பூனையும் நானும்

                                             
 சுரேஷ் ராஜகோபால்    

வீட்டிலிருக்கும் சகல ஜீவராசிகளுக்கும் என்மேல் வெறுப்பு என்ற எண்ணம் ரொம்ப நாளாகவே எனக்குண்டு. பல்லி, கரப்பு, பூரான்,வந்துபோகும் பூனை, நாய், மனித ஜீவராகி இன்னபிற எல்லாம் இதில் சேர்த்தி.  

எத்தனையோ தடுப்பு வைத்திருந்தும் ஒரு குண்டு பெண் பூனை வெகு வேகமாக, என்னை முந்திக்கொண்டு வீட்டில் புகுந்தது. நான் இரண்டு கால் பாய்ச்சலில் பாய அது நாலுபாய்ச்சலில் பாய அது திடுமென ஒரு அறைக்குள் புகுந்து ஒளிந்தது. 

பூனையை தேடுறேன் பேர்வழி என்று  சூடான பால், கண்ணாடிக் குடுவை, சாமி படம் என் பல உடைக்கப்பட்டன. இந்த கிழத்துக்குப் புத்தி பேதலித்து போச்சு என்று என் மனைவி இதெல்லாம் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.  

கொங்ச நேரம் காத்திருந்து பார்த்தேன், பூனை மெதுவாக எட்டிப் பார்த்தது.  கையில் குச்சியுடன் இதற்குத்தான் நின்றிருந்தேன். குச்சியால் தரையைத் தட்டியவுடன் அது தவி பரண்மீது தாவியது.. உடனே அதைத்  தடுக்க குச்சியைச் சுழற்றினேன்,

அது ஓடுகின்ற மின்விசிறியில் பட்டு வினோதமான கட முட சத்தம். உடனே மின்விசிறியை அனைத்துவிட்டு பூனையைத் தேடினேன். 
தப்பிக்கப் பரண் மேலிருந்து  பூனை கீழே தாவிட, ஓரத்தில் வைத்திருந்த ஏணி மடாரென விழ, அப்போதும் விடாது பூனையைத் துரத்த நான் பாய என் வேட்டி தடுக்கித் தடுமாறினேன்.  வெட்டி “டர்” கிழிய தடுமாறியபின்தான்  சுவரைப் பிடித்து நின்றேன்.  பூனை எப்படியோ வெளியேறிவிட்டது.

மனைவி வெளியே வந்து நின்று “ஏன் பூனை கூட சடுகுடு விளையாட்டு இப்பத் தேவையா?” என்றாள். 

“கொஞ்சநேரம்  வெளியே உக்காருங்க “ என்று அறையைச் சரி செய்ய முயன்றாள்.
சில மாதம் முன்பு ஒரு பூனை எங்க வீட்டுத் தாழ்வாரத்தில் ஆறு குட்டி போட்டது. அது குட்டி போட்டதுமுதல் ஏழு இடம் மாற்றுமாம்.

அந்த ஏழு இடமும் எங்க வீட்டிலே வேறு வேறு இடங்களில் டேரா போட்டது. முதல் இரண்டு நாட்கள் சமர்த்தாகப் பாதுகாப்பாகப் படுத்திருந்தது. மூன்றாம் நாள் முதல் யாருக்கும் தெரியாமல் மெதுவாக வெளியே சென்று கண்டதைக் குட்டிக்கு உணவாக எடுத்துவரும்.  நாத்தம் சகிக்காது. பாதி வழியிலேயே விட்டுவிடும். தனியாகச் சுத்தம் செய்யணும்.

சில நாட்கள் கழித்து குட்டிகள் நடமாடத் தொடங்கும், துள்ளும், பாயும், ஓடும் எனப் பல விளையாட்டுக்கள்.  வீட்டில் மற்றவர்க்கு அது வேடிக்கையாக இருக்கும்,  எனக்கு அது வேதனையாக இருக்கும்.  ” தே தே இங்க வராதே…  அங்க போகாதே” என்று சத்தம் போட்ட வண்ணமிருப்பேன்.  

“வீட்டிலே பூனைக் குட்டி போட்ட ஐய்ஸ்வரியம்டா” என் தாய் தான் அந்த நாளில் கூறுவாள், அது ஞாபகத்துக்கு வந்தது.


பூனையிடம் தோற்று நான் “ங” என்று நின்றிருந்தேன். எப்போதும் பூனைக்குத்தான் வெற்றி .