கணேஷ்ராம்/அதுவல்ல என் வீடு

தூக்கி வாரிப் போட்டது மூர்த்திக்கு. ஏதோவொரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தை அவன் தலையிலேயே யாரோ போட்டு உடைக்கிறார்கள்.

ஈஸிசேரில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறான். ராத்திரி என்ன முயன்றாலும் வராத தூக்கம் பட்டப் பகலில் அரைக்கணத்தில் வந்து விடுகிறது. அதுவும் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு, நல்ல வாகாகக் காலை நீட்டி, எட்டும் இடத்தில் எதன் மீதோ விரல்களாலாவது பற்றிக்கொண்டு, சலூனில் சவரம் செய்து கொள்ளும் போது இப்படித்தான் நாற்காலியை மடக்கி சாய்த்து சுகானுபாவமாக இருக்கும். நிறையத் தடவை அங்கும் தூங்கி இருக்கிறான்.

டிவியில் ஏதோ படம். தெவச மந்திரம் மாதிரி எவனோவொரு கதாநாயகன் மொணமொணவென்று பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் இருக்கிறது. கடைக்குட்டி பெண் தரையில் உட்கார்ந்து மடியில் ரைட்டிங் பேடு வைத்துக் கொண்டு என்னமோ படம் வரைகிறது. “எப்பப் பாத்தாலும் என்னத்தையோ தீத்திண்டுருக்கறதுக்கு அப்பனைக் கொண்டுருக்கு”.
இப்போது எல்லாம் ரொம்பக் கேள்வி கேட்கிறது. ஒரு படத்தைக் கூட பார்க்க விடாமல் கேள்வி. இதற்கு முன் பாட்டிதான் அலமுவை ஒருவார்த்தை புரிந்து கொள்ள விடாமல் கேட்பாள். இதற்கு அவள் கொண்டது பாட்டியையோ என்னமோ?

ஆயிற்று.. ஒருவர் பின் ஒருவராக அத்தனை பேர் காலமும் ஆகி விட்டது. இப்போது மூர்த்தியும் அலமுவும் கிட்டத்தட்ட தனிக்குடித்தனம். பெரியவன் பையன். மேற்படிப்புக்கு அயல்நாடு போய்விட்டான். கடன் தான். இந்த மொஸைக் பல்லிளித்த வீட்டை எவனோ புண்ணியவான், அவன் டார்கெட் கழுத்தை நெரிக்க, மூர்த்தியின் எண்ணை வடியும் முகத்தின் பரிதாபத்தை நம்பிக் கொடுத்து விட்டான். அவன் புண்ணியத்தில் இந்த மாதிரி விடுமுறை தினத்தில் அக்கடாவென்று தூங்க முடிகிறது. அவனுக்குத் தூக்கம் வராதாயிருக்கும்.

“அச்சுச்சோ” என்ற மகளின் பெரிய குரல் கண்ணாடிச் சிதறலை மீறிக் கேட்டது.

நல்ல வேளையாக தன் மண்டையில் விழவில்லை என்று மூர்த்தி பெருமூச்சு விட்டான். இடுக்கிக் கொண்டு ஒருபக்கமாக உறங்கியதில் கொடுவாய் காதுவரை வழிந்திருக்கிறது. அதைப் புறங்கையால் துடைத்தபடி, கூடியவரை உடம்பைக் கலைக்காமல், தலையை அண்ணாத்தி அடூர் படம் மாதிரி சோம்பலாகப் பார்த்தான்.
சுவற்றில் மாட்டியிருந்த ஏதோவொரு படம் கீழே விழுந்திருக்கிறது.
எதுவோ தெரியவில்லை.
சுவர் முழுவதும் படங்கள் தான். கட்டிய புதிதில் துடைத்து துடைத்து தான் வைத்திருந்தது.

மிலேச்ச வருஷப்பிறப்பில் வந்தது வினை. முதலில் வெங்கடாஜலபதி காலண்டர். “சூப்பரா இருக்குல்ல”. மெதுவாக பிள்ளையார், முருகன் – ஸோலோ ஒன்று, அதிலும் ராஜ அலங்காரம் ஒன்று, தம்பதி சமேதராக ஒன்று. சிவன் கூட்டுக் குடும்பமாக ஒன்று.. குபேரன் வைத்தால் பணம் கொட்டும் என்று எவனோ ஒரு விரோதி சொன்னதில் அவரும் குடும்ப சமேதராக மூர்த்தி வீட்டுச் சுவற்றில் மூச்சு முட்டிக் கிடக்கிறார். வருடங்கள் காலாவதியானாலும் உம்மாச்சி நல்லது செய்கிறதோ இல்லையோ கட்டாயம் கண்ணைக் குத்த வல்லது என்பதில் காலாண்டுக்கு ஒருமுறை மூர்த்திக்கும் அலமுவுக்கும் நடுவில் தவறாமல் நடக்கும் உள்நாட்டுப் போரின் சமாதான முயற்சியாக ஒரு காலண்டர் உபரியாகச் சேரும். நடுவில் ஒருமுறை காலண்டர் கைவசம் இல்லாதபோது நேர்ந்த சேர்க்கை தான் கீழே பாட்டி மாதிரிக் கேள்வி கேட்டுக் கொண்டு அப்பனைப் போல் காகிதத்தில் தீற்றிக் கொண்டு இருப்பது.

இந்த சமயத்தில் தான் ஒவ்வொரு பெரிசும் டிக்கெட் வாங்க ஆரம்பித்தனர். ஏற்கனவே அவன் அப்பா பரம்பரை சொத்தாக கௌசிகர் காலத்தில் இருந்து மண்டையைப் போட்டவர்களின் படங்களை சேகரித்து வந்ததை விட்டு வைத்திருந்தார்.

பித்ரு சாபத்திற்குப் பயந்து அந்த படங்களும் சுவற்றை அலங்கரித்தது போக, புதிய ஏற்பாட்டின் படி பிற்சேர்க்கையான கிழங்களும் தனித்தனியாக கிடைத்த இடத்தில் தலையையாவது நுழைத்து, மூர்த்தி வீட்டுச் சுவர் கிட்டத்தட்ட மெரீனா கடற்கரைக்கு இணையான அந்தஸ்தை அடைந்து விட்டிருந்தது.

இதன் நடுவில் தான் மூர்த்தி பலகாலம் முன் வரைந்த ஏழெட்டு ஓவியங்களில் ஒன்று, அதி முக்கியமான தகவலைத் தாங்கி நின்றது, சட்டமிடப்பட்டு எப்படியோ ஒண்டுக் குடித்தனம் இருந்தது.

கந்தசாமி படத்துத் தாயத்து மரம் போல் அடைஅடையாகப் படம் அப்பிக் கிடந்த அந்த சுவற்றில் ஏதோவொரு வெங்கடாஜலபதிக்கு ஓரவஞ்சனையாக செம்பருத்திப்பூவை அலமேலு எக்கி வைக்கும் தருணம், சம்பந்தமே இல்லாமல், அவன் உயிருக்கும் மேலான அஜாக்ரதையாக அங்கு ஒண்டிக் கொண்டு இருந்த அந்தப் படத்தில் பிரத்யேகமாகக் கைபட்டு, அது மட்டும் மெனக்கெட்டுக் கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது.

“ஐயையோ” என்று அடிவயிற்றில் இருந்து அலறினான் மூர்த்தி.

அம்மா பெண்ணை இறைந்தாள், “கிட்ட வராதடி.. கண்ணாடி கால்ல ஏறிடும்”
“என்னம்மா இப்படி சுக்குச் சுக்கா உடைச்சிருக்கே”
“ஆமாம்.. வேண்டுதலை பாரு எனக்கு.. உடைக்கணும்னு.. கருமம்.. தொத்திண்டு இருந்துருக்கு..உங்கப்பா என் கால்ல ஏறணும்னே பட்டும் படாம மாட்டி வச்சிருக்கார்”.

மூர்த்தி இப்போது ரஜினி படம் மாதிரி ஈஸிசேரில் இருந்து அந்தரத்தில் எழும்பி சரியாக படம் விழுந்து நொறுங்கிய இடத்தில் லாண்ட் ஆனான். நடுங்கும் விரல்களால் கையில் கண்ணாடிக் குத்தி விடாமல் எடுத்து அந்த ஓவியத்தைப் பார்த்தான்.

அது ஒரு பழைய கிராமத்து வீடு.

“பிதுராராரார்ஜித சொத்து” என்று நீட்டி முழக்கி அலமேலு அடிக்கடி அழகு காட்டும் வீடு, அவன் கைகளில் அவன் ஞாபகங்கள் போலவே நொறுங்கிக் கிடந்தது.

“இது நம்ம வீடாம்மா”
“அப்படித்தான் கேள்வி. யாரு பாத்துருக்கா? கிராமத்துல யாருமே சீந்தாமப் பூட்டிக் கிடந்தது.. உங்க தாத்தா எவனோ தீத்தாண்டிக்குத் தானமாக் கொடுத்துட்டார்”
“தானமா ஒண்ணும் கொடுக்கலை”
“சரி.. நூறு ரூவா வாங்கிண்டு கொடுத்துட்டார்.. இன்னிக்கு நூறு ரூவால என்ன கிடைக்கும்? “
“அன்னிக்கு நூறு ரூபா பெரிசு”
“உங்களுக்குப் பெரிசுன்னு சொல்லுங்கோ.. எங்க குடும்பத்துக்கு இல்லை”
மூர்த்தி மௌனமாகி விட்டான். அவள் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். மறு பேச்சு பேசினால் சண்டை வளரும். அவள் கோபித்துக் கொண்டு உள்ரூமில் போய் தாழிட்டுக் கொள்வாள்.

இத்தனை வருடங்களில் மூர்த்தி சமையல் வேறு பழகிக் கொள்ளவில்லை.

“இப்படிப் போட்டு உடைச்சிருக்கியே.. ஒரு நாள் பூரா உக்காந்து கை எடுக்காமத் தீட்டினேன் தெரியுமா?”
“உடைச்சேன் கிடைச்சேன்னா கெட்ட கோவம் வரும்.. இதெல்லாம் ஒரு வீடு.. எழவு விழுந்த வீடு மாதிரி இருக்கு.. வாசல்ல விட்டெறிங்கோ மொதல்ல.. முனிசிபாலிடி காரன் கூட எடுத்துண்டு போ மாட்டான்.. பைசாக்குப் பிரயோஜனம் இல்லாம அடைகாத்துண்ணுன்னா இருக்கேள்.. அதான் தொலைச்சுத் தலை முழுகியாச்சே.. அப்பறம் என்ன சீராட வேண்டியிருக்கு”

மூர்த்தியின் கையில் அது கனத்தது. அதை யாரும் தொலைக்கவில்லை. அவன் அப்பா அதை யாருக்கும் கொடுக்கவில்லை. அப்படி யாருக்கும் கொடுத்து விடவும் முடியாது.

காரணம், அது அவர்கள் வீடே அல்ல.. அவர்கள் தெருவில் எதிர் சாரியில் ஏழெட்டு வீடுகள் தள்ளி இருந்த வீடு.

அதை அவனால் எக்காலமும் மறக்க முடியாது. அதில்தான் அவனை விட ஒரு வயதுக்குச் சற்று குறைச்சலாக, ஆனால், அவன் வகுப்பிலேயே படித்த மாலதி இருந்தாள்.

(அசுபம்)