ப.மதியழகன்/ராசியில்லா ராஜா

விருட்சம் நடத்தும் 30வது இணையகால கவியரங்கம்
நாள்: 8.4.24 தேதி: திங்கள்

குழந்தையாகவே இருந்திருக்கக்
கூடாதா என அவன் மனம்
ஏங்கியது
அவன் ராஜா வீட்டு
கன்றுக்குட்டி இல்லைதான்
அவனுக்கு மனிதர்களை
எடைபோடத் தெரியாது
அநியாயத்துக்கு நேர்மையாய்
இருந்தால் பிழைப்பது எப்படி
நாய்க்கு வாக்கப்பட்டால்
குரைத்துதானே ஆகவேண்டும்
வைகுண்டத்தில் கூட
வி.ஐ.பிக்கு மவுசுதான்
இவன் அரிச்சந்திரனுக்கு
பக்கத்து வீடு
மனைவி இவனை
சுத்த அசடு என்பாள்
கல்யாண வீட்டில்
மாப்பிள்ளையாகவும்
சாவு வீட்டில்
பிணமாகவும் இருப்பதற்கு
சூதனம் வேண்டும்
ராஜாவுக்கம் மந்திரிக்கும் தான்
இங்கே ராஜஉபசாரம்
வாழ்க்கை முழுவதும்
அவன் அழுதுகொண்டிருந்தான்
உயிர் பிரிந்தவுடன்
வானம் இருண்டு
பேரிரைச்சலோடு பெய்தது
பேய் மழை
வாழும் போது
வாய்க்கரிசி போடுவதும்
சடலத்தின் மீது
அட்சதை தூவுவதும் தான்
கடவுளின் லீலையோ?