வவேசு/காலமாயம்

காலமெனும் நதியினிலே
கால் நனைத்து நின்றேன்;
கால் நனைத்து நின்ற பின்னும்
மனம் பதியவில்லை;
நின்ற கணம் நிலைகுலைந்து
சென்ற கணம் ஆச்சு
சென்ற கணம் நினைவுக் கூட்டில்
சேர்ந்த கணம் ஆச்சு.

காலமெனும் காற்றை அள்ளக்
கை விரித்து நின்றேன்
காற்று தொட்ட கணங்களெலாம்
கையில் சிக்கவில்லை;
தொட்ட கணம் விலகிச் சென்று
தோற்ற கணம் ஆச்சு
தோற்ற கணம் மனத்தின் ஓரம்
தோரணமாய் ஆச்சு.

காலமெனும் சுடரொளியை
கண்கள் காண நின்றேன்;
கண்டு நின்ற பின்னும் விழியில்
கதிர்கள்படரவில்லை;
பட்டு நின்ற ஒளியின் கீற்றுப்
பட்டுப் போனதாச்சு
பட்டு நின்ற பரவசங்கள்
பழங் கதையாய் ஆச்சு.

காலமென்ற வானத்தில்
நான் பறந்து சென்றேன்
பறந்து பார்த்த பின்னும் எந்தச்
சுவடும் தெரியவில்லை;
பாதையிலாப் பாதையிலே
பறப்பதென்று ஆச்சு
பார்த்திராத சுவடு நீண்டு
நெஞ்சில் பதியலாச்சு.

காலமென்ற மண்ணிதிலே
கால் பதிந்து நின்றேன்
கால் பதிந்து நின்ற பின்னும்
கனவு நிற்கவில்லை;
கனவினிலே மறைவதுதான்
காலமென்று ஆச்சு
நனவில் எதை நம்புவது?
நான் அழிந்து போச்சு.

(இன்று காலை எழுந்த கவிதை)

26/03/2024