சசிகலா விஸ்வநாதன்/ நாடே என் வீடே

சிலருக்கு வீடே
அவர் நாடு.
வீட்டின் உயர்விற்காக,
ஓடாய் உழைப்பார்.
மாயாமல் மாய்ந்து,
பாய்ந்து,தேய்ந்து,
பணி செய்வார்.
வீடே உலகென்று
உவந்து உன்னி
மேடேற்றுவர்;
தம் வீட்டை.
அவர் என் தந்தை போன்றோர்.

மற்றும் சிலருக்கு
நாடே,, அவர் வீடு.
தன் வீட்டில் அடுப்பில்
உலை வைக்கும் முன்
ஊரார் வீட்டுக் கவலை
அவரைப் பற்றும்
நாட்டின் நலன் ஒன்றே
கருத்தில் கொண்டு
மக்கள் சேவையே
மகேசன் சேவை, என
நாட்டிற்கே தம்மை
அறமாய் அற்பணிப்பர்.
பெருந்தலைவர் போல்.

இன்னும் சிலர் உண்டு:
அவர் தன்மை பகிர்வேன் இங்கு;

அவர் மிக உன்னதமான
கோட்பாடு கொண்டவர்.
நாடே, வீடு!
வீடே நாடு!
நாட்டில் நாடி நலம் புரிதல்
அத்தனையும் வீட்டிற்கே!
எனும் கோட்பாடு உடையவர்.

நாட்டில் ஓடித் தேடி
நாட்டமாய் பொருள் சேர்ப்பார்;
வீட்டின் உயர்விற்கே!

எட்டும் வரை எட்டியும்;
எட்டாக்கை பொருள்
அனைத்தும்
எட்டியே எட்டிடுவார்.

எட்டு தலைமுறைக்கும்
கட்டித் தங்கம் கட்டி வைப்பார்.

எத்தொழிலும் நம் தொழில் என்றே,
எத்தராய், போட்டியின்றி எதிலும்
கடைக்கால் நாட்டிடுவார்.

ஏட்டிக்குப் போட்டியாய் எதிலும்
அவர் எதிரும் புதிருமாய் நிற்பார்.

காணப் பொருளில்லை;
காட்ட காசில்லை;
புதையல்காக்கும் பூதம் போல் அவர்.

கையும் களவுமாய் பிடிபட;
கூறாமல் அயல் தேசம் சென்று,
கூசாமல் சீமானாய் வாழ்ந்திருப்பர்.

சட்டச் சிக்கலை
சரியாய் பிரித்து
ஊடும் பாவுமாய்
ஓடிப்பிடித்து ஆட்டம் காட்டுவர்.

இவர் ஆடும் ஆட்டத்தில் நாம் என்றும் கூத்தில்
நடுவே புகும் கோமாளி என்றே அறிக.

7-4-2024
https://daily.navinavirutcham.in/?p=22113
https://daily.navinavirutcham.in/?p=22115