அழகியசிங்கரின் 3 கவிதைகள்

  1. க.நா.சுவும் பாரதியும்

எனக்கு
இப்போதெல்லாம்
க.நா.சு கவிதைகள்தான்
பிடித்திருக்கின்றன

க.நா.சுதான் என்
கையைப் பிடித்து
கவிதை
எழுதக் கற்றுக்
கொடுக்கிறார் என்று
நினைக்கிறேன்.

ஒரு காலத்தில்
பாரதியை அப்படி
நினைத்துக் கொண்டிருந்தேன்.

பாரதி
இந்திய விடுதலைக்குத்
தன்னை
நிலை நிறுத்திக்கொண்டார்.

புரியாமலும்
உச்சரிக்க முடியாத
கவிதைகளும்
எழுதியிருக்கிறார்.

அவருடைய வசன
கவிதைகள்தான்
எனக்குப் பிடித்திருந்தது
அதிலும்
வேதாந்த கருத்துகளை
அள்ளி வீசியிருக்கிறார்

செல்லம் மாவுடன்
அவர் வாழ்ந்த
வாழ்க்கையைக்
கவிதைகளாக எழுதவில்லை

உங்களுக்குப் பிடிக்காது
நான் இப்படி எழுதுவது
என்ன செய்வது
எனக்குத்
தோன்றுவதை
எழுதுகிறேன்

  1. புத்தகக் குவியல்

என்
முன்னால்
புத்தகக் குவியல்

எதை எடுத்துப்
படிப்பது என்று புரியவில்லை

புத்தகங்களைப்
பார்த்தபடியே
கண்ணை மூடி
தவத்தில் ஆழ்ந்தேன்.

காந்தி மகான்..

என் வாழ்க்கையில்
காந்தியைப் பார்த்ததில்லை

காந்தியைப்
பற்றி கேட்டிருக்கிறேன்

ஒவ்வொரு ஆண்டும்
அவர் பிறந்தநாளன்று
கோட்ஸேவாக நாம் மாறி
காந்தியைச் சுட்டு வீழ்த்துகிறோம்

காந்தியைத் திரும்பவும்
உயிர்ப் புதுப்பித்து
நம் முன்னால் வலம் வருகிறார்

அவர் ஒரு காந்தியவாதி
என்று கிண்டல் செய்ய
கற்றுக் கொண்டோம்

எங்கள் வீட்டுக் கொலுவில் அத்தனைப்
பொம்மைகளின் நடுவில் காந்தி பொம்மை இல்லை

ஏன் என்று கேட்டேன்
மனைவியிடம்

ஓவியர் ஆதிமூலம் வரைந்த காந்தியைப்
பார்த்திருக்கிறீர்களா

பேரனைக் கேட்டேன்
காந்தியைத் தெரியுமா
அவனுக்கும் தெரியாது
எனக்கும்.

காந்தியைப் போற்றுவோம்
காந்தியைப்
போற்றுவோம் (02.10.2022)