என் நண்பன் மகேஷூக்கு பல தளங்களில் நண்பர்கள்.

கணேஷ்ராமன்

என் நண்பன் மகேஷூக்கு பல தளங்களில் நண்பர்கள். அவர்களில் ஒருவர் காமேஸ்வர சர்மா. குள்ளமாக, முன் வழுக்கையுடன், கதர் வேட்டி, கதர் அரை ஜிப்பா, லேசாக அழுக்கும் பலநாள் தோயலுமாக இருக்கும். வேட்டியை மடித்துக் கட்டி இருப்பார். அல்லது, மடிக்கத் தோதாக இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு வருவார். வேகமாக சகல விஷயங்களும் பேசுவார்.
அவர் மகேஷைக் குறிவைக்கக் காரணம் இருந்தது. மகேஷ் வீட்டு மாடிப்படியின் கீழே கொஞ்சம் இடம் இருந்தது. அதில் புத்தகங்களை நிரப்ப இடம் கொடுக்க மனதும் இருந்தது.

சர்மாஜி ஒரு நாடோடியாகவே திரிந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏதோ அரசு உத்யோகத்தில் இருந்தவர், காரணமில்லாமல் அதை உதறி விட்டு, ஊர் ஊராகச் சுற்றி பழைய புத்தகங்கள் வாங்குவார். இன்ன புத்தகம் என்றில்லை. அவருக்கு என்று வீடு வாசல் கிடையாது. தெருத்தெருவாக நண்பர்கள். அதில் சில நல்ல ஆன்மாக்கள் மனதிலும், சில வீட்டிலும் இடம் கொடுத்து இருந்தன. காமேஸ்வர சர்மா எங்கே யார் வீட்டில் என்ன புத்தகம் வைத்திருந்தோம் என்றெல்லாம் கணக்கு வைத்திருக்க மாட்டார். என் கண்ணெதிரே ஒருமுறை கைவல்ய நவநீதம் புத்தகத்தை மகேஷ் வீட்டு புத்தகக் களஞ்சியத்தில் ஞாபகமாகத் தேடிவிட்டு, பின் தனஞ்செயன் வீட்டில் வைத்திருப்பதாகக் கூறிச் சென்றார். அதெல்லாம் அவர் படிப்பது இல்லை. யாரோ எதையோ எப்பவோ கேட்டிருந்தாலும், மெனக்கெட்டு கர்ம சிரத்தையாகத் தேடி எடுத்துப் போவார். சில நேரங்களில் புத்தங்கள் நிறைய சேர்ந்து, வைக்க இடமில்லாமல் புலம்புவார்.

இருபது வருடங்களுக்கு முன், இம்மாதிரி புத்தகத்தைத் தேட போனவர், ஒரு நண்பர் வீட்டில், மலர்ந்த முகத்தோடு இறந்து போயிருந்தார். நண்பர்களால் அடக்கம் செய்யப் பட்டார்.

அடுத்த முறை மகேஷைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போன வழியில், ஒரு பழைய பேப்பர் கடையில், சர்மாஜி போன்ற தோற்றத்தில் ஒருவர் பேரம் பேசிக் கொண்டு இருந்தார். சர்மாஜியாக இருந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பே சந்தோஷமாக இருந்தது. அதேபோல் வேட்டியை மடித்துக் கொண்டு, பேரம் முடிந்து, கடைக்காரன் பணம் எண்ணிக் கொடுக்க, உல்லாசமாக வாங்கிச் சென்ற மனிதரை மறுபடியும் பார்க்கப் பிடிக்கவில்லை.

நல்லவேளையாக மகேஷ் வீட்டில் இருந்தான். நீண்ட நேரம் அளவளாவி விட்டு, வெளியே வரும்போது, சரேலென்று மாடிப்படியின் கீழே பார்வையைச் செலுத்தினேன். தூக்கி வாரிப் போட்டது. அழுந்தத் துடைத்தது போலிருந்தது.
“?”
“டேய்.. சொல்ல மறந்துட்டேன்… சர்மாஜியை அச்சு அசலா நகல் எடுத்த மாதிரி, இன்னோரு ஆள் வந்தார்டா.. சர்மாஜிக்கு தூரத்து சொந்தமாம்.. லைப்ரரி வைக்கப் போறாராம். சர்மாஜி‌ எங்கல்லாம் புக்ஸ் கொடுத்திருந்தாரோ, விஜாரிச்சுண்டு வந்து, அள்ளிப் போட்டு, எடுத்துண்டு போயிட்டார். நல்ல மனுஷன்” என்று முறுவலித்தான்.
நானும் பதிலுக்கு புன்னகைத்தேன், “ஆமாம்.. நல்ல மனுஷன் தான்”.