தங்கேஸ்/முத்தங்களின் நிழல்கள்

அம்மாவின் மென் முத்தங்களை

இந்த புங்கை மர நிழலுக்கு 

வார்த்துக்கொண்டிருக்கிறேன்

அது குழைந்து குழைந்து

என் கழுத்தைக் கட்டிக் கொள்வதை  கண்ட காகம்

வானத்திலிருந்து தன் அலகில்

ஒரு நட்சத்திரத்தை கவ்வி வருகிறது

சொற்களின் நிழலை  தீட்டும் கவிஞன்

பெயர்த்தெடுக்க முடியாத

 அதன் நிழல் சிறகுகளுக்கு முன் மண்டியிட்டு

கவித்துவத்தின் உச்சத்தை

போகமெய்துகிறான்

உதிரும் பூவை தரையில் 

விழ விடாமல்

ஏந்திக்கொண்டிருக்கும் என் கரங்களில் வந்து விழுகிறது

கடைசியில்

பூவின் நிழல்