவிதை- அரும்புகள் ]
3 கல்யாண்ஜி
4 க.நா.சு [ கவிதை – வேஷம் ]
5 ந .ஜெயபாஸ்கரன் [ கவிதை- புற்று ]
6 ஆனந்த் [ கவிதை- தூரத்து மலைகள் ]
7 நகுலன் [ கவிதை – நான் ]
8 தேவதச்சன் [ கவிதை – நிலவும் நிலவுகளும் ]
9 ஜெ. பிரான்சிஸ் கிருபா [ கவிதை – ஏனென்றால் …]
10 சி.சுப்பிரமணிய பாரதி [ கவிதை – கண்ணன் என் காதலன் ]
11 கலாப்ரியா [ கவிதை – இன்னும் கேள்விகள் (?) சொல்லித் தந்து நகரும் வாழ்க்கை ]
12 வஸந்த் செந்தில் [ கவிதை – காடு ]
13 ஸ்ரீநேசன் [ கவிதை – என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் ]
14 ஞானக் கூத்தன் [ கவிதை- பயிற்சி ]
15 பெருந்தேவி [ கவிதை- உங்கள் வீட்டு முயல் குட்டி ]

இந்த கவிதைகளுக்கு அடுத்த ரகமாக சுமார் அல்லது சராசரி என்கிற விதத்தில் நிறைய கவிஞர்கள் வருகிறார்கள்.கண்ணதாசன் ,பாரதி தாசன் ,சுந்தர ராமசாமி ,பிரமிள்,தேவதேவன்,ஷங்கர்ராமசுப்பிரமணியன் ,குட்டி ரேவதி, பேயோன் உட்பட பலர் இந்த தொகுதியில் இரண்டாம் இடத்தில் அல்லது இந்த சுமார் ரகத்தில் வந்து இணைகிறார்கள்.தொகுப்பாசிரியர் அவர்களுடைய முதல் தரமானவற்றை கண்டடைதலில் தவறிழைத்திருக்கலாம் ].இதற்கு சங்கம் பொறுப்பேற்காது .ழாக் ப்ரவர் ,சச்சிதானந்தன் ஆகியோரின் மொழியாக்கக் கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.அவையும் சராசரி கவிதைகள் என்கிற இடத்திலேயே இருக்கின்றன.

பொதுவாக நான் படிக்கிற கவிதை தொகுப்புகளில் கவிதைகளின் அருகே பல்வேறு குறியிடுதல்களை செய்து வைத்திருப்பேன்.அப்படியில்லாமல் எனக்கு கவிதை நூல்களை படிக்க இயலாது. சிறந்தவற்றுக்கு ஒரு அடையாளம்.சராசரிகளுக்கு ஒரு அடையாளம் .பொருட்படுத்த தேவையில்லை என்பதற்கு ஒரு அடையாளம் என அவை இருக்கும் .கீழானவற்றில் ,அருவருப்பை ஏற்படுத்துபவற்றில் சில அடையாளங்களை செய்து வைத்திருப்பேன்.

இந்த தொகுப்பில் கீழானவை அருவருப்புண்டாக்கியவை,கவலைக்கிடமானவை என அடையாளம் இட்ட கவிதைகளை சுஜாதா செல்வராஜ்,பாலா,பிரம்மராஜன் , பா,வெங்கடேசன் ,திலகபாமா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள் .

திலகபாமாவின் அவதார ஆசை என்னும் கவிதையின் அருகில் அருவருப்பு என அடையாளம் விட்டிருக்கிறேன்.தவிர்த்த கவிதை என்னும் பா.வெங்கடேசன் கவிதையின் கீழே வருத்தம் என்று அடையாளமிடப் பட்டுள்ளது.தெரிதல் புரிதல் என்கிற பிரம்ம ராஜன் கவிதை பற்றி கஷ்டம் என குறித்திருக்கிறேன் .இந்த கவிதைகளை ஏன் இவ்வாறு குறித்திருக்கிறேன் என எவரேனும் கேட்டால் எனக்கு அது பற்றி தெளிவாக ஒன்றிரண்டு காரணங்களையேனும் சொல்லிவிட முடியும்.முதல் தரமானவற்றுக்கு மட்டுமே என்னிடம் காரணங்கள் இருப்பதில்லை.

சிறந்த கவிதைகளாக நான் இதில் குறிப்பிட்டுள்ள கவிதைகள் இவை

1

பரம ரகசியம் – குவளைக் கண்ணன்

என் அப்பா ஒரு சும்மா
இது
அவர் இறந்து
பல வருடங்கள் கழித்து
இப்போதுதான் தெரிந்தது

அதுவும் நான் ஒரு சும்மா
என்பது தெரிந்த பிறகு

வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும்
நண்பர்கள் உண்டெனக்கு
அவர்களின் வாழ்வுமுறை பற்றி
எனக்கு ஒன்றும் தெரியாது
புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள்

அனைவருடனான எனது
அனைத்து தொடர்பும் உறவும்
சும்மாவுடனான சும்மாவுடையது

நான் சும்மாவுக்குப் பிறந்தவன் என்பதாலும்
சும்மா எனது பிறவிக் குணமாக இருப்பதாலும்
சும்மாவில் வாழும் சும்மா நான் என்பதாலும்
இப்படி இருக்கிறதாக
இருக்கும்

2

அரும்புகள் – ராமலக்ஷ்மி

என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞ்சு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா

3

கல்யாண்ஜி

உங்களை பல தடவைகள் பார்த்திருக்கிறேன் .
தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக
ஆதார் அட்டை வரிசையில் நிற்பவராக
மீன் வியாபாரிகளிடம் சிரித்துப் பேசுபவராக
மலையில் வாகனம் ஒட்டிச் செல்பவராக
கண்மருத்துவ மனையில் சோதிக்கப் படுபவராக
மரணவீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக
புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக
கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுப்பவராக
தலைக் கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக
பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக …
இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை
எங்குமே பார்க்காதது போல் உங்களால்
போக முடிவது எப்படி

4

வேஷம் – க.நா.சு

நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்

நான் சோம்பேறியாக வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை சோம்பேறி என்றார்கள்

நான் எழுதாத தெரிந்தவன் மாதிரி வேஷம் போட்ட போது
எல்லோரும் , பாவம் அவனுக்கு எழுத வராது என்றார்கள்

நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்

நான் பணக்காரன் போல வேஷம் நடந்து கொண்ட போது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்

நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள்

நானும் அறியாமலே ,மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள்

5

புற்று – ந . ஜெயபாஸ்கரன்

குலுக்க நீட்டிய கையைப்
பின்னால்
இழுத்துக் கொள்ள
மறந்து
போயிற்று

சிறிது கண்ணீர்
( கண்ணீர் என்பதே
அடங்கிய வார்த்தை )
நிறைய சொல்
செலவான பின்
தெரிந்தது
நீட்டிய கையைப்
பற்றிக் கொள்ள
எதிரே கை ஒன்றும்
இல்லை என்று

நீட்டிய கையை
நட்டு விட்டுப்
பயணப் பட்டேன்
எதிர் திசையில்
ஈரம் அற்ற
இன்னொரு கையை
எடுத்துக்
கொண்டு

6

தூரத்து மலைகள் – ஆனந்த்

தூரத்து மலைகள்
அருகில் நெருங்கும் போது
பக்கத்து மரங்கள்
விலகி வழிவிடுகின்றன

பெருமிதம் கொள்கின்றன
மலைகள்

ஒருநாள்
வானம் வந்து
சூழ்ந்தணைத்துக் கொண்ட போது
மரங்களும் மலைகளும்
வெட்கிப்போய்
ஓரம் புகுந்தன

வானம் அவற்றைக் கூப்பிட்டு
சேர்ந்தணைத்துக் கொண்டது

வானத்தின் அணைப்பில்
சற்றும் வலிக்காமல்
மலைகளும் மரங்களும்
மிதந்து கொண்டிருக்கின்றன

7

நான் – நகுலன்

வழக்கம் போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
“யார் ?”
என்று கேட்டேன் .
“நான்தான்
சுசீலா
கதவைத் திற “
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும் ?

8

நிலவும் நிலவுகளும் – தேவதச்சன்

எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
ஒவ்வொரு இரவும்
எங்களூரில்
ஏழு நிலவுகள் வந்து
அழகு கொள்ளை கொள்ளும்
தண்ணீரில் கல் எறிந்து
ஒரே நிலவை
ஆயிரம் நிலவாய்
ஆக்குவோம் நாங்கள் சிறார்கள் .
வெறுமனே
பொறுமை காத்து
ஆயிரம் நிலவுகள்
ஒரே நிலவாய் கலப்பதை
பார்ப்பார்கள் பெரியவர்கள்
இப்போது ஊருணியை
பஸ் நிலையங்கள்
ஆக்கிவிட்டார்கள் .மேலும்
கிணற்றை மூடி
குப்பைத் தொட்டியாக மாற்றி
விட்டார்கள்
இப்போது
தனியாக ஒரு நிலவு
எங்கள் ஊர்
மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது

9

ஏனென்றால் …- பிரான்சிஸ் கிருபா

நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்

10

ஆசை முகம் மறந்து போச்சே – சி.சுப்பிரமணிய பாரதி

11

இன்னும் கேள்விகள் (?) சொல்லித் தந்து நகரும் வாழ்க்கை – கலாப்ரியா

‘இன்னும் ஒரு கட்டுப்போலத்தான்
பாக்கியிருக்கும் …’

சிமினி விளக்கு
கருகத் தொடங்கும் வரை
பீடி சுற்றிக் கொண்டிருப்பாள் …

‘இன்னும் விளக்கை
அனைக்கலையா …’என்பான்

எல்லாரும் பசியுடன்

பசியுடன்
படுத்துக் கொள்ள

‘இன்னும் புத்தி வரலையா
கிழவனுக்கு …’ என
அம்மா அப்பாவிடம்
செல்லக் கோபத்துடன்

குசுகுசுக்கும்
இருட்டு நாடகத்தை
மனசுள் பார்த்து
வெட்கத்துடன் குப்புறப்
படுப்பாள் …

தன்னிச்சையாய்
விரல் சொடுக்க நினைத்துப் பின்
சாக்கிரதையாய் தவிர்ப்பாள்

சமைந்தகுமரி

12

காடு – வஸந்த் செந்தில்

ஒருவர் சென்று
மழையோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
மலர்களோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
சுள்ளிகளோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்

பச்சயங்களோடு ஒருவர்
மிருகங்களோடு ஒருவர்
மீளவேயில்லை ஒருவர்

ஒருவர் பயந்து
உள் செல்லவேயில்லை

அவரவர் தேவைகளை
அவரவர்க்கு அளித்து
வழிதொலைத்த பாதைகளை
வழியெல்லாம் வைத்து

அடர்ந்து கிடக்கிறது காடு

13

என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் – ஸ்ரீநேசன்

முதல் நிலவை எப்போதும்
எறும்புகள் மொய்த்த வண்ணம் உள்ளன
இரண்டாவது நிலவு
குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக் கூடியது
மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்
காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்
நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று
ஐந்தாவது நிலவு
மதுக்கோப்பையாகத் தளும்பிக் கொண்டிருக்கிறது
ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாக்கி கொண்டிருக்கிறாள்
ஏழாவது நிலவு
எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்

14

பயிற்சி – ஞானக்கூத்தன்

மனிதன் எங்கும் போக விரும்ப வில்லை
ஆனால் போய்க் கொண்டு தான் இருக்கிறான்
மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை
ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான்
மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை
ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான்
குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்
தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா ?

15

உங்கள் வீட்டு முயல்குட்டி – பெருந்தேவி

நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள்
சற்று பொறாமையாக இருந்தது
அது கிளிபோல் பேசுகிறது என்றிர்கள்
சற்று சந்தேகமாக இருந்தது
அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்
கண்டதாகக் கூறினீர்கள்
சற்று ஆச்சரியமாக இருந்தது
அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்
தொடவேண்டும் போலிருந்தது
தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட
கடவுளால் மட்டுமே முடியும் என்றிர்கள்
கடவுள் மேல் சற்று நம்பிக்கை கூட வந்தது
வெல்வெட் துண்டு அதன் காது என
வர்ணித்தீர்கள்
வெல்வெட் வெல்வெட் என்று
சொல்லிப் பார்த்துக் கொண்டேன்
அது கேரட்டக் கடிக்கும் அழகுக்குத்
தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்
என் தலையையும் கூடவே தரத்
தயாராக வைத்திருந்தேன்
இன்றுதான் உங்கள் முயலை
முதன்முதலில் பார்த்தேன்
என் வீட்டுச் சுற்றுச் சுவரில்
ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது
என்னவாகவும் இருக்கட்டுமே
உங்கள் வீட்டுக்குள் வைத்துக் கொண்டு
நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்

நூல் விருட்சம் வெளியீடு

( மீள்)