பி. ஆர்.கிரிஜா/மாடர்ன் ஆர்ட்

கலைச்செல்வி ஒரு ஓவியப் பைத்தியம். எங்கு எந்த படமோ, சித்திரமோ, கண்ணில் பட்டால் போதும், உடனே நின்று நிதானமாக பார்த்து ரசிக்க ஆரம்பித்து விடுவாள்.
இன்றும் அப்படித்தான், கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் ஒரு கடை புதிதாக வந்திருப்பதைப் பார்த்தாள். ஆர்வத்துடன் அருகில் போய்ப் பார்த்தால், அவளுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் நிறைய இருந்தன.
ஒரு பெண்ணின்
மாடர்ன் ஆர்ட் ஓவியம் கடையின் முகப்பில் அழகாக தொங்கிக் கொண்டிருந்தது.
வழக்கம் போல் ஆர்வ மிகுதியால் கிட்டே போய் உற்று நோக்கினாள். அந்த
கலர் காம்பினேஷனும் , வரைந்த விதமும் அவளை மிகவும் கவர்ந்தன.
கடைக்காரரிடம் விலை விசாரித்தாள்.
அவர் மிகவும் அதிகமாக சொன்னதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள்.
அதே நினைப்பு. எதிலும் அவள் கவனம்
செல்லவில்லை.
” என்ன கலை, வந்ததிலிருந்து பேசாம இருக்க, உடம்பு சரியில்லையா?” அவள் அம்மா பரிவுடன்
கேட்டதற்கும் அவளிடமிருந்து பதிலில்லை.
அம்மா உள்ளே. போய் சூடாக. காபி போட ஆரம்பித்தாள்.
அதை எப்படியாவது வாங்கி அதைப் போலவே வரைந்து அவள் அண்ணாவிற்கு பரிசு கொடுக்க ஆசை. அவள் அண்ணா சிங்கப்ப்பூரில்
ஆர்க்கிடெக்டாக வேலை பார்க்கிறான். மிகச் சிறந்த ஓவியனும் கூட.
அவளுக்கு ரோல் மாடலே அவள் அண்ணாதான். எப்படியாவது அப்பாவிடம் சொல்லி அந்த ஓவியத்தை வாங்க தீர்மானித்தாள்.
வாசலில் அழைப்பு மணி. கதவைத் திறந்தாள் கலை. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.
ஆம். அவள் அண்ணா சரவணன் நின்று கொண்டிருந்தான். “அண்ணா ” என்று சந்தோஷத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள்.
“ஹாய் கலை,. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டேன். நாளை உன் பிறந்த நாளாச்சே, அதான்….” என்று சொல்லியபடியே அவள் கையில் ஒரு பெரிய பார்சலை கொடுத்தான் சரவணன். மகிழ்ச்சியில்
துள்ளிக் குதித்தவாறு அதைப் பிரித்தாள் கலை.
என்ன ஆச்சர்யம்….. அவள் கடையில் பார்த்த அதே ஓவியம் அவளைப் பார்த்து அழகாக சிரித்தது.
உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தை வராமல் தன் அண்ணனைக் கட்டிப் பிடித்து அழுதாள். அது ஆனந்தக் கண்ணீர். அவள் அண்ணா ஒன்றும் புரியாமல் சிரித்தவாறே அவளைப் பார்த்தான்.
அப்போதுதான் அவள் அம்மா ஹாலிற்கு வந்தாள். இருவரையும் பார்த்ததில் மனம் நிறைந்து போனது. அந்த காட்சியே அவளுக்கு ஒரு ஓவியமாகத் தெரிந்தது.


04/04/2024