பி. சத்யவதி/ ” வீடு மெழுகினால் பண்டிகை ஆகிவிடுமா”

( கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்த தெலுங்கு சிறுகதை)

கதைஞர்களைக் கொண்டாடுவோம்/ரேவதி பாலு

       இல்லத்தரசி ஆவதற்கு முன்பு படிப்பு, திறமை, நகைச்சுவை உணர்வு எல்லாம் கொண்ட பெண்மணி தான் அவள். 

திருமணமாகி வீட்டுக்குள் நுழைந்த உடன் கணவன் “இந்தாடி பெண்ணே இந்த வீடு ஒன்னோடது” அப்படின்னு சொல்றான்.
அந்த நொடி புடவை தலைப்பை இடுப்பில் சொருகிக்கொண்டு வீட்டை மெழுகி கோலம் போட ஆரம்பித்தது தான்.
” நீ ரொம்ப நல்லா வீடு மொழுகுகிற. அதைவிட நல்லா கோலம் போடுற. கீப் இட் அப் “அப்படின்னு முதுகுல தட்டி கொடுக்கிறான். அவ அப்படியே பூரிச்சு போய் இன்னிக்கும் அதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாள். மூன்று கைப்பிடி துணிகள் ஆறு கோலமாவு டப்பாக்கள் சேர்ந்து விடுகிறது.

திடீர்னு வீடு மெழுகிண்டு இருக்கும்போது அவளுக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் வருது.

” என் பேரு என்ன,?” அப்படின்னு.

அதை படிக்கறச்சே நமக்கே வாயடைத்துப் போகிறது.
‘அந்த அளவுக்கு ஒரு செக்கு மாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்காளா அவ’ அப்படின்னு ஒரு கணம் தூக்கி வாரிப் போடுகிறது.

கைப்பிடி துணியையும் கோலமாவு டப்பாவையும் தூக்கி எறிந்து விட்டு அவள் ஜன்னல் ஓரமாக நின்றவாறே யோசிக்கிறாள் தன் பெயர் என்னவென்று.

வீட்டு வேலை செய்யும் பெண்மணி வருகிறாள். அவ கிட்ட கேட்டு பாக்கலாமா அப்படின்னு தோன்றுகிறது அவளுக்கு.
” என் பெயர் என்ன தெரியுமா உனக்கு?”

” எஜமானியம்மா! பேரு தெரிஞ்சு நான் என்னம்மா செய்யப் போறேன் ? நீங்க எனக்கு எஜமானி அம்மா. அவ்வளவு தான் தெரியும் எனக்கு”

அப்போது பக்கத்து வீட்டு மாமி ஏதோ விசேஷத்துக்கு அழைப்பதற்காக வருகிறார். சரி இவங்க கிட்ட வேணா கேட்டு பாக்கலாமா என் பேரு என்ன அப்படின்னு கேட்ட உடனே அவங்க சொல்றாங்க ,”உங்க பேரா? எனக்கு அது தெரியாது. உங்கள நாங்க வலது பக்கத்து வெள்ளை மாடி வீட்டு மாமி, இல்லன்னா மருந்து கம்பெனி மேனேஜரின் மனைவி , இல்லன்னா, உசரமா செகப்பா இருப்பாங்களே அந்த மாமி அப்படின்னு தான் குறிப்பிடுவோம். இதுவரைக்கும் உங்க பேரை நான் கேட்டதும் இல்ல. நீங்க சொன்னதும் இல்லை “அப்படின்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க.

குழந்தைகள் மதிய உணவுக்காக பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் கிட்ட கேட்கிறாள்.
அவங்க அவளை ஆச்சரியமா பாக்குறாங்க. “நீ எங்களுக்கு என்னிக்கும் அம்மா தான்மா. அப்பா பேருக்காவது லெட்டர் எல்லாம் வரும். அத பாத்து அவரு பேரு தெரிஞ்சுப்போம். உங்க பேரு எங்களுக்கு தெரியாது மா” அப்படின்னு சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.

அவள் தவித்துப் போகிறாள் .அன்றிரவு தன் கணவரிடம் கேட்கிறாள்.

” என்னங்க என் பேரு என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?”அப்படின்னு.

அவளை வியப்பாகப் பார்த்த கணவர், ” நான் உன்னை அடியேன்னு கூப்பிட்ட போது நீ அப்படி கூப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருந்தியானா எனக்கு உன் பேரு ஞாபகம் இருக்கும்.
நீ ஒண்ணும் சொல்லாததினால நான் அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன். பேசாம மிஸஸ் மூர்த்தி னு சொல்லிக்கோயேன்”

” இல்லங்க எனக்குன்னு ஒரு பேர் வேணுமே “

“அப்ப புதுசா ஒரு பெயர் வைத்துவிடலாமா”

” இப்ப சத்தியநாராயணன் என்கிற உங்கள் பெயரை சிவராவ் அல்லது சுந்தரம் னு சொன்னா உங்களுக்கு பிடிக்குமா? அந்த மாதிரி தானே எனக்கு என்னோட பேரு?”

” நீ படிச்சவ தானே? உன்னோட சான்றிதழ்கள்ல உன் பேர் இருக்குமே? அதைத் தேடிப் பிடித்து உன் பெயரை கண்டுபிடி!” அப்படின்னு சொல்றான் கணவன்.

உடனே ஓடிப் போய் தன்னுடை அலமாரியைத் தலைகீழாக கொட்டி தேடி பார்க்கிறாள். அங்கு அழகாக அடுக்கி வைத்திருக்கும் வகை வகையான புடைவைகள் அதற்கு பொருத்தமான ஜாக்கெட்டுகள் ,தங்க நகைகள், உடைக எல்லாமே இருக்கிறது. ஆனா சான்றிதழ்கள் மட்டும் இல்ல .

உடனே அவளுக்கு நினைவுக்கு வருகிறது. தான் திருமணம் ஆகி வரும் பொழுது தன்னுடைய சான்றிதழ்களை இங்கே கொண்டே வரவில்லை என்று.

பொழுது விடிந்ததும் தன் கணவனிடம் கூறுகிறாள், “நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் என் சான்றிதழ்களை தேடி கண்டுபிடித்து என் பெயரை கண்டுபிடிக்க போறேன்”

கணவன் பதைத்து போகிறான். ” நீ இல்லாம ரெண்டு நாள் நாங்க என்ன செய்வது? இங்கு யாரு வீட்டையெல்லாம் மெழுகி பார்த்துப்பாங்க?”

” ஒரு ரெண்டு நாள் தானே? எப்படியோ போகட்டும் !”என்று அவள் தன் அம்மா வீட்டுக்கு போய் விடுகிறாள். அங்கே அம்மாவும் அப்பாவும் அவள் மட்டும் தனியாக வருவதை பார்த்து வியந்து போய் என்ன ஏது என்று விசாரிக்கிறார்கள். அவள் அம்மாவிடம் கேட்கிறாள். “நான் என் பெயரை தேடி வந்தேன் அம்மா இங்கே. உனக்கு என் பேரு ஞாபகம் இருக்கா அம்மா?” அப்படின்னு கேட்கிறா.

அம்மா சொல்றா “நீ என்னைக்கும் எனக்கு பொண்ணு தாண்டி” என்று.
பிறகு சான்றிதழ்களை பரண்மேல் தூக்கி போட்டு விட்டதாக சொல்கிறாள்.

மறுநாள் அவள் வெளியே போகிறாள் .பள்ளியில் கேட்கிறாள் யார் யாரிடமோ கேட்கிறாள். யாருக்கும் அவள் பெயர் தெரியவில்லை.

அப்போது திடீரென்று ஒரு தோழி ஓடி வந்து அவள் கையை பற்றி, ” ஏய் சாரதா! எப்படிடீ இருக்க ?”அப்படின்னு விசாரிக்கிறா .

அந்தத் தோழி இவளைப் போல் வீடு மெழுகுவதை மட்டுமே வாழ்க்கையாக வைத்துக் கொள்ளாமல், அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே வைத்துக்கொண்டு பள்ளியில் தன் கூட படித்த மத்த தோழிகளின் பெயர்களின் தெரிந்து கொண்டு இவளையும் பேர் சொல்லி அழைக்கிறாள்.

அப்பாடா! ஒரு வழியாக அவளுக்கு தன் பெயர் தெரிந்து விட்டது . “சாரதா” இந்த தோழி மேலும் சொல்கிறாள்.
“பத்தாவது வகுப்பில் நீதான் வகுப்புல முதல் பொண்ணா வந்த. பாட்டு போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்க. அழகாக ஓவியம் எல்லாம் வரைவே!”

ஆச்சர்யமா ஆகி விட்டது அவளுக்கு.

அடுத்த நாள் பரண் மேல் ஏறி சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துப் பார்க்கிறாள். பாட்டு போட்டியில் பரிசு வாங்கியது, பத்தாம் வகுப்பில் முதலில் வந்தது எல்லாம் பார்த்து பார்த்து பூரித்துப் போகிறாள். தான் வரைந்த படங்கள் எல்லாம் பார்த்து எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கிறாள் .
அடுத்த நாள் வீடு திரும்புகிறாள் மிகுந்த சந்தோஷத்துடன். இவளை பார்த்தவுடன் கணவன் , “அம்மாடி! வீட்டுக்கு வந்துட்டியா? நீ வீடு மெழுகு ! இனிமே எங்களுக்கு பண்டிகை தான்!” என்கிறான்.

உடனே அவள் சொல்கிறாள் ,”வீடு மெழுகி விட்டால் பண்டிகை வந்துவிடுமா? அப்புறம்…. என் பேரு சாரதா. இனிமே என்ன அடியேன்னு கூப்பிடாதீங்க!” அப்படின்னு சொல்றா. எந்த மூல முடுக்குல தூசி இருக்குன்னு பார்த்து பார்த்து மெழுகும் சாரதா தூசி படிந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு தான் வரைந்த அழகிய படங்களை தன் குழந்தைகளுக்கு சந்தோஷமாக காட்டிக் கொண்டிருக்கிறாள்.

தன் பெயர் மறந்து போகிற அளவுக்கு ஒரு செக்கு மாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் நம் மனதில் நிம்மதியை தோற்றுவிக்கிறது. அருமையான கதை அருமையான மொழிபெயர்ப்பு.
https://daily.navinavirutcham.in/?p=21891
கதை எழுத முடியுமா பாருங்கள்

One Comment on “பி. சத்யவதி/ ” வீடு மெழுகினால் பண்டிகை ஆகிவிடுமா””

  1. மிக நேர்த்தியாக எழுதப்பட்ட உயர்ந்த கதை
    இப்படித்தான் என் வயது பெண்களின் வாழ்க்கை… இப்போது முன்னேற்றப் பாதையில்

Comments are closed.