- கன்னட மூலம் : ரவீந்திரநாத் ஹெப்பார்
- தமிழில்: இராய செல்லப்பா
எனது கவிதையொன்று
காணாமல் போய்விட்டது
முக்கால்வாசி உடைந்த மேசை மீது
இக்கணம் வரை உயிர்த்திருந்த
என் கவிதையொன்று
இருந்தது இருந்தபடியே மாயமாகிவிட்டது.
மிகவும் நேர்த்தியாக, ஓசைஒலிகளைக் கத்தரித்து,
வேண்டியதைச் சேர்த்தும், எழுதி அழித்தும்
கடைசியில் எஞ்சியிருந்த கொஞ்சூண்டு
கவிதையைப் பார்த்து,
தலை நிமிர்ந்து,
உரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து,
இறுதி வடிவத்தைப் பிரதியெடுக்கப்
புதிய பேனாவைக் கையில் எடுப்பதற்குள்
அது எங்கோ பறந்தோடிவிட்டது.
என் கவிதை என் சுயரூபமே,
என் நிழல் போன்றதே, என்பதைத் தவிர
வேறெந்த அடையாளத்தையும்
அது அமர்ந்த
நாற்காலியின் வண்ணமோ,
ஆடைகளோ, உடலமைப்போ கேட்டால்
சொல்லத் தெரியாது.
செலவானது என் உயிரின்
மூன்று நாள் வாழ்வு
ஆனால் பணம் வேண்டி
எழுதியதில்லை அக்கவிதை
என்ன கொடுத்தாலும் எந்தக் கடையிலும்
கிடைக்காது அது.
என் கவிதையைத் தேடிக்கொடுங்கள் என்று
எந்தக் காவல் நிலையத்தில்
எப்படிப் புகார் கொடுப்பதென்றும்
எனக்குத் தெரியாது
எங்கு வேண்டுமோ போய்த் தொலை என்று
என் கவிதையிடம் நான் சீறவுமில்லை
நிரம்பவும் கற்றவள் நீ, எங்காவது போய்
பிழைத்துக்கொள் என்று அவளைத்
தூண்டவுமில்லை நான்
உரிய காலத்திற்கு முன்பே
பிறந்த குழந்தை போலும் என் கவிதை,
மலர்ந்த கண்களில் தனியொரு திகைப்புடன்
கண்டதுமே உம் கைபற்றி நிற்க முயலும்,
உம் கால்களைத் தொடந்து வரும்.
காணாத என் கவியைத் தேடித் தரும் கண்கள்
உங்களிடம் உண்டு.
உள்ளத்தின் இருளில் விளைந்த அக்கவிதைக்கு
நான் காட்ட வேண்டிய வெளிச்சம்
இன்னும் எவ்வளவோ இருந்தது
திருத்தவேண்டியதும் இன்னும் இருந்தது
பாவம்! இரைச்சல் மிக்க சந்தையில்
யாரோடு தகராறு செய்து
எவ்வளவு தேய்ந்துபோனதோ
காயமுற்றதோ என் கவிதை?
திடீரென்று யாருடனாவது
அமர்ந்துவிட்டதோ?
தன் அடையாளத்தை இழந்து
யாரோடும் சேராமல்
வீதியில் மயங்கி நின்றதோ?
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் –
என் கவிதையில்
கொஞ்சம் பேத்தலும் கொஞ்சம் இரகசியமும்
இருப்பதாகத் தோன்றுகிறது
சின்னக் குழந்தையென்று எண்ணிவிடாதீர்கள்
கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாலும்
சுற்றிலும் இருப்பதை அது அறியும்
இவ்வளவு சொல்கிறேன் என்பதால் என்னைப்
பித்தனென்று எண்ணாதீர்கள்
அனைத்தையும் விட உயர்ந்தது
அக்கவிதை எனக்கு.
உங்களில் யாராவது என் கவிதையைக் கண்டால்
தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்கள்
என் கவலையை அதனிடம் சொல்லிவிடுங்கள்.
கவிதையே,
நீ எங்கிருந்தாலும் உடனே புறப்பட்டு வா,
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்காகக்
காத்திருக்கிறேன் !
என் கவிதைத் தொகுதியின் ஒரு பக்கத்தை
காலியாக விட்டிருக்கிறேன் உனக்காகவே!
-ரவீந்திரநாத் ஹெப்பார். (மங்களூர்)
(குறிப்பு: திரு ஹெப்பார், 11-11-2021 வியாழன் அன்று தன் 64 வயதில் காலமானவர். கார்ப்பொரேஷன் வங்கியின் DGM ஆக ஓய்வு பெற்றவர். என்னுடன் பணியாற்றியவர். கன்னடத்தில் கவிதை, கட்டுரைகள் நிறைய எழுதியுள்ள அவருக்கு அஞ்சலியாக இக்கவிதையை நான் அவசரமாக மொழிபெயர்த்து இன்று (13-11-2021) விருட்சம் கவிதையரங்கில் வழங்கினேன். அதன் செம்மையான வடிவம் இது. -இராய செல்லப்பா)
