அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 68

28.03.2024

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் : ஆராச்சாரைப் படித்தீர்களா?
அழகியசிங்கர் :  இல்லை. நாளை குறைந்தபட்சம் பத்து பக்கங்களாவது படிக்க நினைக்கிறேன்.
மோகினி : போஸ்டல் காலனி லைப்ரரிக்குப் போய் என்ன செய்கிறீர்கள்.
அழகியசிங்கர் :  புத்தகங்கள் எல்லாம் கலைந்து கிடக்கிறது. அதைச் சரியாக அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன்.
மோகினி :  அங்கு எதாவது புத்தகம் எடுத்துப் படிக்கிறீர்களா?
அழகியசிங்கர் :  கொஞ்ச நேரம்தான் இருப்பேன்.  அந்த நேரத்தில் இரண்டு புத்தகங்கள் படிக்கிறேன்.  ஒன்று ஆங்கிலப் புத்தகம்.  இன்னொன்று தமிழ்ப் புத்தகம்.
மோகினி : என்னன்ன புத்தகங்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
அழகியசிங்கர் :. சார்லஸ் டிக்கன்ஸனின் ஆலிவர் டுவிஸ்ட். இன்னொன்று மடிசார் மாமி என்ற தேவி பாலா புத்தகம்.
ஜெகன் : வேடிக்கையாக இருக்கிறது நீங்கள் படிக்கிற புத்தகங்களைப் பற்றிக் கேட்கும்போது. 
அழகியசிங்கர் :  கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் நம்பிக்கையான எழுத்தாளர்  தேவி பாலா.  அவர் எழுத்தையே படித்ததில்லை.  அப்படி மெச்சும்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்தான் படிக்கிறேன்.  எப்போதும் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டுமென்றால் தயக்கம் இருக்கும். அதனால் சார்லஸ் டிக்கன்ஸ் புத்தகம் எடுத்துப் படிக்கலாமென்று படிக்கிறேன். தினமும் சில பக்கங்கள் படித்தவுடன் அங்கயே மடித்து புத்தகங்களை வைத்து விடுவேன்.
மோகினி :  அங்கே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்? 
அழகியசிங்கர் :அரை மணி நேரம் மேல் இருக்க மாட்டேன்.
மோகினி :  நாளை கதைஞர்கள் கூட்டத்தில் எந்தப் புத்தகத்தை எடுத்துப் பேசப் போகிறீர்கள்.
அழகியசிங்கர் : பி.சத்யவதி என்ற தெலுங்கு எழுத்தாளரின் சிறுகதைகளை எடுத்துப் பேசப்போகிறோம். மொழி பெயர்த்தவர் கௌரி கிருபானந்தன். 
மோகினி : கௌரி கிருபானந்தன் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வித்தை தெரிந்தவர்.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம். இரவு வணக்கம்.
                    (இரவு 11.00 மணிக்கு)