தஞ்சாவூர் ஹரணி

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 24 – 28.03.2024
000

யார் நீ வந்து வந்து போகிறாய்
வரமென்ன தந்து போவாய்
பூபூத்தக் காட்டில் உனக்கென்ன
வேலை புதுமழைநாளில்
நனைகின்ற சோலை
குளிர்கின்ற காலை குயில்பாடும்
வேளை கொஞ்சும் தேவதையோ?
குறையாத முழுநிலவோ
யார் நீ? வந்து வந்து போகிறாய்.

நிறைகின்ற சுவைத் தேனோ
சுவைப்பேனோ.. சுகங்களிப்பேனோ
முத்துச் சிப்பிக்குள்ளே கடல் பார்த்து
முங்கித் தவிப்பேனோ முழு முத்தமே
அதிரப் பேசாமல் அடியோசை கேட்காமல்
அங்கமெல்லாம் அழகுபூசி அசையாத சுடராய்
நிற்பாயோ
அடியெடுத்துக் கொடுக்கின்ற சுகத்தில்
அப்படியே உயிர் மறப்பேனோ
அதிர்ந்து உன்னிதழில் உயிர்ப்பேனோ
யார் நீ வந்து வந்து போகிறாய்..?

எழுதாக் கவிதைக்குள் வந்து சிரிப்பாயோ
எழுப்பிடாத் தூக்கத்தில் வந்து மிதப்பாயோ
இலக்கியச் சுவைக்குள் இழைந்து கிடப்பாயோ
இலக்கணத் தெளிதேனில் இசைய நடப்பாயோ
உலவாத தென்றலுக்கு உயிர் கொடுப்பாயோ
உறங்காத மழலைக்கு உறங்கிடக் களிப்பாயோ
துலங்காத துறக்கத்தைச் சொல்லி நகைப்பாயோ
அங்குமிங்குமாய் அலைந்திட வைப்பாயோ
அப்படியே உயிரை உருக்கிக் குடிப்பாயோ
யார் நீ வந்து வந்து போகிறாய்?

அணையாத நெருப்பிலே அழகாய் சுடர்வாயோ
அணையாத உள்ளத்து ஆறுதல் வரைவாயோ
துடிக்கின்ற இதயத்தின் துடிப்பில் துளிர்ப்பாயோ
வடிக்கின்ற ஓவியத்துள் வண்ணமாய் நிற்பாயோ
கனியாத வாழ்வில் கனிந்து கிடப்பாயோ
தணியாத துயரத்துள் தணிந்து மீள்வாயோ
நேற்றும் இன்றும் நாளையுமாய் வருவாயோ
நித்தமும் வாழ்ந்திட வழியை உரைப்பாயோ
நீங்கிடா முக்தியில் நெடுகத் தொடர்வாயோ
யார் நீ? வந்து வந்து போகிறாய்..