
(நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 12 நாள் – 15.3.2024)
பெருச்சாளியொன்று
குதறப்பட்டுத் தெருவில் கிடந்தது.
அதற்கு முன்னதாக
இறந்துபோன நாற்றம்
விடிவதற்கு முன்னரே
எல்லாக் கதவுகளையும்
தட்டிவிட்டது..
அப்புறப்படுத்துவது
யாரென்று கொஞ்சம்
விவாதம் நடந்தது..
சற்றுநேரத்தில் நாலைந்து
காகங்களும் ஒரு பூனையும்
பெருச்சாளியைப் பங்கிட்டு
ஒருதுளி தடயமுமின்றி
அப்புறப்படுத்தின..
இப்படித்தான் என்று
பெருச்சாளி குறித்த கதை
தொடங்கிப் பேசிய பேச்சு
நாற்றத்தைத் தெரு
வழக்கம்போலவே
அமைதியாகக் கேட்டுக்
கொண்டிருந்தது.
