சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர்/கால சுப்பிரமணியம்

சி. சீநிவாசன் (ஸி.ஸ்ரீநிவாஸன் என்று இருவகையாகவும் தம் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.) என்ற ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் பற்றி யாராவது இங்கே எப்போதாவது நினைவுகொண்டுள்ளார்களா என்பது எனக்குச் சந்தேகமே. எனக்கும் அவரை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் 50 ஆண்டுகளாகத் தெரியுமே தவிர அவரது வாழ்க்கைக் குறிப்புகள் அதிகம் தெரியாது. எதேச்சையாக எப்படியோ எனது பிறப்பிடமான நகலூர் (அந்தியூர்) பட்டிக்காட்டில் எனது உயர்நிலைப்பள்ளிப்பருவ காலத்திலேயே ‘இரும்புப் பெட்டி’ என்ற (ருஷ்ய முன்னேற்றப் பதிப்பகத்துக்கு பிரதியான – அமெரிக்க இலக்கிய/கலாச்சாரப் பரிவர்த்தனைக்கான பெர்ல் பப்ளிகேஷன்ஸ் என்ற முத்துப்பதிப்பகத்தின்) ஒரு அமெரிக்க நாவல், அட்டை கூட இல்லாத நிலையில் வந்து சேர்ந்திருந்தது. அதனை மொழிபெயர்த்திருந்தவர் ஸி.ஸ்ரீநிவாஸன். அது ஒரு ஜனரஞ்சக நாவல்தான் என்றாலும் சீரியஸ்ஸாக எழுதப்பட்டிருந்தது. பிறகான காலங்களில் அவரது மேலும் சில ஜோதி / தமிழ்ச்சுடர் நிலைய மொழிபெயர்ப்புகளைப் படித்தேன். வில்லா கேதர் (அன்புப்பிடியில் இருவர்-Death Comes for the Archbishop), எர்னஸ்ட் ஹெமிங்வே (போரும் பாவையும் – For Whom The Bell Tolls), ஆலன் பேட்டன் (அன்னையின் குரல்) -Cry, the Beloved Country) ஆகிய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளோடு இன்று புகழ்மங்கிவிட்ட ஜோஸப் வெஷ்பர்க்கின் ”பள்ளித்தோழன்”(இப்போது பிரபலமாக உள்ள ஜோ.வெஸ்பெர்க் என்ற சிஜஏ உளவு நாவல் பிரபலம் அல்ல அவர். இந்த இப்போதையவர் பிறக்கும் முன்பே பள்ளித்தோழன் போன்றவற்றை எழுதிய பழையவர் அவர்), இளையோருக்கான வாழ்க்கை வரலாறுகளை எழுதிப் புகழ்பெற்ற நைனா பிரவுன் பேக்கரின் “சிறுதுளி பெருவெள்ளம்”, ஹோவர்ட் ஸ்விக்கெட்டின் ”இரும்புப் பெட்டி” என்ற நாவல்களையும் அறிவியலில் பெண்களின் பங்கு பற்றி அதிகம் எழுதிய எட்னா யோஸ்ட்-ன் ”நவீன அமெரிக்க விஞ்ஞானிகள் – Modern Americans in Science and Invention” (தென் இந்திய சைன்ஸ் கிளப்) விஞ்ஞான நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.

சுதேசமித்திரனில் ஸி.ஆர்.ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசிரியராயிருந்த காலத்தில் சி.சீநிவாசனும் அதில் வேலைசெய்திருக்கிறார். அய்யங்காராகத்தான் இருக்கவேண்டும். 1972ல் சுதேசமித்திரன் மறு எழுச்சியுடன் மீண்டும் நடைபெற்றபோது சி.சி. தலைமையில்தான் ஒரு ஆசிரியர் குழு அதை நடத்தியது. அவரது மொழிபெயர்ப்புகள் மட்டும்தான் புத்தக உருவில் கிடைக்கிறது. அவரது பிற எழுத்துக்கள் பற்றித் தெரியவில்லை.

(எண்பதுகளில் ஒருமுறை சென்னை சென்று பிரமிளுடன் தங்கியிருந்தபோது பிளாட்பாரத்தில் ‘போரும் பாவையும்’ என்ற பெரிய நூல் மலிவாகக் கிடைக்கவும் அதை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றேன். அதைப் பார்த்த பிரமிளும் விஷ்ணு நாகராஜனும் கோட்டா செய்தார்கள். கநாசு போன்றோரின் எல்லா மொழிபெயர்ப்புகளின் மேலும் அவர்களுக்கு ஒவ்வாமை இருந்தது. ‘உம்மால் ஆங்கிலத்திலேயே படிக்க முடியும்போது இது எதற்கு வீண்வேலை’ என்று. நமது ரசனை அல்ல இங்கு முக்கியம், தமிழ் மொழிபெயர்ப்பின் பரிமாண இலட்சணங்களை அறிய இவை அறிந்திருக்க வேண்டியிருக்கிறது என்பதுபோல் எதையோ சொல்லிச் சமாளித்த நினைவு வருகிறது.)

சீனிவாசனைப் பற்றி யாரிடமும் விசாரித்து அறிந்துகொள்ள முடியாது என்று தெரியும். எனக்கு புதிய சீனிவாசன்கள் பலரைத் தெரியும். பழையவர்களில் பேராசிரிய எழுத்தாளர்களான ரா.சீனிவாசன், அ.சீனிவாசன், டாக்டர் சி.சீனிவாசன் போன்றோரையும் சுதேசமித்திரன் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், இன்னும் சில சீனிவாச அய்யங்கார் மொழிபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் தெரியும். பி.ஸ்ரீ., கா.ஸ்ரீ.ஸ்ரீ என்ற மறைந்திருப்பவர்களையும் தெரியும்.

எனவே சி.சீநிவாசனைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று தினமணி எஸ்.சிவக்குமாருக்குப் போன் செய்தேன். தினமணி சிவக்குமாருக்கு ஸி.ஆர்.சீனிவாசனைத் தெரிந்த அளவு சி.சீநிவாசனைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் சில தகவல்களைச் சொன்னார்.

சுதேசமித்திரனில் வேலை செய்தார், தி.ஜானகிராமனின் நண்பர், அவரால்தான் ‘மோகமுள்’ சுதேசமித்திரனில் தொடராக வந்தது என்று எனக்குத்தெரிந்தவைகளோடு வேறு சிலவும் அவரால் சொல்ல முடிந்தது (நான் தி.ஜா.வை எம்.பில் ஆய்வு செய்ததால் இவையெல்லாம் தெரியும். சுதேசமித்திரனைப் பற்றி பெ.சு.மணி கட்டுரை, மற்றும் பாரதி ஆய்வாளர்கள் எழுதிய பாரதி-சுதேசமித்ரன் செய்திகள் பல படித்திருக்கிறேன். (‘பாரதி நினைவுகள்’ என்று ஆயிரம் பக்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே தொகுத்துவைத்த நூல் ஒன்று பிரசுரம் ஆகாமல் இருக்கிறது – அதற்குள் கடற்கரையின் பாரதி விஜயம் வந்துவிட்டதால் சுணக்கம். எப்படியும் அதைக் கொண்டு வரவேண்டும்). சுதேசமித்தினில் இரண்டாண்டு வந்த மகாபாரத மொழிபெயர்ப்பின் பெரும் பைண்டு வால்யூம்கள் என்னிடம் இருக்கின்றன. இப்போது இணையத்தில் சுதேசமித்திரன் சில இதழ்கள் கிடைக்கின்றன).

பெ.சு.மணி, சி.சீனிவாசனைப் பற்றி நிறையச் சொல்லுவார் என்றும், தி.நகர்-மாம்பலத்தில் எங்கோதான் அவர் வீடு இருந்ததால் சீனிவாசனைச் சந்திக்கத் தாம் முயன்றதாகவும் ஆனால் அவர் தற்போது உடல்நலக் குறையோடு இருப்பதால் பார்க்கவேண்டாம் என்ற மணி தடுத்துவிட்டதாகவும் பின்பு சிறிதுகாலத்தில் அவர் மறைந்தும் விட்டதாகவும் சிவகுமார் சொன்னார்.

சரி, அவர் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் நம்மைச் சந்திக்க முடியும். போரும் பாவையும் – எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளது. ‘அன்னையின் குர’லை இளையபாரதி தன் வஉசி நூலகம் வழி முன்பே கொண்டுவந்துவிட்டார். ‘அன்புப் பிடியில் இருவ’ரை நான் வெளியிடுவதற்கேற்றபடி லேஅவுட்டும் செய்து தயாரித்து வைத்துள்ளேன். அச்சிடல்தான் பாக்கி. ‘இரும்புப் பெட்டி’ யை இப்போது பரிசல் கொண்டுவருகிறது. ‘பள்ளித்தோழன்’, ‘சிறுதுளி பெருவெள்ளம்’ இரண்டும் மறுபிரசுரம் செய்யும் அளவு முக்கியமானவை அல்ல என்பதால் விட்டுவிடலாம்.