மீ.விசுவநாதன்

நூறு வயதுநாம் நோயின்றி வாழ
ஆறு, குளங்கள், அருவியில் குளிப்போம் !
பச்சை வயல்வெளி பாதம் பதித்து
உச்சி வானிலே உடனே பறப்போம் !
தண்ட வாளத்தில் காலிரண்டைப் பரப்பியே
கொண்ட நண்பருடன் குதிபோட் டாடுவோம் !
“பட்டம்” செய்து பகலுணவு மறந்தே
வெட்ட வெளியிலே வெகுநேரம் ரசித்துப்
பறக்க விட்டே பறவையாய் மாறுவோம் !
உறக்க மின்றியே ஒவ்வொரு இரவிலும்
கண்ண தாசன் பாடலை வானொலிக்
கிண்ணம் மூலமாய் செவிக்குண வாக்குவோம் !
கண்களில் காதலை கலந்து வைத்தே
உண்மையாய் உறவினை உள்வைத்துத் தேடுவோம் !
வகுப்பிலே பாடத்தை மனத்திற்குள் வாங்காமல்
செகத்தையே மறந்துநாம் சென்றிடுவோம் எங்கெங்கோ !
உலகத்து நடப்புதனை ஒருதுளியே படித்தாலும்
பலநேரம் திரைப்படத்துப் பாவைகளைப் படித்திருப்போம் !
ஊர்கூடித் தேரிழுக்கும் உற்சாக வேளையிலே
மார்கூடி நண்பருடன் மனம்விட்டுப் பேசிடுவோம் !
உயர்பள்ளிப் படிக்கையிலே உருவான நட்பென்றும்
துயர்நீக்கும் இறையாக துலங்குவதில் கண்பனிப்போம்!
மணிமுத்தார், மான்சோலை, வளரருவி குற்றாலம்,
மணிமணியாய்க் கார்மேகம் மயங்கிவரும் பாபநாசம்
எங்களது கவலைகளை எரித்துவிடும் இன்பத்தீ!
எங்கு நாங்கள் இருந்தாலும் இதயத்துக்
கரும்பாக இனிக்கின்ற கடவுளிட்ட சீதனங்கள் !
அரும்பும் பிறப்பிருந்தால் அவசியம் இங்கேதான்
வரவேண்டும் ! குருவியது மனம்போல வாழும்
வரம்வேண்டும் என்றுதான் மன்றாடி வேண்டுகிறோம் !
சென்ற காலம் சென்றதுதான் என்றாலும்
இன்றதையே மனக்கண்ணில் இன்பத் தீபமென
ஏற்றி வைத்து எழிலுலகில் இணைந்திருப்போம் !
ஊற்றெனவே பொங்கிவரும் உற்சாக நெஞ்சத்தில்
“நினைவே பரிசாக” இருக்கின்ற தென்றாலும்
நினைவுப் பரிசும் நிறையக் கொடுத்து
நிம்மதியை உணர்கின்ற நேரத்தைப் பெறுகின்றோம் !
நம்மதியோ சிறுதுளிதான் ! நற்செயலாய்ப் பலதுளிகள்
ஒன்றாகச் சேர்கையிலே ஓசையிலா நடுக்கடலாய்
நன்றாக ஆழமுள நம்மனத்தில் முத்துவரும்!
வாலிபப் பருவத்தில் வாய்த்தநல் நட்பொன்றே
பாலிலே விழுந்த பழமாக நம்விதியை
மாற்றிய பிரும்மனின் வரமென்றே
போற்றி வாழ்த்துகிறேன் புகழ்மிக்க நண்பர்களே !
(10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளியில் படித்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்து எழுதியது.)
(13.11.2017 10.10 am)
