தெலுங்கில் :பி. சத்யவதி/சூப்பர் மாம் சிண்ட்ரோம்



மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
(மார்ச், மங்கையர் மலர்,2011)

“புராணத்தில் சுமதி சூரியனை தடுத்து நிறுத்தி விட்டாற் போல் அனுராதா காலச்சக்கிரத்தை நிறுத்திவிட்டாளா என்ன?” நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே.
“காலச்சக்கிரம் நின்றுவிடவில்லை. அனுராதாதான் நின்று போய்விட்டாள்” என்பது போல் சுவற்றில் இருந்த கடியாரம் ஒன்பது முறை மணி அடித்தது. வழக்கமாக அனுராதா எழுந்து கொண்டு பாதி வேலைகளை முடித்தால் தவிர கதிரவன் உதயிக்க மாட்டான். சமையலறை விழித்துக் கொள்ளாது. வாசலில் கோலமிடப் படாது. சமையலறை விசில் சத்தத்துடன், விதவிதமான ஓசைகளுடன் சுறுசுறுப்பாக இயங்காது. அது ஒன்று மட்டுமே இல்லை. சகல உலகமும் தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறாது. அப்படிப்பட்ட அனுராதா இன்னும் போர்த்தியபடி படுத்திருப்பது சுவாமிநாதனுக்குப் புரியவில்லை. அவள் பொறுப்பு தெரியாத இல்லதரசியும் இல்லை.
தினமும் காலையில் ஐந்து மணிக்கு டஞ்சனாக விழித்துக் கொண்டு தெரு முனை வரையில் நடந்து போய் பால் பாக்கெட்டுகள் வாங்கி வருவாள். பால் போடும் பெண் சமீபத்தில் பாக்கெட்டுக்கு பத்து ரூபாயாக கட்டணத்தை உயர்த்திய பிறகு அனுராதா மார்னிங் வாக் தொடங்கிவிட்டாள். அந்த விதமாக மாதம் முப்பது ரூபாய் மிச்சம் பிடித்தாள். விடியற்காலையில் வாசலை பெருக்கி கோலம் போடுவதற்கு ஆளைப் போட்டுக்கொண்டாள். அப்பொழுதே பாத்திரங்களையும் தேய்த்துக் கொடுத்து விடுவாள் அந்தப் பெண். ஏன் என்றால் அனுராதாவுக்கு எட்டரை மணிக்குள் வேலைகள் முடிந்து விட வேண்டும். அவளை இப்பொழுது மெயின் பிராஞ்சிற்கு மாற்றி விட்டார்கள். அந்த இடம் ரொம்ப கூட்டமாக இருக்கும். ரிக்ஷாவில் போனால் ரொம்ப செலவாகும். ஆட்டோ பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. அதனால் மொபெட் வாங்கிக் கொண்டாள். மொபெட் வாங்கிக் கொள்ளும் போது அவளுக்கு வயது நாற்பத்தி ஐந்து. நெரிசல் அதிகமாக இருக்கும் போது, ட்ராபிக் நேரத்தில் வண்டியை ஓட்டுவது சிரமம் என்பதால் முக்கால் மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டு புறப்பட்டு விடுவாள். அப்படி இருக்கும் போது காலையில் ஒன்பது மணி வரையிலும் போர்வையை விலக்காமல் படுத்திருக்கிறாள் என்றால் உடல்நலக் குறைவாக இருக்கக்கூடும். அவளுக்கு உடல் நலம் சரியாக இல்லாமல் சுவாமிநாதன் சமீபகாலத்தில் பார்த்ததில்லை.
சுவாமிநாதன் அவள் முகத்தில் போர்த்தியிருந்த போர்வையைப் பிடுங்கிப் போட்டார். கண்கள் அகல, வாய் மீது கையை வைத்தபடி, கீழே விழத் தெரிந்தவர் சுவற்றில் சாய்ந்தபடி நின்று விட்டார். அனுராதாவின் உடல் முழுவதும் சுண்ணாம்பு அடித்தாற்போல் வெண்மையாக இருந்தது. கண்கள் திறந்த நிலையில் இருந்தன. புடவைக்கட்டு அப்படியே இருந்தது. ஆனால் கைகளும், கால்களும் சுண்ணாம்பால் செய்தது போல் தென்பட்டன. கண்களும், தலை முடியும் தவிர மீதி உடல் முழுவதும் சுண்ணாம்பாக இருந்தது. கண்கள் நிர்மலமாக, வழக்கத்தை விட ஒளிவீசிக் கொண்டிருந்தன.
முதல்நாள் இரவு பன்னிரெண்டு மணி வரையிலும் அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள். கடந்த வருடத்திலிருந்து தினமும் தவறாமல் பார்க்கும் ஹிந்தி சீரியலைப் பார்த்தாள். காலையில் டிபனுக்காக இட்லி மாவு அரைத்தாள். தண்ணீரை காய்ச்சி பில்டரில் ஊற்றி வைத்தாள். அவளுக்கு எப்போதும் முன்பார்வை அதிகம். மறுநாளுக்காக முதல்நாளே அத்தனை ஏற்பாடு செய்தவள் இன்று இப்படி சுண்ணாம்பு பொம்மையாக மாறிவிட்டாள். இதுபோன்ற நோயைப் பற்றி சுவாமிநாதன் இதற்கு முன்னால் கேள்விப்பட்டதே இல்லை. மூக்கின் அருகில் விரலை வைத்து பார்த்தார். சுவாசம் நின்று விட்டிருந்தது. மார்பின் மீது காதை வைத்தார். இதயத்துடிப்பு இருக்கவில்லை. திடுக்கிட்டார் சுவாமிநாதன். அனுராதா இறந்து போய்விட்டாளா? அவள் இறந்து போவதாவது? சுவாமிநாதன் வியர்வையால் தொப்பலாக நனைந்துவிட்டார். எப்படியோ நடந்து சென்று நண்பன் ராமமூர்த்திக்கு போன் செய்து டாக்டரை அழைத்து வரச்சொன்னார். அனுராதாவுக்கு வந்த நோய் என்னவென்று டாக்டருக்கும் புரியவில்லை. ஆனால் அவள் இறந்து போய் விட்டதை மட்டும் உறுதிப் படுத்தினார். நிமிடங்களில் அனுராதா இறந்து போன செய்தி தெரு முழுவதும் பரவிவிட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவசர அவசரமாக காபி கலந்து குடித்துவிட்டு, குழாய்த் தண்ணீரை பிடித்து வைத்துவிட்டு சுவாமிநாதன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பிணத்தை கீழே இறக்கி வைத்து விட்டு தலை மாட்டில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்று அடுத்த வீட்டு பாட்டி எடுத்துரைத்தாள்.
வராண்டாவில் பாயை போட்டு பிணத்தை அதன் மீது படுக்க வைத்தார்கள். “குழந்தைகளுக்கு போன் செய் சுவாமிநாதன்” என்றார் ராமமூர்த்தி. சுவாமிநாதன் அடிக்கடி ஐ.எஸ்.டி. செய்கிறார் என்று அந்த வசதியை துண்டித்து வைத்திருந்தாள் அனுராதா. குழந்தைகளின் போன் நம்பர்களை கொடுத்து அந்த வேலையை ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார் சுவாமிநாதன். அவர் இன்னும் பல் தேய்க்கவில்லை. காலையில் எழுந்து பல் தேய்த்து விட்டு வந்ததும் டம்ளரில் தளும்ப தளும்ப ஆவி பறக்கும் காபி தயாராக வைத்திருப்பாள் அனுராதா. இரண்டு டம்ளர் காபிக்கு எவ்வளவு பொடி போட வேண்டும், எவ்வளவு பால் கலக்க வேண்டும் என்று அவளுக்கு தெரிந்தாற் போல் வேறு யாருக்கும் தெரியாது.
ராமமூர்த்திக்கு அனுராதாவின் உடலை ஒரு தடவை தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கட்டிலிலிருந்து இறக்கும் போது கால்களை பிடித்துக் கொண்டாரே ஒழிய கால்கள் மீது புடவை கொசுவங்கள் இருந்தன. அவள் உடல் சுண்ணாம்பாக எப்படி மாறிவிட்டது? அது உண்மையிலேயே சுண்ணாம்புதானா அல்லது வேறு ஏதாவதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆனால் அந்த உடல் அவன் நண்பனின் மனைவியுடையது. அவனுடைய பொருள் இல்லையா? பிணமாக இருந்தாலும் அதன் மீது அவனுக்குத்தானே அதிகாரம் இருக்கிறது? தொட்டுப் பார்ப்பதாக சொன்னால் சம்மதிப்பானோ இல்லையோ?
யாரோ உரிமை எடுத்துக் கொண்டு காபி கலந்து எடுத்து வந்து சுவாமிநாதனிடம் கொடுத்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். பிணத்திற்கு அருகில் உட்கார்ந்து காபி குடிப்பது நன்றாக இருக்காது என்று அடுத்த அறைக்குப் போனார் சுவாமிநாதன். இதுதான் வாய்ப்பு என்று ராமமுர்த்தி அவள் கால் அருகில் கொஞ்சம் கிள்ளி, வெள்ளை நிறத்தில் சுண்ணாம்புத் துண்டு ஒன்றை எடுத்து ஜேபியில் வைத்துக் கொண்டு போன் செய்வதற்கு கிளம்பினார்.
“மம்மீயை நான் வரும் வரையில் வைத்திருங்கள். ஏதாவது ஒரு பிளயிட்டை பிடித்து எப்படியாவது வந்து சேருகிறேன்” என்றாள் சுவாமிநாதனின் மகள் நியுஜெர்சியிலிருந்து.
மகன் போனில் அழுதுவிட்டான். அவனுக்கு இந்தியாவுக்கு வந்தால் திரும்பவும் விசா கிடைப்பது கஷ்டம். “மம்மீ ஏன் இப்படி எங்களை விட்டுவிட்டு போய் விட்டாள் அங்கிள்? என்னதான் நடந்தது?” என்று புலம்பித் தள்ளிவிட்டான்.
அவனை எப்படியாவது அமெரிக்காவுக்கு அனுப்பியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டது அனுராதாதான். உருட்டி மிரட்டி படிக்க வைத்து, நிறைய செலவு செய்து அவனை வெளிநாட்டுக்கு துரத்தியதும் அவள்தான். வங்கியில் எல்லோரும் அவளைப் பாராட்டுவது போல் பார்ப்பார்கள். “உன் குழந்தைகள் வைரம்” என்பார்கள். எல்லோரும் அப்படி சொல்ல வேண்டும் என்று அனுராதா விரும்பினாள். அவளுடைய விருப்பம் நிறைவேறிவிட்டது.
“அம்மா மட்டும் இல்லை என்றால் தன்னால் இதை சாதித்து இருக்க முடியாது. ஆனால் இப்பொழுது தன்னால் அம்மாவைப் பார்க்க முடியாது. தன்னால் முடியாமல் போய் விட்டதே” என்று புலம்பினான் மகன்.
“பாடியை ஐஸ் கட்டி மீது வைக்க வேண்டும். மகள் வரும் வரையில் இப்படியே வைத்தால் கெட்டுப் போய்விடும்.” யாரோ சொன்னார்கள்.
“இது சாதாரண பிணம் இல்லை. சுண்ணாம்புக் கட்டியாக இருக்கிறது. ஐஸ் மீது வைத்தால் உருகிப் போய் விடாதா?” இன்னொருத்தர் சொன்னார்கள்.
போன் கால்கள் செய்து முடித்த பிறகு ராமமூர்த்தி தன்னுடைய வீட்டிற்குப் போய் டிபனை சாப்பிட்டு விட்டு ஜேபியிலிருந்து டாப்லெட் போன்ற பொருளை எடுத்து மகள் கையில் வைத்தார். அனுராதா இறந்து போன விஷயத்தை விலாவாரியாக தெரிவித்தார். அந்தப் பெண் சட்டென்று அதை பர்ஸில் போட்டுக் கொண்டு அருகில் இருந்த லாபரேட்டரிக்கு ஓடினாள். அவர்கள் அதை பரிசோதித்துவிட்டு தலைவலிக்குப் போட்டுக் கொள்ளும் ஆஸ்பிரின் மாத்திரை என்று சொன்னார்கள்.
“நானும் அங்கே வருகிறேன் டாடி” என்று பூதக்கண்ணாடி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு வந்தாள் ராமமூர்த்தியின் மகள். அவள் பெயர் சுசீலா. அந்தத் தெருவில் அனுராதாவைத் தெரியாதவர்கள் இல்லை. அவளுடைய போக்குவரத்தையொட்டி கடியாரத்தை சரி செய்து கொள்பவர்கள், அவளைப் பார்த்து வீட்டை நேர்த்தியாக எடுத்து வைப்பவர்கள், பல விஷயங்களில் அவளை பின் பற்றுபவர்கள் இப்படி எத்தனையோ பேர். சுசீலா கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போய் அனுராதாவின் கைமீது லென்ஸை வைத்து பார்த்தாள். அவள் உடல் சுண்ணாம்பாக மாறவில்லை. உடல் முழுவதும் விதவிதமான மாத்திரைகளை ஒட்டி வைத்தாற்போல் இருந்தது. சின்னவை சிலது, பெரியவை சிலது, சிலது இளம் ரோஜா நிறத்தில், சிலது உருண்டை வடிவத்தில், சிலது சதுரமாக. இப்படி பல விதமான டாப்லெட்டுகளை ஒட்டி செய்த பதுமை போல் இருந்தாள் அனுராதா.
“எறும்புகள் மொய்க்கிறது” என்றாள் ஒருத்தி பதற்றத்துடன்.
“ஆமாம். அதில் சில சுகர் கோடெட் மாத்திரைகளும் இருக்கக் கூடும் இல்லையா” என்றாள் சுசீலா.
“ஆமாம். சுகர் கோடெட் டாப்லெட்டுகளை தானே சிலசமயம் அவளுக்குக் கொடுத்ததுண்டு.” நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன்.
சுசீலாவின் கையிலிருந்து லென்ஸை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிநாதன் பார்க்காமல் அனுராதாவின் கையை, கால்களை கிள்ளிப் பார்த்தார்கள் இன்னும் சிலர்.
பாய் மீதிருந்த அவளுடைய உடலை பெஞ்சியின்மீது சேர்த்தார்கள். சுற்றிலும் எறும்பு மருந்து பொடியைத் தூவினார்ககள். மகள் வருவதற்குள் அவளுடைய உடலை ஆளாளுக்கு கிள்ளி எடுத்து மாயமாக்கி விடுவார்களோ என்று தோன்றியது சுவாமிநாதனுக்கு. “உடலை படுக்கையறைக்கு மாற்றுங்கள்.” திடீரென்று சொன்னார்.
“அப்படிச் செய்யக் கூடாதுப்பா. எந்த நட்சத்திரத்தில் இறந்து போனாளோ?” என்றாள் பக்கத்து வீட்டு பாட்டி.
“பரவாயில்லை பாட்டி. இந்த வீடு அவள் கட்டியது. உடலில் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் இந்த வீட்டுக்காகத்தான் செலவழித்தாள். அதனால் அவளுடைய உடலை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்” என்று அனுராதாவின் உடலை மறைத்து வைத்துவிட்டார் சுவாமிநாதன்.
இருபத்தெட்டு வருடங்கள் கூட வாழ்ந்தவள். எல்லாமே கொடுத்தாள். நட்பு, காதல், பணம், உபசரிப்பு….. இறுதியில் இப்பொழுது உயிர்.
வீடு முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வீட்டில் கூட்டம் கூடினால் அனுராதாவுக்குப் பிடிக்காது. தான் போட வைத்த மார்பிள் ப்ளோரிங் அழுக்காகி விட்டால் சோப் தண்ணீரால் அலம்பி துடைப்பாள். பாத்ரூம்களை தானே சுயமாக தேய்த்து அலம்புவாள். வந்தவர்கள் சோப்பாக்களில் கண்டபடி உட்கார்ந்து பாழடித்துக் கொண்டிருந்தார்கள். அனுராதாவின் இதயம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும். சுவாமிநாதன் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு எதுவும் தெரியாது. வீட்டை நிர்வாகம் செய்வதிலிருந்து மனி மேனேஜ்மெண்ட் வரையில் எல்லாமே அவள்தான். ஷேர்கள் வாங்குவது விற்பது, தங்கத்தை அடகு வைத்து மேலும் தங்கத்தை வாங்குவது, ஒன்றா இரண்டா? சுவாமிநாதனின் குடும்பம் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவள்தானே!
“ஐயாம் சாரி பப்பா!” என்றபடி மகள் வந்து சேர்ந்தாள்.
மகளுக்கு அமெரிக்கா வரனை முடிப்பதற்கு அனுராதா எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று சுவாமிநாதனுக்குத் தெரியும். சம்பந்தி அம்மாள் கேட்ட சீர் வரிசைகளை செய்வதற்கு எவ்வளவு அவஸ்தைப் பட்டாள் என்று அவருக்குத்தான் தெரியும். அந்த மகள் கருவுற்றால் பிரசவம் பார்ப்பதற்காக அமெரிக்கா போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தாள். போக வர டிக்கெட் எப்படியும் மகள் வாங்கி விடுவாள். இருந்தாலும் சொந்த செலவுகளுக்காக டாலர்கள் வேண்டும் இல்லையா? அதற்காக சமீபகாலமாக ரொம்ப கஞ்சத்தனமாக பணத்தை சிக்கனம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
அந்த மகள் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் நேரம் வரவில்லை. அவளும், அவள் கணவனும் பயன்படுத்தும் கார்களுக்காக வாங்கிய கடன்கள், புதிதாக வாங்கிய வீட்டுக்கு கட்ட வேண்டிய தவணைத் தொகை எல்லாம் ஒரு வழிக்கு வந்தால் தவிர குழந்தையைப் பெறுவதைப் பற்றி யோசிக்க முடியாது. பாவம்! அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது. இப்பொழுதே குழந்தையைப் பெற்றுக்கொள் என்று வலியுறுத்தி வருகிறாள் என்று மகள் உள்ளூர சிரித்துக் கொள்வாள். வெளிநாட்டில் மகள் வாழும் ராஜ வைபோகத்தைப் பார்க்காமலேயே போய் சேர்ந்துவிட்டாள். இது என்ன நோய்? ரொம்ப விசித்திரமாக இருக்கிறது.
“மாப்பிள்ளை வரவில்லையாம்மா?” கேட்டார் சுவாமிநாதன்.
“ரவிக்கு லீவ் கிடைக்க வில்லை அப்பா. ஹி வாஸ் ஸோ சாரி. ஹி குடிண்ட் மேக் இட்” என்றாள். அவள் பெயர் ரஜனி.
“இறந்து போனது உங்க அம்மாதானே? நீ மட்டும் போனால் போதும். வரும் போது உங்க அப்பாவை அழைத்துக்கொண்டு வா” என்று சொன்னான் அவள் கணவன்.
“பிணத்தை குளிப்பாட்டுங்கள்” என்றார்கள் உறவினர்கள்.
“குளிப்பாட்டினால் மாத்திரைகள் எல்லாம் கரைந்து போய் விடும். எரிப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்காது. வெறுமே மஞ்சள் ஜலத்தைத் தெளித்து சுத்தி செய்யுங்கள்” என்றார் ஒருவர்.
“பிணத்தை குளிப்பாட்டவில்லை என்றால் ஆன்மா சுவர்க்கத்திற்கு போகாது” என்றாள் அடுத்த வீட்டு பாட்டி. குளியலா, மஞ்சள் தண்ணீரா என்று கொஞ்ச நேரம் சர்ச்சை நடந்தது. கடைசியில் மஞ்சள் தண்ணீருக்குத்தான் மெஜாரிடீ கிடைத்தது. “பிணத்தின் கண்கள் மூடவே இல்லையே?” யாரோ சொன்னார்கள். “என்னால் முடியாது” என்றாள் ரஜனி.
சுவாமிநாதன் முயற்சி செய்தார். ஆச்சரியமாக இருந்தது. அவள் உயிருடன் இருக்கும் போது எத்தனையோ முறை அவள் கண்களை மூட வைத்திருக்கிறார்.
சுபத்திராவுக்கு மாதாமாதம் பணம் அனுப்பி வைத்து, பாலாமணியுடன் சினிமா, பீச் என்று ஊர் சுற்றி.
இப்பொழுது அந்த கண்கள் மூடிக் கொள்ளவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? பிணத்தைத் தூக்கப் போன போது மூச்சிரைத்தபடி பேதாலஜி புரொபசர் பிரகாஷ் வந்தார். அனுராதாவுக்கு பெரியம்மாவின் மகன். கூடவே ஏதோ கருவிகளை கொண்டு வந்தார்.
“என் மனைவி பிணத்தின் மீது எந்த பரிசோதனை நடத்துவதற்கும் நான் சம்மதிக்க மாட்டேன்” என்றார் சுவாமிநாதன். அவருக்கு பிரகாசைக் கண்டால் கொஞ்சமும் பிடிக்காது, அனுராதாவுக்கு அண்ணாவிடம் பிரியம் என்பதால்.
“என் மனைவியை சகல மரியாதைகளுடன் சுவர்க்கதிற்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு என் மீது இருக்கிறது. அவள் உடலுக்கு ஏற்பட்ட இந்த களங்கத்திற்கே என் இதயம் சுக்கு நூறாகிவிட்டது. இது ஒன்றுதான் பாக்கி” என்றார் சுவாமிநாதன்.
“அது இல்லை அத்தான்! மருத்துவ உலகிற்கே இது ஒரு சவால்! ஏன் இப்படி நடந்தது என்று தெரிந்து கொள்வது நம்முடைய கடமை. நாட்டிற்கு இது ரொம்ப தேவை.” பிடிவாதம் பிடித்தார் பிரகாஷ்.
அனுராதா இறந்து போனது, அவள் உடல் டாப்லெட்டுகளாக மாறிவிட்டது எல்லா பத்திரிகைகளுக்கும் தெரிந்து போய் விட்டது. அந்த ஊரில் நடக்கும் விசேஷங்களை, விநோதமான செய்திகளை வீடியோவாக எடுத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்பனை செய்யும் நிருபர் ஒருவருக்கும் இந்த செய்தி எட்டி விட்டிருந்தது. அவர்கள் எல்லோரும் வரும் முன்பே பிணத்தை தகனம் செய்து முடித்துவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சுவாமிநாதன்.
“மாமாவைப் பார்க்க விடுங்கள் அப்பா” என்றாள் ரஜனி. பிரகாஷ் அரைமணி நேரம் அனுராதாவின் உடலை பரிசோதித்துவிட்டு நோட்ஸ் எழுதிக் கொண்டார். சிலர் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
“இதெல்லாம் அம்மாவின் உயிரற்ற உடலுக்குத் தானே அப்பா. அவளுடைய ஆன்மா எப்பொழுதோ சுவர்க்கத்திற்கு போய் சேர்ந்திருக்கும்” என்று தந்தையை சமாதானப் படுத்தினாள் ரஜனி.
எப்படியோ அனுராதாவின் பிணம் காட்டிற்கு கொண்டு போகப்பட்டது.
” ஆம், அது உண்மையிலேயே வெறும் கட்டைதான். அந்த உடலில் பல உறுப்புகள் இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால் கருப்பையை நீக்கிவிட்டார்கள். அத்துடன் ஓவரீஸையும் நீக்கி விட்டார்கள். வேலையோடு வேலையாக அபெண்டிக்ஸ் கூட எடுத்து விட்டார்கள். இனி எஞ்சியிருக்கும் சதையும் நரம்புகளும் மாத்திரைகளாக மாறி விட்டன. இருந்தால் மூளையும் இதயமும் இருக்க வேண்டும்” என்றார் சுவாமிநாதன் கண்களைத் துடைத்துக் கொண்டே. அனுராதாவின் உடல் பலவிதமான வர்ணங்களில் எரிந்து கொண்டிருந்தது. டாப்லெட்டுகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் எரியும் போது ஏற்படும் வர்ணங்கள்!
திடீரென்று ஏதோ உடைந்த சத்தம் கேட்டது. சிதையிலிருந்து பாசி பிடித்தாற்போல் பொருள் ஏதோ ஒன்று பறந்து வந்து சுவாமிநாதனின் கால்மாட்டில் விழுந்தது. “என்ன இது?” திடுக்கிட்டார் அவர். பிரகாஷ் அதை கையில் எடுத்துக் கொண்டு கத்தியால் மேலே படிந்திருந்த பாசியை சுரண்டினார். பளபளவென்று மின்னிக் கொண்டு அனுராதாவின் மூளை வெளிப்பட்டது. அதை சுவாமிநாதன் அடையாளம் கண்டுகொண்டார். கல்யாணம் ஆன புதிதில் தன்னுடன் செஸ் விளையாடிய முளை! வங்கி தேர்வுகளில் நல்ல ரேங்க் வாங்கிய மூளை! ஏன் இப்படி பாசி பிடித்துவிட்டது?
பிரகாஷ் சிரித்தார். “உங்கள் வீட்டில் சிங்குகள், பாத்ரூம்கள் பளபளவென்று மின்னும் விதமாக தேய்த்து அலம்புவாள் இல்லையா? அந்த பாசி எல்லாம் அவள் மூளைக்கு வந்து சேர்ந்து விட்டது போலும்” என்றார்.
அனுராதாவின் உடலை அக்னிக்கு இரையாக்கிவிட்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அவளுடைய போட்டோவில் நல்லதாக ஒன்றை தேர்வு செய்து லாமினேஷனுக்குக் கொடுக்க முற்பட்டார் சுவாமிநாதன்.
இழவு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிக் கொண்டிருந்த பிரகாஷிடம் வந்தாள் சுசீலா. “அங்கிள்! நானும் உங்களுடன் வருகிறேன்” என்றாள்.
“என்னுடன் உனக்கு என்ன வேலை?” பேத்தாலஜி புரொபசர் பிரகாஷ் கேட்டார். அவர் அனுராதாவை சொந்த தங்கைக்கும் மேலாக நினைப்பவர். எத்தனையோ முறை கேட்காமலேயே அறிவுரைகளை வழங்கி அவளிடம் வெசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
“அனுராதா ஆன்டீக்கு வந்த நோய் என்னவென்று நீங்க எனக்கு சொல்லியாகணும்” என்றாள் சுசீலா.
“என்னிடமும் சொல்லுங்கள் அங்கிள்! மம்மாவுக்கு வந்த நோய் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்றால் எப்படி?” என்றபடி ரஜனியும் வந்து சேர்ந்து கொண்டாள்.
பிரகாஷ் சிரித்தார். “இதை சூப்பர் மாம் சிண்ட்ரோம் என்பார்கள்.”
“உண்மையிலேயே எங்க மாம் சூப்பர் மாம்தான் அங்கிள்” என்றாள் ரஜனி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.
“அதுதான் அவளுடைய நோய்” என்றார் அவர்.
“அது என்ன நோய்? எப்படி வந்தது என்று சுற்றி வளைக்காமல் சொல்லுங்கள் அங்கிள்!” சலித்துக் கொண்டாள் சுசீலா.
“அனுராதாவுக்கு இந்த உலகில் இருக்கும் எல்லா பெண்களை விட தான் கெட்டிக்காரி, திறமைசாலி என்ற நம்பிக்கை அதிகம். அவள் பார்வையில் திறமை, புத்திசாலித்தனம் என்றால் வீடு வாங்குவது, அதை பளபளவென்று சுத்தமாக வைத்துக் கொள்வது, வேண்டிய அளவுக்கு பணத்தை சேமிப்பது, கஷ்டப்பட்டு உழைப்பது, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது, அதாவது அவர்களை நன்றாக படிக்க வைத்து டாக்டரோ, இன்ஜினியரோ ஆக்கி விட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவது. அது சாத்தியப் படவில்லை என்றால் அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு கட்டி வைத்து அனுப்பி வைப்பது. இதுதான் அவள் வாழ்க்கையின் லட்சியம். அந்த லட்சியத்தை அடைவதற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைத்தாள். அவள் லட்சியம் நிறைவேறிவிட்டது” என்று நிறுத்தினார் பிரகாஷ்.
“அதுக்கும் இந்த நோய்க்கும் சம்பந்தம் என்ன?” கேட்டாள் ரஜனி.
“சம்பந்தம் இருக்கு. இந்த லட்சியத்தை சாதிப்பதில் உங்க அம்மா தன் மனதிற்கு என்ன வேண்டுமோ, தன் உடலுக்கு என்ன தேவையாய் இருக்கோ எதையும் பொருட்படுத்தவில்லை. விதவிதமாக சமைப்பது, நல்ல புடவைகளை கஞ்சி போட்டு கட்டிக் கொள்வது, சிநேகிதிகளுக்கு, உறவினர்களுக்கு நடுவில் சிறப்பாக காட்சியளிப்பது இதுதான் தனக்கு வேண்டியது என்று நினைத்து விட்டாள். பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக உங்க அம்மா இயந்திரம் போல் உழைத்தாள். சுத்தம் என்ற பெயரில் வேறு யாரையும் செய்ய விட மாட்டாள். உங்க அப்பாவை சோம்பேறியாக்கிவிட்டு கையில் காபி கொண்டு கொடுப்பாள். வேலைக்காரியை வைத்துக் கொண்டால் பணம் செலவாகி விடும். அதற்காக மற்றவர்கள் செய்தால் தனக்குப் பிடிக்காது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். மாலையில் வீட்டுக்கு வரும் போது ஓய்ந்து போய் விடுவாள். வங்கியில் பணத்தைக் கையாளும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமோ உங்களுக்குத் தெரியாதது இல்லை. அப்படி வேலை செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது வழியில் காய்கறி, மளிகைச் சாமான் வாங்கி சுமந்து கொண்டு வருவாள். வீட்டிற்கு வந்ததும் இரவு சமையல், வீட்டை ஒழித்து வைக்கும் வேலை. களைப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தினமும் தலைவலி மாத்திரை போட்டுக் கொள்வாள். கடந்த பதினைந்து வருடங்களாக எவ்வளவு மாத்திரைகளை போட்டுக் கொண்டிருப்பாள் என்று நீயே கணக்குப் போட்டுப் பார்.
எது எப்படி போனாலும் வீட்டு வேலைகள் அந்தந்த வேளைக்கு நடந்தாக வேண்டும் என்ற கொள்கை. அப்படி நடக்க வேண்டும் என்றால் உடலில் எந்த உபாதைகளும் இருக்கக் கூடாது. ஜுரம் வந்தால் க்ரோசின் போட்டுக் கொள்வது, முதுகு வலி என்றால் வேறு ஏதாவது மாததிரையை விழுங்குவது, இப்படி சொந்த வைத்தியம்! அது போக கல்யாணம் கார்த்தி வந்தால், பண்டிகைகள், நோம்புகள் கொண்டாட வேண்டும் என்றால் வீட்டிற்கு விலக்கு ஆகாமல் இருக்க வேண்டும். அதைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை விழுங்குவாள். நீங்கள் படிக்கும் காலத்தில் பரீட்சை சமயங்களில் உங்களுக்குத் துணையாக விழித்துக் கொள்வாள். தூக்கம் வராமல் இருப்பதற்காக மாத்திரைகள். சில நாட்கள் தூக்கமே வராமல் தூக்கத்திற்காகவும் மாத்திரைகளை போட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஷேர்களை வாங்குவது விற்பது, இடத்தை வாங்குவது விற்பது, தங்கத்தை அடகு வைத்து மேற்கொண்டு தங்கம் வாங்கி தவணைகளை செலுத்துவது, சம்பளப் பணத்தை கூடுமான வரையில் மிச்சம் பிடிப்பதற்காக மீந்து போன சாதத்தை மறுநாள் புளியஞ்சாதமாக சாப்பிடுவது. ஒன்றா இரண்டா? நீங்கள் எல்லோரும் இந்த நிலையில் இருப்பதற்காக உங்க அம்மா நிறைய மாத்திரைகளை விழுங்கியிருக்கிறாள். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. அது இடைஞ்சல் தரும் விஷயம் இல்லையா? கருப்பையை எடுத்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று டாக்டர் சொன்னதில் அதை எடுத்துவிட்டாள். ஓவரீஸ்களில் ஏதோ பிரச்னை என்று அதையும் எடுத்துவிட்டார்கள்.
“அப்பாடா! இனி ஆண்களை போல் என்னால் மாதம் முப்பது நாட்களும் நிம்மதியாக உழைக்க முடியும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள். நான்கு வருடங்கள் நன்றாகவே கழிந்தன. பிறகு ஏதோ காம்ப்ளிகேஷன்ஸ். ஹார்மோன் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளணும் என்றார்கள். அதுவும் மாத்திரைகள்தான். சோர்வுக்காக இவளாகவே தினமும் பி காம்பளெக்ஸ் மாத்திரையை போட்டுக் கொள்வாள். நாற்பத்தி ஐந்து வயது ஆகும் போது சாளேஸ்வரத்துடன் ரத்த அழுத்தமும் வந்து சேர்ந்து விட்டது. அதற்காக தினமும் இரண்டு மாத்திரைகள். குழந்தைகள் முன்னுக்கு வந்து விட்டார்கள். மகனை இன்ஜினியராக்கிவிட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டாள். உனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வைத்தாள். அந்த கடன்களை எல்லாம் தீர்த்து முடித்தாள்.
சமீபகாலமாக இரவு நேரத்தில் ஏதோ ஒரு சானலில் சீரியல் ஒன்று பதினோரு மணிக்கு மேல் வருகிறது. ரொம்ப பரபரப்பான சீரியல் அது. அதைப் பார்த்தால் தவிர இவளுக்குத் தூக்கம் வராது. அது முடிவதற்கு பன்னிரெண்டு மணியாகிவிடும். பன்னிரெண்டு மணிக்கு சஸ்பென்சுடன் முடிக்கப்பட்ட அந்த சீரியலைப் பார்த்த பிறகு இவளால் தூங்க முடியாது. கட்டாயம் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும். திரும்பவும் காலையில் ஐந்து மணிக்கு விழித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அந்த நோய்.” பிரகாஷ் தான் எழுதி கொண்ட நோட்ஸை பைக்குள் வைத்துக் கொண்டு மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மறுபடியும் அணிந்து கொண்டார்.
“இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது அங்கிள். இட் ஈஸ் க்வயட் அமேஜிங். ஐ டிட் நாட் நோ இட். ஹௌ ஸாட்!” என்றாள் ரஜனி.
“ஆமாம். உனக்குத் தெரியாதுதான். ஏன் என்றால் நீ அமெரிக்காவில் புருஷனுடன் குடித்தனம் நடத்தும் டாலர் கணவுகளில் மூழ்கியிருந்தாய். அந்த எதிர்பார்ப்பில் இருக்கும் உனக்கு அம்மாவைப் பற்றி யோசிக்க நேரம் எங்கே இருக்கும்? அதோடு உங்க அம்மாவை விட மாறுபட்டு யோசிக்கும் சுபாவம் உனக்கு எங்கிருந்து வரும்?” என்றார் பிரகாஷ் கேட்டைத் தாண்டிக் கொண்டே.
கண்களை அகல விரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த சுசீலா திடீரென்று தங்களுடைய வீட்டை நோக்கி ஓட்டமெடுத்தாள். அவளுக்கு ஏனோ தன் தாயைக் கட்டிக் கொண்டு ஹோவென்று அழவேண்டும் போல் இருந்ததது. தன்னுடைய தாயைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

One Comment on “தெலுங்கில் :பி. சத்யவதி/சூப்பர் மாம் சிண்ட்ரோம்”

Comments are closed.