ஜெ.பாஸ்கரன்/மனோ-ரஞ்சிதம் – உஷாதீபன்

சிறுகதை வாசிப்பு:(விருட்சம்)

மத்தியதர குடும்பங்களில் நடக்கும் இயல்பான உரையாடல்களையும், அவர்களது சிந்தனைகளையும் போகிறபோக்கில் சொல்கின்ற கதை.

தினமும் வீட்டில் சத்தம்போடாமல் ‘பூ’ வைத்துப்போகும் ரஞ்சிதம் – சின்னப்பெண், சூட்டிகையான பெண், வேலை செய்வதிலும் கெட்டிக்காரப் பெண். அவள் கணவன், மனோகர் ஒரு சின்ன இடத்தில் தையல் மிஷின் வைத்துத் தொழில் செய்பவன். ஆரம்பத்தில் கிழிசல்களைத் தைத்தாலும், இப்போது அளவெடுத்துப் புதுத் துணிகளைத் தைக்கும் அளவிற்கு முன்னேறியவன். மனைவியை வீட்டு வேலைக்குச் செல்வதற்கு ஒப்பாதவன். தையல் கடைக்குத் துணிகளைத் தைக்கக் கொண்டுவரும் பெண்களுக்கு, வீட்டிலேயே அளவெடுத்து, எழுதிக்கொடுப்பது ரஞ்சிதத்தின் வேலை!

‘பூ’ வைக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரர் – கதை சொல்லி, ஜெகதீசன் – அரசு அலுவலகத்தில் வேலை செய்பவர். அவருக்குப் பென்ஷன் வரும் என்பதாலேயே அவரைத் திருமணம் செய்து கொண்ட அவர் மனைவி தேவகி, பள்ளிக்கூட ஆசிரியை. பின்னர் தபால் மூலம் பட்டதாரியாகி, வங்கியில் வேலை செய்பவர். திருமணத்திற்கு ஒரே கண்டிஷன், திருச்சியில் குடித்தனம்!

ஜெகதீசனுக்கு அலுவலகத்தில் நடக்கும் தில்லு முல்லுகள் தெரியும். அவர் மேலதிகாரிக்கு ஸ்டெனோ ஆக இருப்பதால், எல்லோரும் அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பார்கள். எல்லாம் தெரிந்தும், ஒதுங்கியிருப்பார் ஜெகதீசன். சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் தேவகியின் வங்கிக்கு தினமும் கொண்டுவிட்டு, அழைத்து வருவது இவர் வேலை.

தினமும் வெயிலில் ரஞ்சிதம் இப்படி பூ விற்பது ஏன் என்பது ஜெகதீசனுக்குப் புரியாதது. நாலு வீட்டில் காலை மாலை வேலை செய்தால் பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாமே என்று ஆதங்கப்படுவார். தேவகியோ, அவரவர் வீட்டில் என்ன பிரச்சனையோ, நமக்கு எப்படித் தெரியும்? என்று நினைப்பவள். ஆனாலும் ரஞ்சிதம் தன் வீட்டு வேலைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டு. மற்ற வீடுகளில் நடக்கின்ற திருடு, ஏமாற்று இவையெல்லாம் இருக்காது. ஆனால் ‘ரஞ்சிதத்திற்கு வீட்டு வேலை செய்யப் பிடிக்காது, சின்னப் பொண்ணு, பயப்படுதுங்க…’ என்பாள் ஜெகதீசனிடம்.

மனோகருக்குத் தையல்மிஷின், அதுவும் ‘அல்யூர்’ எலெக்ட்ரிக் ஸ்யூயிங் மெஷின் – ரஞ்சிதம் சிபாரிசில் தேவகி வாங்கிக்கொடுத்தாள். ஒரு பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவனும், ரஞ்சிதத்துடன் போய் வந்தான்! இதற்கு நன்றிக்கடனாகவோ என்னவோ, ரஞ்சிதம் தினம் கொடுக்கும் பூவுக்குப் பணம் வாங்க மறுக்கிறாள்.

ரஞ்சிதத்தின் அப்பா சென்ட்ரல் மார்கெட்டில் பூ ‘மொத்த’ வியாபாரம் செபவர் என்றும், பூ விற்பது ரஞ்சிதத்தின் பாரம்பரியத் தொழில் என்றும் ஜெகதீசன் அறிந்து கொண்டார்.

தன்னுடைய ஆபீஸ் வளாகத்திலுள்ள நான்கு அலுவலகங்களில் கூட்டிப் பெருக்கி, நீர் பிடித்து வைக்கும் வேலைக்கு – மாதம் எட்டாயிரம் சம்பளம் – ரஞ்சிதத்தை சிபாரிசு செய்து வேலை வாங்கித் தருகிறார் ஜெகதீசன். அங்கிருக்கும் வாட்ச்மேன் ஏழுமலையும், தகப்பனைப் போல அன்பானவர். ‘என் மகக்கணக்கா நல்லா… வெடிப்பா வேலை செய்யிதுங்கய்யா’ என்கிறார்.

மனோகரும் ரஞ்சிதத்தை தேவகி வீட்டிற்கு வேலை செய்ய அனுப்புகிறான். ஏன் இந்த மனமாற்றம் என்பதை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறார் ஆசிரியர்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், தன் ‘பூ’ விற்கும் தொழிலை விடாது, தேவகி வீட்டிற்கும் பூ வைக்கிறாள் ரஞ்சிதம்.

“ஆறப்போடும் ஒரு விஷயம் சமயங்களில் அதன்போக்கில் சுலபமாய்த் தீர்ந்து விடுகிறது அலை வரிசை ஒன்று கூடும்போது…! …. அவ்வளவுதான்” என்று நினைத்துக்கொள்கிறார் ஜெகதீசன்.

ஏழ்மையிலும் மனோகரனும், ரஞ்சிதமும் மனமொத்து வாழ்க்கை நடத்துவதைக் குறிக்கும் வகையில் ‘மனோ-ரஞ்சிதம்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.

One Comment on “ஜெ.பாஸ்கரன்/மனோ-ரஞ்சிதம் – உஷாதீபன்”

Comments are closed.