ஜெயமோகனின் விளக்கம்

ஜகா வாங்கும் பேச்சுக்கு இடமில்லை போல


மாத்ருபூமி நாளிதழில் இதுசார்ந்து கேரளத்தில் எழுந்த எதிர்ப்புகளை ஒட்டி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே இங்கும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

என் கருத்து மலையாளிகளுக்கு எதிரானதா? இல்லை என என்னை வாசிப்பவர் எவருக்கும் தெரியும். நான் கேரளப்பண்பாட்டின் மிகச்சிறந்த முகம் ஒன்றை தொடர்ச்சியாக தமிழகத்தில் முன்வைத்து வருபவன். என்னை மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவன் என்று சொல்லிக்கொள்ள என் முதல் நூல் முதல் இன்று வரை தயங்கியதே இல்லை. தமிழ்ப்பண்பாடு, தமிழ் அரசியல் பற்றி நான் ஏதேனும் விமர்சனம் முன்வைக்கும் போதெல்லாம் என் மொழியும் சாதியுமே இங்கே பலரால் வசைபாடப்படுகின்றன. அதை பொருட்படுத்தியதே இல்லை. அதற்காக என் விமர்சனங்களை மென்மையாக்கிக் கொண்டதுமில்லை.

ஓர் எழுத்தாளனாக நான் மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தனின் வழி வந்தவன். அவருடைய மாணவர்களான பி.கே.பாலகிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா போன்றவர்களின் மாணவன். அவர்களை தமிழில் மிக விரிவாக அறிமுகம் செய்து வருபவன். மலையாள இலக்கியத்தை, இலக்கியவாதிகளை தமிழில் என்னளவு அறிமுகம் செய்த இன்னொருவர் இல்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் முதலான மலையாள சினிமாவை இங்கே தொடர்ச்சியாகப் பேசி வருபவன். கேரளத்தை விட ஒரு படி மேலாகவே நித்ய சைதன்ய யதியை, நாராயண குருவின் மரபை இங்கே முன்வைப்பவன். அதற்கென முழுவாழ்க்கையை செலவிட்டுவருபவன்.

கேரளப்பண்பாட்டின் மிகச்சிறந்த முகத்தை முன்வைப்பவன் என்பதனாலேயே கேரளத்தின் பண்பாடே குடியும், முச்சந்திப்பூசலும், கேலிக்கூத்தும்தான் என தொடர்ச்சியாக முன்வைக்கும் இன்றைய மலையாளச் சினிமாவை விமர்சிக்க எனக்கொரு கடமை உள்ளது.

மலையாளச் சினிமாக்களில் சிறந்தவற்றைப் பார்த்தவர்கள் மனசாட்சியை தொட்டு எண்ணிக் கொள்ளட்டும். அடூர் அல்லது அரவிந்தன் முன்வைத்த கலைப்படம் அளிக்கும் அனுபவம் இந்த படங்களிலுண்ண்டா? எம்.டி அல்லது லோகிததாஸ் எழுதிய இடைநிலைப் படங்கள் அளிக்கும் நெஞ்சைத் தொடும் அனுபவங்கள் இன்றைய படங்களில் உண்டா? இவை எல்லாம் கலை என்றால் அவை உண்மையில் என்ன?

இன்று கேரளத்தில் இலக்கிய வாசிப்பு அனேகமாக இல்லை என்னும் நிலை. குடியே மையக்கலாச்சாரமாக ஆகியிருக்கிறது. கேரள சினிமாக்காரர்களில் எம்.டி.வாசுதேவன் நாயரை அறிந்த சினிமாக்காரர்களே மிகக்குறைவு. இந்த மஞ்ஞும்மல் பாய்ஸ் வந்தபின், அதைப்பற்றிய உரையாடலில், இரண்டு மலையாள சினிமாக்காரர்களிடம் யானைடாக்டர் மலையாள மொழியாக்கம் பற்றி பேசினேன். அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் கொரிய படம் பார்க்கிறார்கள், உள்ளூரில் படம் எடுக்கிறார்கள் – அவ்வளவுதான்.

பொதுவாகத் தென்மாநிலங்களே குடிப்பழக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. கேரளமே அதில் முதலிடம். கேரளம் போதைப்பொருள் பழக்கத்திலும் அபாயகரமான அளவுக்கு முந்திக் கொண்டிருக்கிறது. கூடவே அரசியல்நீக்கமும் அங்கே நிகழ்கிறது. எவருக்கும் எந்த அரசியல் ஆர்வமும் இல்லை. குடி மட்டுமே.

கேரள வாழ்க்கையின் எல்லா நுட்பங்களையும் அழகுகளையும் குடி சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன்மேல் எளிய ஒரு விமர்சனத்தைக்கூட அந்தச் சமூகம் உருவாக்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு சினிமா குடியை, போதைகளை நியாயப்படுத்துகிறது. அன்றாடப்படுத்துகிறது. அதற்கு எதிரான எந்த விமர்சனத்தையும் அது கேலி, இகழ்ச்சி வழியாக எதிர்கொள்கிறது.

இதைச் செய்பவர்கள் எர்ணாகுளம் மையமான ஒரு போதைக்கும்பல். அவர்களின் சினிமாக்கள். அது ஒரு ‘கோக்கஸ்’ என்று தெரியாத எவரும் கேரள சினிமாவில் இன்றில்லை. போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பது ஆகியவற்றுக்காக கைதுசெய்யப்பட்ட கதைநாயகர்கள் அங்குள்ளனர். அவர்களின் சொந்த வாழ்க்கையை கேரள வாழ்க்கையாக உலகுக்குக் காட்டுகிறார்கள். உண்மையில் அதுதான் கேரளத்தை இழிவுசெய்வது. அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். அதை அங்குள்ள எவரும் சொல்ல முடியாது. எவரேனும் சொல்லியாகவேண்டும்.

குடி வேறு சினிமாக்களில் இல்லையா? உண்டு. துக்கத்தால் கதைநாயகன் குடிப்பது சினிமாக்களிலுண்டு. நகைச்சுவைக்காக குடி காட்டப்படுவதுண்டு. கதைநாயகன் குடித்துக் களியாடும் ஒரு சில காட்சிகள் வருவதுமுண்டு. ஆனால் ஒரு பண்பாட்டின் அன்றாட வாழ்க்கையே குடி மட்டும்தான் என்று குடியை உன்னதப்படுத்தும் போக்கும் இன்றுவரை தமிழ், தெலுங்கு சினிமாக்களில் இல்லை.

ஆனால் இந்தப்படம் தமிழிலும் அந்தப்போக்கை தொடங்கி வைக்கப் போகிறது. இந்த படத்தின் வெற்றியே அவ்வாறு கடுமையாக எழுதச் செய்கிறது என்னை. இது கவனிக்கப்படாது போயிருந்தால் ஒன்றுமில்லை. ஆனால் இது தமிழகத்தில் பெருவெற்றி பெற்று ஒரு ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறது. இதைப்போன்ற படங்கள் இங்கும் வரும். இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

குடிக்களியாட்டுப் படங்கள் பத்தாண்டுகளாக மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. அதைப்பற்றிக்கூட நான் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. இந்தப்படம் குடித்துவிட்டு வழிநெடுக சலம்புவதை, காடுகளுக்குள் சட்டத்தை மீறி ஊடுருவி புட்டிகளை உடைத்துவீசி சீரழிப்பதை கொண்டாடுகிறது. அவர்களை மகிழ்ச்சியானவர்கள், நட்பானவர்கள் என்றெல்லாம் புனிதப்படுத்துகிறது. காடுகளுக்குள் குடி உருவாக்கும் அழிவுகளை இருபதாண்டுகளாக எழுதி எழுதி கவனப்படுத்தியவன் என்னும் வகையில் இதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

இந்த விவாதத்தில் எழுதிய பலருடைய வரிகளை நீங்கள் கவனிக்கலாம். காடுகளுக்குள் புட்டிகளை வீசினால் என்ன, அதெல்லாம் இளமையின் கொண்டாட்டம், இவனுக்கென்ன அதில், யானை என்ன பெரிய விஷயமா என்றவகையில் எத்தனை எதிர்வினைகள். ‘காட்டுவிலங்குகள் தானாகவே வாழும். அதைப்பாதுகாக்க இவன் யார் மகாத்மா காந்தியா?’ என்றவகையில் கருத்துக்கள் வருகின்றன. இதைச் சுட்டிக்காட்டுவது ‘பூமர் மனநிலை’ என இங்கே சில எழுத்தாளர்களும் எழுதினர். தமிழிலும், மலையாளத்திலும் இதே எள்ளலும் எக்காளமும்தான். இப்படி ஏன் நான் எழுதவேண்டும் என்பதற்கான காரணமே இந்த மொண்ணைத்தனம்தான். அதற்கு எதிரான கட்டுரைதான் அது.

கேரளப் பண்பாட்டை உலகின் கண்முன் இழிவு செய்வது அந்த படம்தான். அதைப்பற்றிய கூச்சம்கூட இல்லாதபடி பெரும்பான்மை சுரணையற்றிருக்கிறது. அதன் வணிக வெற்றியை கண்டு பொறாமை என்றெல்லாம் எழுதுபவர்கள் எளிய அப்பாவிகள். ஆனால் அது நவீன கலாச்சாரத்தை காட்டுகிறது, அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்றெல்லாம் எழுதுபவர்கள் அயோக்கியர்கள். அடித்தள மக்கள், உழைப்பாளி மக்கள் அப்படித்தான் பொறுப்பற்ற குடிகாரக்கும்பலாக இருப்பார்கள் என எழுதுபவனை விட உழைப்பாளிகளை இழிவுசெய்பவன் எவன்?

இதைவிட நவீன நாகரீகம் திகழும் பல நாடுகளை கண்டிருக்கிறேன். எங்கும் சட்டமீறலும், சூழியல் அழிவும்தான் இளமைக்கொண்டாட்டம் என சொல்லப்படுவதில்லை. உழைக்கும் மக்களெல்லாம் குடித்துவிட்டு கூத்தாட்டம் போடலாம் என்னும் அனுமதி எங்குமில்லை.

இந்தப்படத்தின் விளைவை இன்றே நீங்கள் கொடைக்கானல் செல்லும் வழியில் காணலாம். இந்தப்படத்தை பார்த்துவிட்டு இதேபோல ஏராளமான மதுப்புட்டிகளுடன் காட்டுப்பாதை முழுக்க அவற்றை உடைத்து வீசியபடி செல்லும் பலநூறு வண்டிகளை வனத்துறை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

எழுத்தாளனாகிய நான் தமிழனோ மலையாளியோ இந்தியனோகூட அல்ல. எழுத்தாளன். எனக்குரிய இடமொன்றில் இருந்து எழுதுபவன். எந்தப் பண்பாட்டையும் தூக்கிச்சுமக்கவோ போற்றவோ எனக்குக் கடமை இல்லை. எதையும் தூற்றவும் வேண்டியதில்லை. ஒவ்வாமைகளில் இருந்தே இலக்கியம் பிறக்கிறது. உணர்வுரீதியான எதிர்வினைகளின் வழியாகவே எழுத்தாளன் பேசமுடியும்

எந்தக் கருத்தையும் தாங்களறிந்த சாதிமத இனமொழி வட்டார அரசியலைக்கொண்டும் வெறுப்புகளைக் கொண்டும் எதிர்கொள்பதே பொதுச்சூழலின் வழக்கம். நான் அவர்களிடம் பேச ஒன்றுமில்லை. நான் பேசிக்கொண்டிருப்பது வாசிக்கும் வழக்கம் கொண்ட, சிந்திக்கும் வழக்கம் கொண்ட, சிறுபான்மையினரிடம். அவர்களுக்கு புரியும், அவர்களிடமிருந்து இக்கருத்து பரவும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தக் கண்டனம் இன்னும் பலரின் குரல்களில் எழும். அதுவே சிந்தனைகள் பரவும் வழி.

முதற்குரலுக்கு எப்போதுமே வசைகளும் அவமதிப்புகளுமே அமையும். அதைப்பெறுவதற்கு எனக்குத் தயக்கமில்லை. எம்.கோவிந்தனோ பி.கே.பாலகிருஷ்ணனோ பெறாத வசைகளொன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் காட்டிய வழி இதுதான்.

இந்தச் சூழலில் நான் என்னைச் சுற்றி ஒலிக்கும் குரல்களுக்கு முன் என் பதிலாக நிறுத்த விரும்புவது ஒரு பெயரை – யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பதிலாக வைத்துக் கொள்வது தாமஸ் ஹார்டி எழுதிய ஒரு நாவலை Far From the Madding Crowd

  • ஜெயமோகன்

நன்றி Kandasamy ஐயா

One Comment on “ஜெயமோகனின் விளக்கம்”

  1. மிக அருமையாக தெளிவாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.எந்த ஒரு கலாச்சாரத்தையும் இழிவுப் படுத்த நமக்கு அதிகாரம் இல்லை.
    A poet or writer is the representative of his era.

Comments are closed.