ப.மதியழகன்/கார்ப்பரேட் கடவுள்

இந்தப் பகலுக்குப் பின்னான இரவு
அவ்வளவு எளிதாக
கடந்துவிடக் கூடியதாக இல்லை
எவ்வித சமாதானங்களையும் மனம்
ஏற்க மறுத்தது
இடதா வலதா என
எவ்வித வழியையும்
என் சிற்றறிவின் துணைகொண்டு
தேர்ந்தெடுக்க இயலவில்லை
கலக்கத்துடன் கடந்து கொண்டிருந்தது
நொடிகள்
தலை வின்னென்று தெரித்தது
படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன்
நம்பிக்கைக் கயிறுகள்
ஒவ்வொன்றாக அறுபட்டன
இயற்கை உபாதைக்காக
எழுந்தவுடன்
உடல் நிலைகொள்ளாமல்
இங்குமங்கும் அல்லாடியது
ஊரே தூங்கிக் கொண்டிருந்தது
போனால் போகட்டும் போ என்று
நடந்ததை கடந்துசெல்ல
என்னால் முடியவில்லை
நினைவு முட்கள் உடலெங்கும்
குத்திக் கிழிக்க
தன்மானம் முக்கியம் என்ற
முடிவுக்கு வந்தேன்
கடவுளெனும் முதலாளிக்கு
அடிமைகள் தான் தேவைப்படுகிறார்களேத்
தவிர காம்ரேட்டுகள் அல்ல
உழைத்து ஊதியம் பெறுபவர்கள்
கம்பெனி மாறலாம்
உலகத் தொழிற்சாலையை விட்டு
வெளியேற முடியுமா?

One Comment on “ப.மதியழகன்/கார்ப்பரேட் கடவுள்”

Comments are closed.