அனங்கன்/சிறகை விரி

ஒருசின்னப்பறவை தன்பூஞ்சிறகை மெல்ல விரிக்க…
அதுஎண்ணும் எண்ணமோ
நாளை நமக்கென துள்ளிக்குதிக்க…

முல்லை விரிந்த மணமெங்கும் காற்றில் மிதக்க…
எல்லையில்லா மகிழ்ச்சி அதன் உள்ளம் நிறைக்க.

இன்பக் கூத்திடும் அதன் குரலினிலே…
இசை சந்தம் ஒலிக்க…
இன்பம் இன்பமெனப் பாடிடுமே பிறர்உள்ளம் துடிக்க…

தோட்டத்தில் தாவிடும் சிட்டுக்கு பூக்கள் முத்தம்கொடுக்க…
அதன் அலகில்பட்ட தேன்துளி
காற்றில் எங்கும் தெறிக்க…

வாழ்க்கையென்பது இதுபோல தினம் வாழ்ந்து ரசிக்க…
சில கூண்டுக்குள் கிடந்து வெம்பித் தவிக்குது வாழ்க்கை முழுக்க.

உள்ளத்தை திறந்துவைப்பவருக்கு நாளும் இனிக்க…
கவலைக் கழுகு காத்திருக்குது நம் சிறகை முறிக்க…

சிந்தனைச் சிறகை விரித்தெழு நீ சமூகம் செழிக்க..
தாய்மொழியில் சிந்திக்கப்பழகிடு என்றும் மொழியும்
பிழைக்க…

உள்ளத்தில் உள்ளல் உயர்வாக நீ நாளும் நடக்க…
வாழ்ந்துபார் இவன்போல்
யாருமுண்டா…? என வையம்
வியக்க.