வாள் மறந்து போச்சு

வளவ. துரையன்

அவனுக்கு வந்தியத்தேவன்
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே
நண்பனாகி விட்டான்.
கல்கிதான் சேர்த்து வைத்தார்.

நேற்று காலைநடையின்போதே
அவன் வந்து விட்டான்
”என்ன வந்தியத்தேவா?
சோகமாயிருக்கிறாய்?” என்றேன்.

“எல்லாம் குந்தவையால்தான்
எல்லாஅரசு
அலுவல்களிலும் தலையிடுகிறாள்.

தெரிந்துதானே காதலித்தாய்?

காதலுக்குத்தான்
கண்ணில்லையே என்றான்

வழியில் போகும்போது
குழாயில் நீர் வீணாய்க்
கொட்டிக் கொண்டிருந்தது

இன்னும் தெருவிளக்குகள்
அணைக்கப்படாமல்
எரிந்து கொண்டிருந்தன.

பல ஆடுகள்
பார்த்துக்கொண்டிருக்க
ஓர் ஆடு
தெருக்கடையில்
அறுபட்டுக்கொண்டிருந்தது

”உங்கள் ஊர் மோசம்” என்றான்
என்ன செய்யலாம்; எடு வாளை?

காய்கறி நறுக்கக்
குந்தவையிடம் கொடுத்து வந்துவிட்டேனே

எனப் புலம்பினான்