வினாயக முருகன்/ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங்

நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை. அம்பானி சகோதர்களில் எனக்கு பிடித்தவர் இளையவர் அணில் அம்பானி. எந்த வேலையும் செய்யமாட்டார். செய்தாலும் அது உருப்படாது. ஒரு சினிமா நடிகையை திருமணம் செய்துக்கொண்டார். மனைவிக்காக ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதுவும் போண்டி. குடி, கேளிக்கை என்று விளையாட்டுப்பிள்ளையாக இருப்பார். ஆனால் அண்ணன் அப்படி இல்லை. அவரது இளமைக்காலத்தில் அப்பாவின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்ததால் அவருக்கு ஒருவித முதிர்ச்சி வந்துவிட்டது. அதனால் எந்த தொழில் செய்தாலும் அதை நேர்த்தியாக செய்து நிறுவனத்தை மட்டுமில்லாமல் தொழிலாளர்களை, முதலீட்டாளர்களை காப்பாற்றினார். பதின்மவயதில் இளையவர் அணில் அம்பானி எனக்கு ஆதர்சம். செல்போன் வந்தபுதிதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் முதலீடு செய்தேன். நல்ல லாபம்கூட வந்தது. பிறகு ஏதோ உள்ளுணர்வுதோன்ற பணத்தை எடுத்து வெளியே வந்துவிட்டேன். எதிர்பார்த்ததுபோல அந்நிறுவனம் போண்டியானது. வயதாக வயதாக அண்ணன் நடத்தும் நிறுவனத்தின்மேல் ஈடுபாடு வந்தது.

ஒரு நாணயத்துக்கு இரண்டுப்பக்கங்கள் இருப்பதுபோல வாழ்க்கையில் இரண்டு திசைகள் இருக்கும். ஒன்று லட்சியவாதம். இன்னொன்று கனவு. சிலர் கனவுகளை நம்புவார்கள். இளமையில் எப்போதும் யார் சொன்னாலும் எதையும் கேட்கமாட்டோம். நாம் நினைத்தது நடக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருப்போம். காலம்செல்ல செல்ல பக்குவமடைவோம். ஆனால் அணில் அம்பானி விதிவிலக்கு. இன்றுவரை அவர்மேல் வங்கிக்கடன் உள்ளது. அண்ணன் முகேஷ் அம்பானி ஏஜிஎம் பேச்சில் அவரது நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம் என்று அறிவித்துள்ளார். தவிர டிவிடெண்ட், போனஸ் பற்றி பெரிய அறிவிப்பு இல்லை. அதாவது அவர்கள் சம்பாதித்ததை பெரியளவில் முதலீடு செய்து தொழிலை விரிவாக்கப்போகிறார்கள் என்று மறைமுக அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். தவிர அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வரப்போகும் முன்னேற்றங்கள் பற்றி பேசியுள்ளார். பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்வோம். பெட்ரோல் உற்பத்தி குறைந்துவிடும். அவர்கள் சோலார், பயோடீசல் என்று முதலீடு செய்யப் போகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் ஐஓடி கருவிகள், மின்சார வாகனங்கள் என்று வேறு ஓர் உலகம் வரும். எப்போதும் மாற்றங்களை தேடிச்செல்பவர்கள் ஜெயிப்பார்கள். கனவுகளில் இருப்பவர்கள் அங்கேயே நிற்பார்கள். இன்று காலை எழுந்ததும் முகேஷ் அம்பானியின் அந்த நீண்ட பேச்சை கேட்டேன். அவரது இளைய சகோதரருக்கு எந்த பொறுப்பும் இல்லை. வங்கி நோட்டீஸ் வந்தாலும் ஜாலியாக குடி, கேளிக்கை என்று இருக்கிறார். இரண்டு எதிரெதிர் திசைகளில் உலகம் சுற்றுகிறது என்று தோன்றியது. எந்த திசையில் பயணிக்கவேண்டும் என்பதும் அவரவர் விருப்பம்.

(2021-ல் எழுதிய மீள்பதிவு மேல இருப்பது)

மேலே இருக்கும் பதிவு முகேஷ் அம்பானியின் முதல் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் பொருந்தும். ஆகாஷ் அம்பானி ஜியோ சேர்மன் . ஆகாஷ் அம்பானி வயது முப்பத்தி இரண்டுதான். முப்பது வயதில் சேர்மன் பொறுப்பேற்றார். Brown University-ல் படித்தவர். 22 வயதிலேயே அப்பாவுடன் வியாபாரத்தை கவனிக்க வந்துவிட்டார். ஜியோ திட்டம் தொடங்கும்போது உடனிருந்தார். 2020-ல் போர்டு உறுப்பினராகி இன்று சேர்மன் பதவிக்கு வந்துள்ளார். RIL இப்போது ஐடிசி போல ஒரே குடையின் கீழ் உள்ளது. அநேகமாக ஜியோவை தனி நிறுவனமாக பிரித்து ஆகாஷ் அம்பானியிடம் ஒப்படைத்து அதன் வளர்ச்சியை பலமடங்கு அதிகரிக்கும் திட்டம் இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பை டிரைடென்ட் ஹோட்டலில் 2019-ல் நடந்தது. அம்பானி வீட்டு திருமணம் என்பதால் அதுவும் ஓரளவு ஆடம்பரமாக நடந்தது.

இனி இரண்டாவது மகனுக்கு வருவோம் நேற்று இரவு அலுவலகம் முடித்து வந்து கொஞ்சநேரம் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவை பார்த்தேன். இது ஆடம்பரத்தின் உச்சம். கைக்கடிகாரம் மட்டும் முப்பது கோடி என்கிறார்கள். பல ஏக்கர்களில் ஒரு உயிரியல் பூங்காவை கட்டி நூற்றுக்கணக்கான யானை , புலி ,சிங்கங்களை பராமரிக்கிறார். 28 வயதில் எழுபது வயது முதியவரைபோல நடந்துவருகிறார். கண்டிப்பாக இவர்மீது முதலீட்டாளர்களுக்கு பெரிய நம்பிக்கை எல்லாம் இருக்காது. அம்பானி இவரிடம் எந்த போர்ட்போலியோவை கொடுத்துள்ளார்கள் என்றும் தெரியவில்லை . அடுத்த முப்பது வருடங்களுக்கு அவரது உடல்நலம் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது. விழாவில் அவரது அப்பா மகன்போல சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடி நடக்கிறார். மகன் அப்பாபோல நிற்கிறார். நாள் முழுவதும் யானைகளுக்கு ராகி காளி உருண்டை உருட்டி ஊட்டுவதிலேயே நேரம் செலவழிக்கிறார். இப்படி இருந்தால் எங்கிருந்து தொழிலை கவனிப்பது? அந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் அவரது சித்தப்பா அணில் அம்பானி அவரது குடும்பத்தோடு பெட்டி, படுக்கைகளோடு வந்து பரிதாபமாக போட்டோக்களை போஸ் கொடுத்ததை பார்த்தேன். அவர்மீது நிறைய வங்கிக்கடன் உள்ளது. இனி ரிலையன்ஸின் ஒரே நம்பிக்கை ஆகாஷ் அம்பானி மட்டும்தான். அம்பானி குடும்பத்தின் சாபக்கேடு இதுபோல. எப்போதும் இரண்டாவதுமகன்கள் சோபிப்பதில்லை.