ராஜு முருகன்/வட்டியும் முதலும்

ஒரு நல்ல படைப்புக்கான வாசிப்பு!

ஒரு புத்தகத்துக்காக நீங்கள் எவ்வளவு அலைந்து இருப்பீர்கள்?

ஜோனன் டிக்கன்ஸ் என்கிற ஃபிரெஞ்சுக்காரர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, 16 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேலாக அலைந்து திரிந்து இருக்கிறார். காரணம், 102 ஆண்டுகளுக்கு முன்பு அச்சான, ‘ப்ரோக்கன் தி ஹெல்’ என்ற புத்தகத்தைத் தேடி.

ஃபிரெஞ்சு பழங்குடியினரிடம் தொடங்கிய முதல் கிளர்ச்சி பற்றிய அந்தப் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி எங்கோ இருப்பதாக அறிந்து, மனம் தளராமல் 12 ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றி, கடைசியில் கண்டுபிடித்துவிட்டார்.

ஒருவரிடம் அந்தப் பிரதியைக் கண்டுபிடித்து வாங்கியபோது, டிக்கன்ஸ் தனது வாழ்வின் ஒரு தசாப்தத்தை இழந்திருந்தார். குடும்பம், சந்தோஷம், வயது, பணம்.. என எல்லாவற்றையும் தொலைத்திருந்தார்.ஆனால்,அந்தப் பிரதியை வாங்கிய கணம், “இந்த நிமிடம் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி… வரும் தலைமுறைகளுக்குத் தந்துவிட்டு நான் செத்துப் போய்விட்டால், அதைவிடச் சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்” என்ற டிக்கன்ஸ், அதை உடனே செய்தார்!

புத்தகங்கள் உருவாக்கும் தலைமுறைதான் உலகை மேம்படுத்தும். மைனராக இருந்த மானுடம், புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பிறகுதான் மேஜரானது’ என வலம்புரிஜான் சொன்னது எவ்வளவு உண்மை? ‘ஜார்களின் ஆட்சியில் ஏழைத் தொழிலாளி ஒருவன் தும்முவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறான்’ என்ற துயரத்தைச் சொன்ன ஒரு சிறுகதை ஏற்படுத்திய கொந்தளிப்பு, ரஷ்யப் புரட்சியின் முக்கியமான அங்கம்.

ஜனநாயக சர்வாதிகாரத்தைக் கிழித்தெறிந்து, தொடர்ச்சியாக எழுதப்பட்ட எகிப்து இலக்கியங்கள், அங்கு நடந்த புரட்சிக்கான ஒரு விதை ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கதைகள்… தமிழ் நிலத்தில் பெரியார் முன்னெடுத்த சமூகப் புரட்சிக்கான இன்னொரு சுடர். ஈழ எழுத்தாளர் எஸ்.பொ. அய்யா தனது நெடும் சுயசரிதையை ‘தவம்’ என்ற பெயரில் புத்தகமாக்கி இருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு அதை அவர் எழுதிக்கொண்டு இருந்தபோது, தினமும் சாயங்காலம் யுகபாரதி அண்ணனோடு அங்கே போய்விடுவேன். எஸ்.பொ. சொல்லச் சொல்ல படியெடுப்பதுதான் எங்கள் வேலை. ஈழத்தின் வரலாறு, அரசியல், போராட்டம், குடும்பம், கண் எதிரே இழந்த உயிர்கள் என அவர் சொல்லும் ஒவ்வோர் அத்தியாயமும் தூக்கத்தைத் தின்னும்.

ஒரு சாயங்காலம், அவர் அடுத்த அத்தியாயம் சொல்ல வேண்டும். எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார். நிறைய சிகரெட்டுகள் புகைத்தார். சட்டென்று உதடுகள் துடிக்க, அவர் கண்களில் நீர் பெருகி வழிந்தது. வீட்டில் இருந்த உறவுகளை ராணுவம் இழுத்துப்போய் கடற்கரையில் வைத்து குரூரமாகச் சுட்டுக்கொன்ற நினைவுகளைச் சொன்னபோதுகூட, அவர் இப்படிக் கலங்கவில்லை.

அன்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி சொல்லத் தொடங்கினார். “கண் முன்னால் எங்கள் வரலாறு எரிக்கப்பட்டதைப் பார்த்தவர்கள் நாங்கள்” என அவர் அழுதது… நூற்றாண்டுகளின் துயரமாக இந்த இனத்தின் கடைசி உயிர் வரை இருக்கும்!

வாசிப்புதான், ஒரு வரலாற்றை உருவாக்குகிறது; அரசியலை நிர்மாணிக்கிறது; கனவுகளைக் கொண்டு வருகிறது ;கோடானு கோடிக் கூட்டுப்புழுக்களைப் பட்டாம்பூச்சிகளாக்குகிறது. எனது தலைமுறையின் அநேகருக்கான வாசிப்பு, காமிக்ஸ்களில் இருந்தும் அம்புலிமாமாவில் இருந்தும்தான் தொடங்கியது. இரும்புக் கை மாயாவி, டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், ஜேம்ஸ் பாண்ட், லக்கிலுக் என காமிக்ஸ் பாத்திரங்கள் தரும் கற்பனைகள் எவ்வளவு ரம்மியமானவை?

மெக்ஸிகோ நகரின் எல்லையோரக் கிராமத்து சீட்டாட்ட களப்பில் நடக்கும் துப்பாக்கிச் சண்டைகள் நம் பால்யத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகின்றன? திருச்சி சுப்ரமணியபுரம் சித்தி வீட்டில், குட்டி கிருஷ்ணன், முல்லா, தெனாலிராமன், பீர்பாலுடன் கழிந்த கோடைக்காலங்கள், 4ஜி தலைமுறையினருக்குக் கிடைக்குமா, தெரியவில்லை.

அடுத்து, க்ரைம் த்ரில்லர் காலம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்… இவர்களால்தான் பத்தாவது பப்ளிக் பரீட்சையில் எனது குடும்பத்தில் மூன்று தமையன்கள் சேர்ந்து ஏழெட்டு அட்டைகள் வாங்கினார்கள். தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் ‘கொலையுதிர்கால’மோ ‘திக் திக் திவ்யா’வோ வாங்கிக்கொண்டு பஸ் ஏறினால், இறங்க வேண்டிய கொரடாச்சேரி கடந்தது தெரியாமல் ‘உறைந்துகிடக்கும் ரத்தத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார்’ துப்பறியும் விவேக்.

கரந்தை தமிழ்ச் சங்கத்துக்குப் படிக்கப்போன சரவணன் அண்ணன்தான், நா.காமராசனையும் வைரமுத்துவையும் சுஜாதாவையும் பாலகுமாரனையும் வீட்டுக்குக் கொண்டுவந்தார். விடுதியில் இருந்து அவர் வீட்டுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்காக நாங்கள் காத்திருப்போம். ‘கண்ணீர்ப் பூக்கள்’, ‘கறுப்பு மலர்கள்’, ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ என வாராவாரம் பையில் புதையல் எடுத்து வருவார். (இடைச்செருகலாக ஒளிந்து கிடக்கும் ”பருவகால’மும் ‘சரோஜாதேவி’யும் போனஸ்.) தி.ஜானகிராமனைக் கொண்டுவந்தது, ஓகையில் இருந்து சைக்கிளில் வரும் தொழுநோய் இன்ஸ்பெக்டர் நீலமேகம் சார், “”மோகமுள்’ளில் சிலிர்த்துக் கிடக்கும்போதே சோலை சுந்தரபெருமாளைக் கொண்டுவந்து படிச்சின்னா, பொங்கிருவ” என உருவேற்றினார்.

புதிய மனிதர்களும் கனவுகளும் அன்பும் கோபமுமாக புத்தக உலகை எவ்வளவு விசாலமாக்கிவிடுகின்றன? ஆர்வம் தலைக்கேற, குரு அண்ணனும், சுந்தரபுத்தன் அண்ணனும் சேர்ந்து ஊருக்குள் ‘காவ்யா’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்தார்கள். தினமும் கண் கொடுத்த வணிதம் ஊரில் இருந்து சுந்தரபுத்தன் அண்ணன் சைக்கிளில் சீமாட்டி மஞ்சள் பையில் மேட்டர்களோடு வீட்டுக்கு வருவார். ஆட்டுப் புழுக்கைகள் இறைந்துகிடக்கும் திண்ணையிலும், காந்தி பூங்கா நூலகத்திலுமாக இருவரும் எடிட்டோரியல் மீட்டிங் போடுவார்கள். கீழத் தெரு செந்தில் கவிதைகள், நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை, பூண்டி காலேஜ் கலக்கல் எனச் செய்திகள் பின்னும். பிரதியின் கடைசியில் வெள்ளைத்தாள்களை மீதம் விட்டு, வாசகர் கடிதம் எழுதச் சொல்வார்கள். விகடனையும் குமுதத்தையும் தாண்டிவிடுகிற ஆவேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘காவ்யா’, பொட்டிக்கடை அக்கவுன்ட் நிதி நெருக்கடியால் நின்றுபோனது’

அப்போது சிவகங்கைப் பூங்கா பக்கம் சீனிவாசபுரத்தில் இருந்தது யுகபாரதி அண்ணனின் வீடு. அவரது அப்பா த.கா.பரமசிவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் என்பதால், வீடு எப்போதும் தோழர்களால் நிறைந்துகிடக்கும். சரவணன் அண்ணனும், யுகபாரதி அண்ணனும் சேர்ந்து புத்தகங்களின் அற்புதமான உலகத்தை அங்கேதான் உருவாக்கினார்கள். கரந்தை பிரின்ட்டிங் பிரஸ் ஒன்றில் கூல்டிரிங்ஸ் குடித்தபடி உட்கார்ந்திருந்த தஞ்சை பிரகாஷை அறிமுகப் படுத்தினார்கள். மூலதனத்தில் இருந்து பாரதி, ஓஷோ, பிரமிள் வரை வாசிப்புகளால் கிளர்ந்த இரவுகள் அப்போதுதான் தொடங்கியது.

சென்னை வந்த பிறகு யுகபாரதி அண்ணன், ‘கணையாழியில் உதவி ஆசிரியராக இருந்தார். அவரோடு தினமும் கணையாழி போவதுதான் எனக்கு வேலை. பிரபஞ்சன், ஆத்மாநாம், எஸ்.ரா, ஜெயமோகன், இமையம், அழகிய பெரியவன், யூமா வாசுகி என வாசிப்பின் இன்னொரு கட்டத்தை இந்த நாட்கள்தான் தந்தன.

ஆயிரமாயிரம் விழிகள், ஆயிரமாயிரம் காட்சிகள், ஆயிரமாயிரம் செவிகள், ஆயிரமாயிரம் குரல்கள்… என வாசிப்பு தரும் தரிசனங்கள்தான் ஒவ்வொருவரின் உலகையும் அழகாக்குகின்றன.

வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ தந்த ஈரம் சாகும் வரை போகுமா ? சுந்தர ராமசாமி, சம்பத், கி.ராஜநாராயணனின் எழுத்துக்களின் அதிர்வுகள் அடங்கக்கூடியதா? ஜி.நாகராஜனின் ‘கந்தன்’ பாத்திரம் உருவாக்கிய கேள்விகள் ஆயுசுக்கும் தீருமா? அசோகமித்திரனின் வெயிலெரியும் சாமான்யனின் நகரத்துப் பகல்கள் தரும் வெக்கை எந்தக் காற்றில் தீரும்? அம்பையின் வீட்டின் மூலையில் சமையலறை’யில் இருந்து எழும் கரி படிந்த ஏக்கங்கள் காலத்தால் அழியுமா?

வண்ணதாசனின் பேனாவில் இருந்து உதிர்ந்து அலைந்து கொண்டே இருக்கும் பழுப்பு இலைகளை நம் காலத்தில் கூட்டி அள்ளிவிட முடியுமா? ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நமது நினைவு சமுத்திரத்தில் எப்போதும் ஆடிக்கொண்டேதானே இருக்கும்? மௌனியின் ஆழ்கடல் மொழியில், லா.ச.ரா-வின் ஏகாந்த ரசத்தில் திளைக்காத மனம் யாருக்கு உண்டு?

கோபி கிருஷ்ணனின், நகுலனின் உளவியல் தரிசனம் தரும் துயரம் எத்தனைக் கதவுகளைத் திறந்துவிடுகிறது? கலாப்ரியாவின் சசிக்கும் கோணங்கியின் மதினிமார்களுக்கும் பிரியப்படாதவர்கள் இருக்க முடியுமா?

கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’யைப் படித்துவிட்டு, நினைவின் சுமை பொறுக்காமல் ஆலக்குடி அத்தைக்கு போன் பண்ணி அழுதது ஏன்? சாருவின் ‘முள்’ படித்துவிட்டு மணிமொழி அக்காவை நினைத்துத் தூங்காமல் கிடப்பது எதற்காக? இரோம் ஷார்மிளாவைப் பற்றிய நாஞ்சில் நாடனின் கட்டுரை எழுப்பும் அரசியல் அதிர்வுகள் எவ்வளவு வலிமையானவை?

மின்னல் நொடியில் வாணி ஜெயராமின் குரலை அவதானிக்கும் க.சீ.சிவகுமாரின் நுணுக்கத்தில், பாஸ்கர்சக்தியின் மண் மணக்கும் நையாண்டியில், ஃப்ரான்ஸிஸ் கிருபாவின் பேரன்பில், குட்டி ரேவதியின் வீச்சில், மாலதி மைத்ரியின் ரௌத்ரத்தில், ஜாகிர் ராஜாவின் சமூகப் பார்வையில், நா.முத்துக்குமாரின் அழகியலில்.. வாசிப்பு ஏற்படுத்தும் மகத்தான வாழ்வனுபவங்கள்தான் இந்த வாழ்வை,உலகை, நாட்களைப் புதிதாக்கி வருகின்றன.

எனது வாசிப்பு அனுபவம் மிகவும் குறைவுதான். இதற்குள் எப்போதைக்குமான ஆதர்ஷமாக, மனதுக்கு நெருக்கமாக இருப்பது வைக்கம் முகம்மது பஷீர். அவரது பயணத்தின் எல்லாச் சாலைகளும் தெருக்களும் போய் முடிவது மனிதத்தின் வாசலில்தான். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். அவரது எழுத்துக்களுக்கு நான் அடிமை!

பாரதியில் இருந்து சின்னக்குத்தூசி அய்யா வரை புத்தகங்களோடும் உன்னதக் கனவுகளோடும் வாழ்ந்த பலரையும் கிறுக்கர்களாக, வேலைக்கு ஆகாதவர்களாகத்தான் இந்தச் சமூகம் நடத்தி இருக்கிறது. திருப்பூரில் இருந்தபோது, தோழர் அருளானந்தம் வீடுதான் எங்கள் நூலகம். சே குவேராவில் இருந்து அயோத்திதாசர் வரை அவர் தந்த புத்தகங்கள்தான் அப்போது எங்களின் சிறகுகள்

ஒரு நாள் திடுதிப்பென்று அருளானந்தம் செத்துப்போனபோது, வீடு முழுவதும் நிறைந்துகிடந்த புத்தகங்களுக்கு மத்தியில் இரண்டு பிள்ளைகளோடு கிடந்து அவரது மனைவி அழுதது மறக்க முடியாதது. இறுதிச் செலவுக்கே நாங்கள்தான் பணம் திரட்டித் தந்தோம்.வீட்டில் கிடந்த அவ்வளவு புத்தகங்களைக் கண்டு, வந்த உறவுகள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்தார்கள். அடுத்த வாரம் அந்தப் புத்தகங்களைத் தோழர்கள் எல்லோரும் பிரித்து ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொண்டோம். அது தோழர் வாழ்க்கை முழுக்கச் சேகரித்த மகத்தான சொத்து என்பது யாருக்கும் புரியவே இல்லை.

மயிலாப்பூரில் பிளாட்ஃபார்மில் புத்தகங்கள் போட்டு விற்பதையே பல வருடங்களாக வாழ்க்கையாக்கிக்கொண்ட ஆழ்வாரை, விகடனில் நிருபராக இருந்தபோது ஒரு முறை பார்க்கப்போனேன். பிளாட்ஃபார்மில் கடை போட்டதற்காக அவரை போலீஸில் பிடித்து, அப்போதுதான் வெளியே விட்டிருந்தார்கள். வரலாறு, அரசியல், இலக்கியம்…என ஏராள மான புத்தகங்களுக்கு நடுவே அவர் மழையில் கரையும் சாலையோர ஓவியம்போல் உட்கார்ந்து இருந்தார்.

“தம்பி, இந்த மக்களும் அரசாங்கமும் எதையெதையோ கொண்டாடுறாங்க… பாதுகாக்கிறாங்க. நம்ம அடையாளம், ஆதாரம்,வரலாறு இதைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. இத்தனை வருஷமா இந்தப் புத்தகங்களோட வாழ்ந்துட்டேன். எனக்கு ஒண்ணுமே கிடைக்கலைங்கிறதை நினைச்சு நான் கவலைப்படலை. எனக்குப் பிறகு இதெல்லாம் இன்னொரு தலைமுறைக்குப் போய்ச் சேரணும் … அதை யார் செய்வாங்கங்கிறதுதான் என் கவலை” என அவர் சொன்னது சத்தியமான கவலை. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் மதிக்காததுதான் இந்தியச் சமூகத்தின் முதல் சாபக்கேடு!

இப்போது புத்தகக் காட்சியில் கூட்டம் கட்டி ஏறுகிறது. இணையத்தில் வாசிக்கும் ஒரு தலைமுறை மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. சேத்தன் பகத்தின் புதிய நாவல் வந்தவுடன் சென்சேஷன் ஆகிறது. இதையெல்லாம் வைத்து,வாசிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது எனச் சொல்ல முடியாது. புத்தகக் காட்சியில் இப்போது அதிகமாக விற்பது சமையல், வாஸ்து வகையறா புத்தகங்கள்தான்.

தமிழின் ஸ்டார் எழுத்தாளர்களாகப் பார்க்கப்படும் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு போன்றவர்களின் புத்தகங்கள் ஆயிரம், இரண்டாயிரம் பிரதிகள் விற்பதுதான் சாதனை. இணையத்தில் ‘கொல வெறி’ பாடல் பதிவேறிய ஓரிரு நாட்களில் அடிக்கும் லட்சக்கணக்கான ஹிட்ஸ்களில் ஒரு சதவிகிதம்கூட இல்லை ஒரு நல்ல படைப்புக்கான வாசிப்பு.

தொலைக்காட்சி, சினிமா, இணையம் என எல்லாவற்றிலும் புதிய புதிய வேகமெடுக்கும் இன்றைய தலைமுறை, வாசிக்கும் பழக்கத்திலும் புதிய கதவுகளைத் திறக்க வேண்டும். புத்தகங்களும் வாசிப்பும்தான் நல்ல மனதை, கனவை, தேசத்தை உருவாக்கும்!

RajuMurugan