எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

வேறு என்னைப் பற்றி என்ன சொன்னார்கள், பாலகுமார் என்று கேட்டபோது, நீங்கள் நன்றாகச் சாப்பிடுவீர்களாம் என்று நான் பதில் சொல்ல, அதற்கும் வாய்விட்டுச் சிரித்தார்.

ஆமாம். இந்தப் பிச்சைக்காரன் நன்றாகச் சாப்பிடுவான். அதே சமயம் இந்தப் பிச்சைக்காரன் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து பட்டினியும் கிடப்பான்.

இந்தப் பிச்சைக்காரனுக்குத் தொந்தரவு அதிகமானபொழுது ரயில்வே லைன் வழியாகவே நடந்து திருக்கோவிலூர் போய் அங்குள்ள ஞானானந்தகிரியின் வாசலில் உட்கார்ந்து கொண்டான்.

ஞானானந்தகிரி என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார். மடத்தில் சாப்பாடு தயாரானவுடன் என்னைப் பற்றி மடத்திற்குள் சொல்வாராம். வாசலில் ஒரு சிங்கம் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பாராம்.

என்னை ஞானானந்தகிரி சிங்கம் என்று குறிப்பிடுவார். அவருக்கும் நாம் உணவு கொடுப்போம் என்று சொல்வாராம். என்னை உள்ளே அழைத்து அங்கு பலமாக விருந்து கொடுப்பார்.

நான் அவருடைய ஆதரவில் சில நாட்கள் இருந்திருக்கிறேன் என்று சொல்லி குழந்தை போல் சிரிப்பார். ஞானானந்தகிரியின் பெருமையை எங்களுக்கு எடுத்துச் சொல்வார்.