எழுத்தாளர்களை இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தால்…./நாரயணி கண்ணகி

எழுத்தாளர்களை இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தால்
‘இவ்வளவு பணம் தந்தால்தான் வருவேன்,
இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தால்தான் வருவேன்’ என்று நிபந்தனைகள் விதிக்க மாட்டார்கள்.
பேச்சாளர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள்
*
பெரும்பாலான பேச்சாளர்கள்
பேச்சு தொடங்குவதற்கு முன்பே
‘எனக்கு ஒரு வாரமாக
உடல் நிலை சரியில்லை
ஆனாலும், உங்களிடம் பேச வேண்டும் என்பதற்காகவே
உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் வந்தேன்’ என்று கூறி
அனுதாபத்தைப் பெற்று கொண்டு விடுவார்கள்
அப்புறம்தான் பேசுவார்கள்.
*
பேச்சாளர்கள்
சுயப்புகழ்
சுயத்தம்பட்டம்
சுயச்செயல்பாடு
சொல்லாமல் பேசவே மாட்டார்கள்.
தன்னை மார்க்கெட்டிங்
பண்ணாமல் இருக்க முடியாது
*
பேச்சாளர்கள்
உலக இலக்கியங்கள்
பேசுவார்கள்
எழுத்தாளர்களை
உலக நாடுகள்
தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதைப் பேசுவார்கள்
ஆனால் இங்கே ஒரு
எழுத்தாளன்
எவ்வளவு சிறப்பாக எழுதி இருந்தாலும்
அதைப் பற்றி ஒரு வார்த்தைப் பேச மாட்டார்கள்
*
பேச்சாளர்கள்
நன்றாகத் துதிப் பாடுவார்கள்
மறுபடியும் வாய்ப்பு
கிடைக்க வேண்டும் அல்லவா?
நம் கவிஞர்களின் இரத்தத்தில்
பொற்காசுகளுக்காக
அரசனைப் புகழ்ந்து பாடும்
அணுக்களும் ஓடாமல் இருக்குமா?
*
எங்கள் மாவட்ட
புத்தகத் திருவிழாவில்
ஒரு பேச்சாளர்
கலெக்டரைப் புகழ்ந்தார் பாருங்கள்
‘இ ஆ ப என்றால்
இந்திய ஆட்சிப் பணி அல்ல
இலக்கிய ஆட்சிப் பணி’ என்று கலெக்டர் தலைமீது
பேச்சாளர்களால் மட்டுமே
இவ்வளவு பெரிய
ஐஸ் கட்டி தூக்கி வைக்க முடியும்.
*
ஒரு எழுத்தாளர்
ஒரு சிறுகதையை
ஒரு பத்திரிகையில்தான்
வெளியிடுவார்
ஒரு பேச்சாளர்
ஒரு விடயத்தை
பல மேடைகளில்
பேசுவார்
*
ஆனந்த விகடன்
ஜோக் எழுத்தாளர்களால்தான்
பேச்சாளர்கள் பிழைப்பு ஓட்டுகிறார்கள்
அவர்கள்
அதற்குத் தடைப் போட மாட்டார்கள்,
ராயல்டி வாங்க மாட்டார்கள்
என்ற துணிச்சல்
*
விதிமுறைகளின் படி
ஒரு வரி சேர்க்க வேண்டும்
அது
_எல்லா இலக்கியப் பேச்சாளர்களும் அப்படி இல்லை
விதி விலக்கு உண்டு